39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் நியூ டெரிட்டரி பிரிவில் நேற்று சில தமிழ்படங்களைப் பார்க்க முடிந்தது. இவற்றில் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள், சிவில் யுத்த தாக்கம் என்பன தொடர்பான சில படங்களையும் பார்க்க முடிந்தது.
அவற்றில் முக்கியமான படங்கள் குறித்த சிறிய பார்வை இது. இப்படங்கள் குறித்து மேலும் விரிவாக எழுதவும் உரையாடப்படவும் வேண்டும். ஆனால் இப்படங்களை சுவிஸ் வாழ் தமிழ மக்கள் காண்பதற்கான மேலும் ஒரு காட்சிப்படுத்தல் இருப்பதனால், அதற்கு முன்னதாக ஒரு அறிமுகத்தை இப்படங்கள் குறித்துச் சுருக்கமாகத் தரவேண்டும் என்பதற்கான முன்னோட்டமே அன்றி இது இப்படங்கள் குறித்த முழுமையான அல்லது விரிவான பார்வையன்று.
வெந்து தணிந்தது காடு (Dark Days of Heaven - சொர்க்கத்தின் இருண்ட நாட்கள் )
இயக்குனர் மதிசுதாவின் இயக்கத்தில் 2023ல் வெளியாகிய இத் திரைப்படத்தை, 22.03.25 சனிக்கிழமை சுவிற்சர்லாந்தில் முதற்காட்சியாகத் திரையில் காணமுடிந்தது. படம் வெளியாகியி பின் படம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் உரையாடல்களும் இருந்தன. அதுவே இப்படத்தினை காணவேண்டும் எனும் ஆவலைத் தூண்டியும் இருந்தது.
இப்படத்தினைப் பார்க்கும் போது முதலில் இரண்டு விடயங்களுக்காகப் பாராட்டத் தோன்றியது. முதலாவது ஒரு சினிமாத் தயாரிப்புக்கான எந்தவித உபகரணவசதியுமற்ற சூழலில், தன்னிடமிருந்த கைத் தொலிபேசியினூடு ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்கியிருப்பது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது , ஒரு கட்டத்தின் பின் அந்தத் தொழில்நுடபத்தை மறந்து, படத்துடன் இயல்பாக ஒன்றிவிடமுடிகிறது. அந்த ஒன்றுதலைத் திரைகதையமைப்பும், அதற்கேற்ற காட்சிச் சட்டகங்களும் உறுத்தலின்றித் தருகின்றன. இரண்டாவது " போர் ஒரு பிசாசு. போர் வேண்டாம் " என வலிந்து சொல்லாமல், வலிகளுடன் சொல்லியிருப்பது.
இறுதியுத்தம் நடந்த மண்ணிலிலேயே காட்சிப்படுத்தப்பட்ட இத் திரைப் படத்தில் பல கலைஞர்களின் முகபாவங்கள் போரின் வலியை ஆழமாகப் பதிவு செய்கின்றன. குறிப்பாக வயது முதிர்ந்த தாயாக திரையில் வாழ்ந்திருக்கும் கலைஞர் பார்வதி சிவபாதம் அவர்கள் ' போர் வேண்டாம் ' எனச் சொல்கையில் , அந்தக் குரல் ஒரு ஏழைச் சிங்களத்தாயின் குரலாக, காசாவில் கதறும் ஒரு தாயின் குரலாக, இஸ்ரேலில் அழுகின்ற ஒரு பெண்ணின் குரலாக, உக்ரைனில் ஒப்பாரி வைக்கின்ற ஒரு தாயின் குரலாக கேட்க முடிகிறது. போரின் வடுக்குள்ளும், வலிக்குள்ளும் வாழ்ந்தவர்கள் அவர்கள். அவர்களால்தான் அதனை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்கின்றார்கள். அதை அவர்கள் சரியாகச் செய்திருக்கின்றார்கள். அவசியம் திரையில் காண வேண்டிய படம். நாளை திங்கட்கிழமை இரவு (24.03.25 - 18.45 ) மறுகாட்சி உண்டு.
நிசப்த நடனம் ( Soundless Dance )
இயக்குனர் பிரதீபன் இரவீந்திரனின் இயக்கத்தில் 2019ல் வெளியான இத் திரைப்படமும், இலங்கையின் யுத்தகால வலிகளைப் பேசுகின்றது. அந்தக் களத்தின் காட்சிகளோடு, புலம்பெயர்ந்த தேசத்தில் வாழுகின்றவர்களின் மனநிலைத் தாக்க வலிகளைப் பேசுகின்றது. மிகச் சிறப்பான காட்சியமைப்புக்களுடன் உளவியல் சார்ந்தும் நடைமுறை சார்ந்தும், இந்தத்திரைக்கதை நகர்கிறது.
போர் நடக்கும் சூழலில் மட்டுமல்ல அதற்கப்பால் எல்லைகள்கள் தாண்டி, நாடுகள் கடந்தும் அதன் வலிகள் மனிதர்களைப் பாதிக்கின்றது என்பதை ஆழமாகச் சொல்லியிருக்கின்றது. பிரதீபனின் உளவியல் சார்ந்த திரைக்கதைக்கு வலுச் சேர்க்கின்றார் சிவா எனும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பற்றிக் யோகராஜன். ஒரு தேர்த்த நாடகக் கலைஞனான அவரது முகபாவங்களும் உடல்மொழியும் காத்திரமான பங்களிப்பை திரைப்படத்திற்கு வழங்குகின்றது.
இத்திரைப்படமும் ஒரு வகையில், போர் சூழலுக்கு வெளியே நின்று, போரின் வலி சொல்லிப் போர் வேண்டாம் என்பதை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், வலிக்களில் இருந்து விடுபடுதலையும் சொல்லி நிறைவடைகிறது. இப்படத்திற்கான மறு காட்சி; 26.03.25 புதன்கிழமை 19.45 மணிக்கு. முடிந்தவர்கள் அவசியம் பாருங்கள்.
இத்திரைப்படவிழாவில் இலங்கை சார்ந்த நான்கு குறும்படங்கள் இடம்பெறுகின்றன.
Le Gap - இடைவெளி ; கீர்திகன் சிவகுமார் ,
Crisis - சோபன் வேல்ராஜா,
Island Story - பவனீதா லோகநாதன்,
Anushan - விபீர்சன் ஞானதீபன்,
இதில் பவனீதா லோகநாதனின் Island Story ஒரு அனிமேஷன் படம். மலையக மக்கள் சார்ந்த பிரச்சனையுடன், உள் நாட்டு யுத்தம் தொடர்பான விடயங்களையும், கார்ட்டூன் பாத்திரங்களாக உருவகப்படுத்தி கதை சொல்லியிருக்கின்றார். ஒரு குறும்படத்திற்குள் இரு பிரச்சனைகளைக் கொணர்வதிலும், அவற்றை இயக்குனர் எண்ணிய வண்ணம் முழுமைப்படுத்த முடியாவிடினும், மலையக மக்களது ஏக்கத்தின், இயலாமையின் குரலை உரக்கச் சொல்ல முயல்கிறது. உண்மையில் மலைய மக்களின் பிரச்சனைகளும், கதைகளும் ஏராளமுள்ளன. அவை பேசப்படவேண்டும். வெளியுலகம் அவர்களைக் கண்டு கொள்ள வேண்டும் என்பது ஒரு பெண்ணின் குரலாக ஒலிக்கத் தொடங்கிருப்பது கொண்டாடப்பட வேண்டியது.
கீர்திகன் சிவகுமாரின் Le Gap புலம்பெயர் தேசத்தின் இளையதலைமுறை அனுபவ வெளிப்பாட்டினூடாக காணப்படும் இடைவெளியைப் பெசுகின்றது. இது குறித்து ஏற்கனவே நாம் எழுதிய பதிவுகள் பின்னிணைப்பாகவுள்ளன.
59வது சொலதூர்ன் திரைப்பட விழாவில் நம்மவர் படம் 'Le Gap'
சோபன் வேல்ராஜாவின் Crisis பொருளாதார நெருக்கடியும் பஞ்சமும், ஒரு சராசரியான குடும்பஸ்தனை குற்றவாளியாக்கிறது. ஆனால் அதனை ஏற்படுத்துகின்ற அரசும், அரசியலாளர்களும் தப்பித்துக் கொள்கின்றார்கள் என்பதைச் சொல்கிறது.
விபீர்சன் ஞானதீபனின் Anushan புலம்பெயர் தேசத்தில் நம்மவர்களது முதலாது தலைமுறைக்கும் இரண்டாவது தலைமுறைக்கும் இடையிலான புரிதல்கள் பற்றியும், வாழ்வியல் பற்றியும் பேசுகின்றது.
இந்த நான்கு குறும்படங்களுமே இதன் படைப்பாளிகளுக்களது திறமைகளின் வருகைக்கான கட்டியங் கூறல் எனலாம். இவர்களுக்கான ஆதரவினை நல்கினால், நல்ல பல படைப்புளை எங்கள் நிலத்தின் கலைவடிவங்களாகக் காண முடியும் எனும் நம்பிக்கையைத் தருகின்றார்கள்.
இந்தக் குறும்படத் தொகுப்பிலுள்ள நான்கு படங்களின் மறுகாட்சி, இன்று 23.03.25 ஞாயிறு மாலை 18.00 மணிக்கு இருக்கின்றது.
இது தவிர, இந்தப் படைப்பாளிகளுடனான கலந்துரையாடலும் இன்று மாலை 6.00 மணிக்கு இருக்கின்றது.
- 4தமிழ்மீடியாவிற்காக : ஃப்ரிபோர்க்கிலிருந்து : மலைநாடான்