சுவிற்சர்லாந்தில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகி பத்து நாட்களுக்கு நடைபெறும் பிரம்மாண்டமான சர்வதேசத் திரைப்படவிழாவின் 74வது பதிப்பு, எதிர்வரும் 4ந் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிறது.
பார்வையாளர் மற்றும் அனைவருக்குமான பாதுகாப்பான விழாவாக ( Locarno74, your safe Festival ) இது இருக்கும். கடந்த சில மாதங்களாக, அந்தக் குறிக்கோளை மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறோம், எங்கள் முழு பார்வையாளர்களையும் திருப்பித் தரக்கூடிய பதிப்பை உருவாக்க, பியாஸ்ஸா கிராண்டேவில் வழக்கமான திரைத்திருவிழாவை ஒழுங்கமைத்துள்ளோம் என்கிறது இத் திரைப்படவிழாவினை ஒருங்கமைக்கும் குழு.
சுவிற்சர்லாந்தின் தென் திசை நகரமான லோகார்னோ நகரம் முழுவதிலுமுள்ள 11 காட்சி அரங்கங்கள், மற்றும் இத்திரைப்படவிழாவின் பெருஞ்சிறப்பான 8000 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் காணக்கூடிய, பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தின் திறந்தவெளித் திரையிடல் என்பவற்றை, கொரோனா பெருந்தொற்றுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப, மீண்டும் நிறுவ முயற்சித்துள்ளோம் என்கிறார் இக்குழுவின் தலைவர் மார்க்கோ சோலாரி.
சென்ற ஆண்டு பெருந்தொற்றுக் காரணமாக, இத்திரைப்படவிழாவின் 73வது பதிப்பு இணைய ஒளிபரப்புக்களால் மட்டுமே நடத்தப்பட்ட நிலையின், இந்த ஆண்டு சுவிஸ் மத்திய அரசின் தளர்வு மற்றும் பாதுகாப்பு விதி முறைகளுக்கு அமைவாக 74 வது பதிப்பினை மக்கள் நேரில் காணும் விழாவாக ஒருங்கமைத்திருக்கின்றார்கள்.
அதன்படி இந்த ஆண்டு நடைபெறும் லோகார்னோ 74' விழாவில், 209 படங்கள், 300 திரையிடல்கள், 11 காட்சி அரங்குகள், என்பவற்றுடன் டிஜிட்டல் வழியான காட்சிப்படுத்தல்களையும் ஏற்பாடு செய்துள்ளார்கள். இது தவிர இந்த விழாவினை ஒட்டி, லோகார்னோ நகரில் நடைபெறும் பல்வேறு கலைநிகழ்வுகளும், சந்தைகளும், நடைபெறும் எனவும், இவை அனைத்திலும் பங்குகொள்வதற்கு பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை ஆரம்பமாகும் இந்தத் திரைப்படவிழா, எதிர்வரும் 14.08.2021 சனிக்கிழமை இரவு விருது வழங்கல்களுடன் நிறைவுபெறுகிறது.
இந்த சர்வதேசதிரைப்படவிழா குறித்த செய்திகள், மற்றும் திரைப்படங்கள் குறித்த பார்வைகள், இந்தப் பகுதியில் தொடர்ந்து நீங்கள் காணலாம்.
இத்திரைப்பட விழாவின் முன்னைய பார்வைகள் சில:
கமிலே (Camille) நீ இறந்திருக்கக் கூடாது !
மரடோனாவின் வாழ்வும் வீழ்வும் : லொகார்னோ திரைப்பட விழாவில் கால்ப்பந்து கடவுளின் திரைப்படம்
சான் பிரான்ஸிஸ்கோவின் கடைசி கறுப்பின மனிதன் : லொகார்னோ திரைப்பட விழாவில்