திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில், பெண்களைப் போலவே வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற வினோத திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு ஆண்கள் தத்ரூபமாக வேடமிட்டு பலரையும் கவர்ந்தனர்.
இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில், ஏராளமான கோயில்கள் உள்ளன. பல சடங்குகள், பிரத்யேக ஆசார நடைமுறைகள் அங்கு கடைபிடிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறன. அந்த வகையில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுளக்கரை ஸ்ரீதேவி ஆலயத்தில், தலைமுறை தலைமுறையாக சமய விளக்கு என்னும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்கு வீற்றிருக்கு பகவதி அம்மன், கொட்டம்குளக்கரா தேவி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். சுயம்புவாக தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலில், தொடக்கத்தில் பெண்கள் மட்டுமே வழிபட்டு வந்துள்ளனர். எனினும் அம்மனின் அருளை பெற, ஆண்களும் பெண்களை போலவே வேடமிட்டு வழிபாடு செய்யும் நடைமுறை பின்னாளில் தொடங்கியதாக சொல்கிறார்கள்.
ஆண்டுதோறும் மார்ச் மாத கடைசியில் சமய விளக்கு பூஜை தொடங்குகிறது. 19 நாட்கள் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. கடைசி இரண்டு நாட்களில் இரவு முழுவதும் சமய விளக்கு திருவிழா, அம்மன் ஊர்வலம் ஆகியவை நடக்கின்றன.
அந்த வகையில், இந்தாண்டுக்கான கோயில் திருவிழா இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் 40,000க்கும் மேற்பட்ட ஆண்கள் கோயிலுக்கு வந்து, பெண்கள் போல் வேடமணிந்து வழிபட்டனர். இதற்கென, அலங்கார கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, ஆண்கள் வேடமணியத் தொடங்கினர். பெண்கள் போல பட்டுப்புடவை, தாவணி அணிந்து, புருவத்தை அழகூட்டி, ஒப்பனைகள் செய்து கொண்டு, கையில் விளக்கு ஏந்திச் சென்று வழிபட்டனர்.
ஆண்களுக்கு ஒப்பனை செய்வதற்காகவே விதவிதமான ஆடைகள், அலங்காரப் பொருட்களுடன் ஏராளமான ஒப்பனை கலைஞர்களும் கோயில் பகுதிக்கு வந்திருந்தனர். ஒப்பனைக்கு பிறகு, தமது மனைவிக்கே தன்னை அடையாளம் தெரியாதபடி இக்கலைஞர்கள், ஆண்களை உருமாற்றி இருந்தனர். இந்த திருவிழா தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.