இலங்கை வேந்தன் இராவணன் கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நட்புக்காக சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த படத்தை இயக்குநர் வேலு பிரபாகரன் கடந்த 2017-ல் இயக்குவதாக இருந்தது.
அந்தப் படத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க இருந்தார். அந்தப் படத்துக்குக்கான போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. ஆனால், அவை வெளியிடப்படவில்லை.
அந்தப் புகைப்படங்களில் சில இணையத்தில் படக்குழுவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரால் கசியவிடப்பட்டுள்ளது. அவை தற்போது வைரலாகி வருகின்றன. கசியவிட்டவர், திமுகவைச் சேர்ந்தவர் என்று சமூக வலைதளங்களில் கோலிவுட்டைச் சேர்ந்த சிலர் எழுதி வருகின்றனர். இன்னும் சிலர், இது சீமான் நடிக்கவிருந்த பழுவேட்டரையர் கதாபாத்திரம் என்று அவதூறாகவும் இன்னும் சிலர் இது அவர் நடிக்கவிருந்த நரகாசுரன் கதாபாத்திரம் என்று மனம் போன போக்கில் எழுதி வருகின்றனர்.
மற்றொரு முகநூல் நெட்டிசன், “ சீமான் அண்ணனை இதுபோன்றதொரு தமிழ் மன்னன் தோற்றத்தில் பார்ப்பது நன்றாக இருந்தாலும் அவர் ஒரு ஜனநாயகவாதி. சர்வாதிகாரத்துக்கு எதிரானவர். அப்படிப் பார்க்கையில் இப்புகைப்படம் ஒரு நகைமுரண் மற்றும் அரிதான சீமானின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. வேத காலத்துக்கு முன்னர் ஒரு தமிழ் மன்னன் எப்படி இருப்பான் என்ற ஒரு பிம்பத்தை சீமான் சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்க முடியும். புரட்சிகர இயக்குனர் வேலு பிரபாகரனைத் தவிர வேறு யாராலும் இப்படியொரு கற்பனையைச் சீமானை முன்வைத்து செய்திருக்க முடியாது. ஆனால், அவர் தமிழர் மெய்யியல் என்ற பாதையைக் கையில் எடுத்ததால் வேலு பிரபாகரனை பிரிய வேண்டி வந்துவிட்டது” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி அலுவலக வட்டாரத்தில் கேட்ட போது, “ அண்ணன் வேலு பிரபாகரனின் படத்துக்காக எப்போதோ எடுத்த புகைப்படங்களை சிலர் வேண்டுமென்றே தற்போது பரப்பி வருகின்றனர். சீமான் மீது எந்த வகையிலாவது அவதூறு கக்குவது என்கிற போக்கை தேர்தலுக்குப் பின் கடைபிடித்து வருகின்றனர்”என்று வருத்தமாகத் தெரிவித்தனர். இன்னொரு பக்கம் இந்தப் படத்தை சீமானை இயக்க வேண்டும் அது முழு நீளப் படமாக இருக்க வேண்டும் எனக் கேட்டு வேலு பிரபாகரனுக்கு சீமானின் தம்பிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்றும் சொல்கிறார்கள்.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை