பெண்ணிய கொள்கைகளை அழவைக்காமல் பேசிக்கொண்டு அந்ந்ந்தகாலத்தில் பெண் ஒருத்தி இருந்திருந்தால் இப்படிதான் இருந்திருப்பாள் என எதார்த்தாகமாக படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'ரகு தாத்தா'
முன்னோட்டம் பார்க்கும்போதே படத்தை காணும் ஆவல் குடிகொண்டது. ஒரு நாவல் ஒன்றை கையிலெடுத்து வாசிக்கும்போது எப்படி நம் கற்பனையில் காட்சிகள் வந்தோடிமறைந்திருக்குமோ அதே அனுபவத்தை படத்தை பார்ப்பதில் தந்தது எனலாம். ஆரம்ப காட்சியிலே முற்போக்கு சிந்தனையை பேசியபடி அதிரடியாக அறிமுகமாகும் கதாநாயகி நடுவில் தயங்கினாலும் இறுதியில் என்னநடந்தாலும் பருவாயில்லை என தன் கொள்கைகளை மாற்றாமல் துணிவது அந்தகாலத்திலிருந்தே போராட்டம்தான்.
பட்டப்படிப்பை முடித்துவிட்டு வங்கியில் பணிபுரியும் கயல்விழிக்கு வீட்டில் திருமண நெருக்கடி கொடுக்கிறார். பிடிவாதமாக இருந்தாலும் தாத்தாவின் உடல் நிலையை காரணம் சாட்டி சம்மதிக்கவைக்கிறார்கள். ஆனால் தன்னோடு நெருங்கி பழகும் கதாநாயனையே வாழ்க்கை துணையாக கயல் தெரிவு செய்ய ஆயத்தம் ஆரம்பமாகிறது. எனினும் இயல்பில் ஆணதிக்கவாதியான நாயகன் கயலுக்காக வெளியே வேஷம் போட அதை கண்டுபிடிக்கும் கயல் திருமண ஏற்பாட்டை தாத்தாவின் மனம் நோகா வண்ணம் நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இறுதியில் கயல் திருமணம் தடை பட்டதா? இல்லையா என்பதே கதை.
வங்கி ஊழியரானாலும் பத்திரிகையில் சிறுகதை எழுதும் எழுத்தாளராகவும், ஹிந்தி திணிப்பை தடுக்கும் போராளியாகவும்; தாத்தாவின் பாசாத்தால் பரிதாபகாரியாகவும் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தில் முன்னனிதான். அவருடன் தேவதர்சினி இணையும் நகைச்சுவை காட்சிகள்; இதனிடையே ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடி அவ்வூரின் பாரட்டை பெற்றுவிட்டு பதவி உயர்விற்காக யாருக்கும் தெரியாமால் ஹிந்தி பரீட்சை எழுத முயற்சிப்பதெல்லாம் சுவாரஸ்யமான காட்சிகள்.
ஆனாலும் படத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறதே என்று யோசிக்கத் தோன்றினால், நேரிழையாகப் போனாலும், நேர்த்தியான திரைக்கதையோட்டமும், அதற்கான வசனக் கோப்பும் குறையாகவுள்ளது. அதனை இசைக் கோப்பு இன்னமும் அதிகமாக்கிறது எனலாம். இவற்றில் கவனம் செலுத்தியிருந்தால் 'ரகுதாத்தா' இன்னும் சிறந்திருப்பார்.
- 4தமிழ்மீடியாவிற்காக: ஹரனி