free website hit counter

அமரன் ( திரை விமர்சனம் )

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2019ல் லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் பார்வையாளர் விருது பெற்ற திரைப்படம் Camille . Camille Lepage எனும் 26 வயது போர்க்கள  பெண் புகைப்பட நிருபர் ஒருவரின், வாழக்கை குறிப்பை  மையமாக வைத்து, பிரெஞ் இயக்குனர் Boris Lojkine அப்படத்தை இயக்கியிருப்பார்.

 படத்தின் முடிவு முன்னமே தெரிந்ததுதான். அந்த முடிவை பார்வையாளர்கள் எதிர்பாராத வகையில், ஒரு துயர்கவிதை போல முடித்திருப்பார். படம் முடிந்தபின்னும், அந்த திறந்தவெளி அரங்கத்திலிருந்து சுமார் 8000 பார்வையாளர்களும் கைதட்ட மறுந்து இறுகிப் போயிருந்தனர்.  இந்தப்படத்திற்காக சுமார் 6 வருடங்கள் உழைத்த இயக்குனர் ஆடிப்போய்விட்டார். 2 நாட்களின் பின் விருது மேடையில் அவருக்கு விருது வழங்கும்போது  12 ஆயிரம் பேர் எழுந்து நின்று கைதட்டி ஆர்பரித்து, மொத்தமாகத் தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் திரைபடப் பிரதிக்காக   சுமார் நான்கு வருடங்கள் உழைத்ததாக இசைவெளியீட்டின் போது கூறியிருப்பார். அந்த உழைப்பு, திரையில் கண்ணியம் சேர்த்திருக்கிறது. ஒரு தேசத்தின் பெரும் சிக்கலான கதைக்களத்தில் நுட்பமாகத் திரையாடல் செய்திருக்கின்றார். அவரது நான்கு வருடத்துக்கு மேலான உழைப்பு வீண்போகவில்லை.

இந்திய இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் குறிப்பினை மையமாக வைத்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதை இயக்கத்தில், சிவகாரத்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் அமரன். நீண்டநாட்களுக்கு முன்னர் வெளிவந்த  ஒரு தமிழ்படத்தின் இந்தத் தலைப்பை, இக்கதையின் பொருத்தம் கருதி , முன்னவர்களிடமிருந்து உரிமம் பெற்று இப்படத்திற்குச் சூடியிருக்கின்றார்கள். தலைப்புக்கு ஏற்ற வகையிலான கதையாகவே இந்த உண்மை வீரனின் கதை உள்ளது.  

அமரன் என்றால் அழிவற்றவன் எனப் பொருள் சொல்வார்கள். மேஜர் முகுந் வரதராஜனின் வீரத்தின் தடத்திற்கும் சரி, அவரின் காதல் வாழ்விற்கும் சரி, அமரன் எனும் தலைப்புக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

படத்தின் முதல் நாயகன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான். பொருத்தமான இசைக்கோப்பு.  அதற்கடுத்த ஒளிப்பதிவு இயக்குனர் சாய். அவருக்கு இது முதல்படம் என்று சொல்கின்றார்கள். கமெரா காஷ்மீரின் அழகையும், பயத்தையும், ஒன்றாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறார். இவர்கள் இருவரது பணிக்கும் ஈடுகொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர்  கலைவண்ணன். இந்தக் கூட்டணியுடனும், முகுந் வரதராஜனின் கதையுடனும், களமிறங்கிய இயக்குனர்  ராஜ்குமார் பெரியசாமியின் எண்ணத்துக்கு, தங்கள் நடிப்பால்  உயிர்கொடுத்திருக்கிறார்கள், நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை சாய்பல்லவியும்.

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த எல்லாவற்றிலும் மிகச் சிறப்பான நடிப்பு இதுவெனலாம். அவரது வழமையான எந்த ஒரு உடல்மொழியும் திரையில் காண முடியாதவாறு, இராணுவ வீரனாகவே வாழ்ந்திருக்கிறார்.  மேஜர் முகுந் வரதராஜனின் மனைவி, இந்து ரேபேக்கா வர்கீஸ் அவர்களின் பார்வையில் சொல்லப்படும் இந்தக் கதையின் நாயகியாக அபாரமான நடிப்பில் 
சாய்பல்லவி. பல இடங்களில் அவரது கண்களும், முகமும், மௌனமாக உணர்வுகளைப் பார்வையாளர்களிடத்தில் பதியமிடுகின்றன. முகுந்தின் இறப்புச் செய்தி கேட்ட கணத்தில் அவர் காட்டும் பரிதவிப்பும், முகுந்தின் உடைமைகளை பெற்றுக் கொள்ளும் தருணத்தில் காட்டும் இறுக்கமும், எழுத்திலோ , சொல்லிலோ, அடக்கமுடியாத உணர்வுப் பரிமாற்றம். சாய்பல்லவிக்கு தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்படலாம்.

காதலும், வீரமும் ,  சொல்லும் வகையில் 'அமரன்' காவியமாகலாம்.
                                                                                                                                                    - 4 தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction