சுவிற்சர்லாந்தின் பிரெஞ்பகுதியிலமைந்துள்ள நியோன் நகரில் வருடந்தோறும் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச ஆவணத் திரைப்பட விழா Visions du Réel .
பத்து நாட்கள் ஆவணத் திரைப்படங்களின் திரையிடலுக்கு மிகப்பெரிய தளம் அமைத்துக் கொடுக்கும், இத் திரைப்படவிழாவின் 56வது பதிப்பு, இன்று 04.04.25 முதல், 13.04.25 வரை,நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு 57 நாடுகளைச் சேர்ந்த 154 படங்கள் திரையிடப்படவுள்ளன, இதில் 129 புதிய படங்கள், 88 உலக பிரீமியர்ஸ் மற்றும் 12 சர்வதேச பிரீமியர்ஸ் ஆகியவை அடங்கும். இவை தவிர பல்வேறு பயிற்சிப்பட்டறைகள், திரைப்படக்கலைஞர்களது சந்திப்புக்கள், மற்றும் கலந்துரையாடல்கள் எனக் கோலகாலம் காண்கிறது நியோன் நகர்.
இன்றைய விழாவின் தொடக்கப்படமாக, சுவிற்சர்லாந்து தயாரிப்பான இயக்குனர் கிறிஸ்டியன் ப்ரேய் (Christian Frei ) அவர்களின் இயக்கத்தில் உருவான Blame (பழி ) திரைப்படம் முதற் திரையிடல்காண்கிறது.
இந்த ஆவணத் திரைப்படவிழாவின் முக்கியத்துவதை உணர்த்தும் வகையில் அமைகிறது, 'பிளேம்'
திரைப்படத்தின் திரையிடல். COVID-19 தொற்றுநோயால் உலகம் மூழ்கடிக்கப்பட்டபோது, அதன் வருகையை நீண்ட காலமாக கணித்த மூன்று விஞ்ஞானிகள் வைரஸை மட்டுமன்றி, தவறான தகவல், சதி கோட்பாடுகள் மற்றும் உண்மையை மறைக்க அச்சுறுத்தும் அரசியல் பழி ஆகியவற்றினையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததைப் பதிவு செய்கிறது இத்திரைப்படம்.
விசாரணை, த்ரில்லர், பழி அறிவியல், அரசியல் மற்றும் ஊடகங்களுக்கு இடையிலான உறவு என்பன குறித்த திரைப்பதிவாக அமையும், இத் திரைப்படம், முதல் திரையிடலின் ஆசனப்பதிவுகளுக்கான சீட்டுக்கள் யாவும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது இத் திரைப்டத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்புக்கான அடையாளம் எனலாம்.
படங்கள்: நன்றி - Visions du Réel .