39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் புதிய பிரிதேச பிரிவில் காட்சிப்படுத்தபட்டிருக்கும் இலங்கைப் படங்களின் வரிசையில், சிங்களமொழிப்படமான மயில் புலம்பல் (Peacock Lament) முக்கியமான ஒரு சமூகப்பிரச்சனை குறித்துப் பேசுகின்றது.
இலங்கையில் குறிப்பிடத்தக்க சிங்களமொழி இயக்குனர்களில் ஒருவர் சஞ்சீவ புஷ்பகுமார. இவரின் இயக்கத்தில் உருவான நான்காவது திரைப்படம் மயில் புலம்பல் (Peacock Lament). தெற்கிலிருந்து மேற்கு நோக்கி குழந்தைகள் கடத்தப்படுவதைப் பற்றிய பிரச்சினையை க் கருக்களமாகக் கொண்ட இத்திரைப்படம், 2022 ஆம் ஆண்டு டோக்கியோ திரைப்படவிழாவில் வெற்றி பெற்றது.
சிங்களக் கிராம மக்களின் வளமற்ற பொருளாதாரநிலையைச் சூழலில், மேற்குலகிற்கு தத்துக் கொடுக்கப்படும் குழந்தைகள் குறித்துப் பேசுகின்றது இதன் கதைக்களம். ஒரு உதவிக்கரம் போல் தெரியும் இந்தத் தத்துக்கொடுப்புக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒரு மனித உயிர் வியாபாரம் பற்றித், தெளிவாக விளக்கிச் சொல்லும் கதை. வறிய மக்கள் எவ்வாறு இந்தப் பெருஞ்சுழலுக்குள் சிக்கிக் கொள்கின்றார்கள், இது எவ்வாறு வியாபார வடிவம் பெறுகிறது என்பது பற்றிப் படிமுறையாகவும் தெளிவாகவும் பார்வையாளர்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இலங்கையின் தலைநகரத்தில் உயர்ந்து நிற்கும் தாமரைக் கோபுரமும், அதே நகரில், கட்டிமுடிக்கப்படாத கட்டிடத் தொகுதியில் தஞ்சம் புகும் வீடற்ற மக்களும் என காட்சிச் சட்டகங்கள் வழி கதைசொல்லி நகரும் இக்கதை நாயகனின் வறுமைச் சூழல், எவ்வாறு அவனை ஒரு பெரும் சமூகக் குற்றவாளியாக்கின்றது என்பதையும், இவ்வாறான நபர்கள் மேல் நீளம் சட்டத்தின் கரங்கள், குழந்தைக் கடத்தலை வியாபாரமாகச் செய்யும் பெருமனிதர்களை எவ்வாறு தப்பிக்க விடுகிறது என்பதையும் சொல்லியிருக்கின்றார். அதேவேளை பாவட்ட ஏழைமக்களிடத்தில் இயல்பாகக் காணப்படும் இரக்க குணம், குழந்தைகளைப் பிரியும் பிரிவுத் துயர்க்கொடுமை என ஒவ்வொரு விடயத்தையும், இயல்பாகப் பதிவு செய்யும் காட்சிகள் ஆழமானவை. குழந்தைகளைப் பிரியும் தாய்மார்களின் துயரத்தினையையும், வலியையும், காட்சிச் சட்டகங்களில் பிரதிபலிக்கும் கலைஞர்களும் அவற்றுக்கான அழுத்தமான பங்களிப்புக்களைத் தருகின்றார்கள்.
இது இலங்கையைக் கதைக்களமாகக் கொண்ட படமாயினும், ஆசிய , ஆபிரிக்க நாடுகளின் வறுமைச்சூழலை சாதகமாக்கி நடைபெறும் மனித வியாபாரத்தில், மேற்குலகத்தின் பங்கு அல்லது தாக்கம் என்பதை முறையாகப் பதிவு செய்திருக்கிறது. இலங்கையின் தேசியப்பறவை மயில். இலங்கையின் சமூகத்துயர்களில் ஒன்றுக்கு 'மயில் புலம்பல்' எனத் தலைப்பிட்டு வந்திருப்பது மிகப் பொருத்தமானது. பார்க்க வேண்டிய ஒரு படம் !
பிற்குறிப்பு : இத் திரைப்படவிழாவில் இன்று பகல் 1.00 மணிக்கு இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் வலிந்து காணமல் ஆக்கபட்ட 100,000 பேர்களைக் குறித்த, ஆவணப் புனைகதையாக சிங்கள மொழி இயக்குனர் ராஜி சமரசிங்கே (Rajee Samarasinghe ) அவர்களின் இயக்கத்தில் உருவான Your Touch Makes Others Invisible திரையிடப்படுகின்றது. அதேபோல் தமிழ் இயக்குனர் விசாகே சந்திரசேகரம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து, 2023 ரோட்டர்டாம் திரைப்படவிழாவில் சிறப்பு ஜூரி விருது வென்ற மணல் ( Sand ) திரைப்படம் பிற்பகல் 3.00 மணிக்குத் திரையிடப்படுகின்றது. இந்த இரு படங்களும் அவசியம் பார்க்க வேண்டிய படங்கள்.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்