free website hit counter

விஜய் கடந்து வந்த கரடுமுரடான பாதை !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தொடர் வெற்றிகள், இடையில் ஒன்றிரண்டு தோல்விப் படங்கள் என்றாலும் அவையும் நஷ்டம் ஏற்படுத்தாத வசூல், துப்பாக்கி படத்தில் ஆரம்பித்து நூறு கோடியைத் தாண்டிய வியாபாரம், உலகம் முழுவதும் ரசிகர்கள், கேரளத்தில் மோகன்லால், மம்மூட்டிக்கு இணையான ரசிகர்கள் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக அரியணையில் அமர்ந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். அஜித்துக்கு தல என்ற பட்டத்தை அவரது ரசிகர்கள் சூட்டியதுபோல விஜய்க்கு அவரது ரசிகர்கள் சூட்டிய பட்டம்தான் ‘தளபதி’. இன்று தளபதி விஜய்க்கு 47-வது பிறந்தநாள்.

தன்னுடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனால், குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றி தொடர்ந்து சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய்யை, 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் அவரே கதாநாயகனாகவும் ஆக்கினார். ஆரம்பக்கால படங்கள், பெரும்பாலும் பதின்பருவப் பாலியல் விளைவுகளை சொல்லும் மலிவான படங்களின் வழியாகவே அவருடைய அப்பால் வளர்க்கப்பட்டார் விஜய். பூவே உணக்காக படமே விஜய்யை ஒரு கௌரவமான வளரும் நடிகராக அடையாளம் காட்டியது. அதற்குப் பிறகு 'காதலுக்கு மரியாதை', 'லவ் டுடே', 'ஒன்ஸ்மோர்' ஆகிய படங்கள், விஜய்யின் திரைப்பயணம் ஓரளவுக்கு அவரை மதிக்கத்தக்க காதல் நாயகனாக அவரை மாற்றிக்காட்டின.

என்றாலும் தொடர்ச்சியாக காதல் களங்களில் நடித்து வந்த விஜயை, 'குஷி', 'ப்ரெண்ட்ஸ்', 'பத்ரி' போன்ற படங்கள் அவருக்குப் பெண் ரசிகைகளை பெற்றுக்கொடுத்தன. ஆக்‌ஷன் ஹீரோவாக விஜய்க்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்த முதல் படம் 'திருமலை'. அந்தப் படத்திற்குப் பிறகுதான், 'கில்லி', 'திருப்பாச்சி', 'போக்கிரி' என ஆக்‌ஷன் பாதையில் பயணிக்கத் தொடங்கினார். லாஜிக் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஹீரோயிசப் படங்களை மலிவான ரசனை கொண்ட பாமர ரசிகர்களும் கொண்டாடினார்கள். ஆனால் விமர்சகர்கள் விஜய்யின் இந்த சாகச மூட்டைகளை கிழித்து தொங்கவிட்டனர். அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் நல்ல விமர்சனங்களுக்கு காதுகொடுக்காமல், தன்னுடைய மசாலா பாதையில் உறுதியாக நடைபோட்டார் விஜய்.

ஒரு கட்டத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உடனான அவரது கூட்டணி அவரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் ஆக்கியது. கத்தி, துப்பாக்கி, ஆகிய படங்கள் விஜய்யை தளபதி என அவரது ரசிகர்களை அழைக்க வைத்தது. இந்தக் கூட்டணியின் மூன்றாவது படமான ‘சர்க்கர்’ சர்ச்சைகளைத் தாண்டி 175 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தால் அரசியல் வட்டாரங்கள் விஜயைப் போட்டிக்கு இழுத்தன. இதற்கு சற்று முன்பு ‘தலைவா’ படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது போன்றவை, அவருக்கு ரசிகர்கள் பலத்தை அதிகரிக்கவே செய்தது எனலாம். தமிழ்நாட்டில் இந்தப் படம் திரையிடப்படாத போது கேரளா கிளம்பி சென்று படத்தை பார்த்து தளபதிக்கு நாங்கள் இருக்கிறோம் என்றது ரசிகர்கள் கூட்டம்.

‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘மெர்சல்’ என விஜய்யின் பல படங்களும் பெரும் சர்ச்சைகளை சந்தித்தன. அதே நேரம், 110 கோடி ரூபாயைத் தாண்டிய வியாபாரமும் நடந்து சாதனைப் படைத்தன. தொடர்ந்து, விஜய் நடிக்கும் படங்களை மாநில எல்லைகளைக் கடந்து எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கத் தொடங்கியிருப்பதும் அதற்குப் பிரதான காரணம். அதற்கேற்பவே, ‘மாஸ்டர்’, ’பீஸ்ட்’ என எல்லா மொழி ரசிகர்களுக்குமான கதைகளை அடுத்தடுத்து தேர்வுசெய்து நடித்து வருகிறார் விஜய். இதனால், விஜய் தற்போது நடிக்கத் தொடங்கியிருக்கும் கதைகள் கொஞ்ச நஞ்ச தமிழ் அடையாளத்தையும் இழந்து வருகின்றன.

அவ்வப்போது மேடைகளில் அரசியல் பேசுவது, எங்கு சென்றாலும் தனது ரசிகர்கள் குறித்து பெருமையாக பேசுவது, என் ரசிகனுக்கு ஒன்றுன்னா என அதிரடி காட்டுவது, வாக்களிக்க சைக்கிளில் வந்தது என தமிழகத்தை அடிக்கடி பரபரப்பு களமாக வைத்திருக்கிறார் விஜய். அவரது 47-வது பிறந்த நாளில் அவர் நடிக்கவிருக்கும் 65-வது படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்றம் வெளியாகியிருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-4தமிழ் மீடியாவுக்காக:மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction