இந்த வாரத்தில் இரசித்துச் சிரித்துப் பார்த்த படம் 'லப்பர் பந்து'. சர்வதேச திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் போதெல்லாம் தமிழில் இப்படியான படங்கள் வராதா என ஏங்கியதுண்டு.
சர்வதேசத் திரைப்படவிழாக்களுக்கு வருகின்ற படங்கள் குறித்து, தமிழ்த்தயாரிப்பாளர்களுக்கும், இரசிகர்களுக்கும், சில வேறுபாடான எண்ணங்கள் உள்ளதை அறிவோம். ஆனால் ' லப்பர் பந்து' ஏதாயினும் ஒரு திரைப்படவிழாவில் கலந்து கொண்டு கவனம் பெற்றிருக்க வேண்டிய படம்.
இந்தியத் திரையுலகில் இருந்து வெளிவந்த 'லகான்' எவ்வாறு உலகக் கவனம் பெற்றிருந்ததோ அதற்கு இணையான கவனத்தைப் பெற்றிருக்கக் கூடிய சகல அம்சங்களும் இந்தத் திரைப்படத்தில் உள்ளது.
லப்பர் பந்தின் ஜீவன் எதுவென்றால் அதன் திரைக்கதை. அந்தத் திரைக்கதைக்குள் ஒரு தமிழகத்தின் கிராமம் சீவிக்கிறது. மிக எளிமையான மக்கள் அதில் வாழ்கின்றார்கள். அந்த வாழ்க்கையில், காதல், கண்ணியம், கோபம், ஈகோ, சாதியம், சண்டை, எல்லாவற்றுடனும் அவர்கள் நேசிக்கின்ற ஒரு 'லப்பர் பந்து 'ம், விளையாட்டும் இருக்கிறது. இவை எல்லாவற்றுடனும், பெண்ணியத்தையும், சாதியத்தையும், கூச்சலும் குழப்பமுமின்றிக் கண்ணியமாகவும், காதலாகவும், மாறுதலாகவும் கதை சொல்லியிருக்கின்றார் இயக்குனர் தமிழரசன்.
தமிழரசன் தெரிவு செய்த கலைஞர்கள், அவரது கதை மாந்தர்களாக வாழ்ந்து காட்டுகையில், அன்பும், அழுகையும், காதலும், கோபமும், சிரிப்பும், சிலிர்ப்பும் என உணர்வுகள் வெளிப்பட்டுத் திரையில் காட்சிகளாக விரிகின்றன.
பரபரப்பான காட்சிகள் ஏதுமில்லை. ஆனால் விறுவிறுப்பாகப் படம் நகர்கிறது. தொய்வில்லை ஆனால் பல காட்சிகள் நெஞ்சைத் தொட்டுவிடுகின்றன. குறிப்பாக பெண்களை அழுதுவடியும் பாத்திரங்களாக வடிக்காமல், நம்பிக்கைப் பெண்களாக உருவாக்கியிருப்பதும், அதற்கு ஒவ்வொரு கலைஞர்களும் உயிர் கொடுத்திருப்பது மிகச் சிறப்பு.
இன்னும் நிறையவே சொல்லலாம். ஆனாலும் நிறைவாகச் சொல்ல ஒரு குறை உண்டு. தயாரிப்பாளர்களும், இயக்குனரும், உலகத்திரைப்படமாக வலம் வந்திருக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை ஒரு உள்ளூர் வணிகச் சினிமாவாக ஆக்கிவிட்டார்களோ என்பதே நம் மனக்குறை.
-4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்