free website hit counter

ஜெயலலிதாவை எதிர்க்க இதுவும் ஒரு காரணம் - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 1995ஆம் ஆண்டில் ஜெயலலிதாவை எதிர்க்க என்ன காரணம் என்று, நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பனின் நினைவு தினம் புதனன்று அனுசரிக்கப்பட்டது.  ஆரம்பக் கட்டத்தில், ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரின் நாடகக் குழு மேனேஜராக இருந்தார்.  1963 ஆம் ஆண்டு, தனது தாயார் பெயரில் சத்யா மூவிஸ் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

ஆர்.எம்.வீ. தனது  நிறுவனம் மூலம் எம்.ஜி.ஆரின் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.அரசியலிலும் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து தன் தடத்தை வலுவாக பதித்தார்.

அதிமுக ஆட்சியில் சட்ட மேலவை உறுப்பினர்,  எம்.எல்.ஏ-வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எம். வீரப்பன், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து வந்த ஆர்.எம்.வீரப்பன், கடந்த 1995ஆம் ஆண்டு திடீரென்று அப்பதவியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். இதற்கு காரணம் ரஜினிகாந்த் என அப்போது பேசப்பட்டு வந்தது. 

இது தொடர்பாக, தற்போது ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மறைந்த ஆர்.எம்.வீ குறித்து தயாராகியுள்ள ஆர்.எம்.வீ- கிங் மேக்கர் ஆவணப்படத்தில் ரஜினி தன் நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படத்தின் 100 வது வெற்றி நாள் விழாவில், பாட்ஷா படத் தயாரிப்பாளராக ஆர்.எம்.வீ. பங்கேற்று மேடையில் இருந்தார். அப்போது அதிமுக ஆட்சியில் அமைச்சராக அவர் இருந்தார். 

அந்த நேரத்தில், இயக்குநர் மணிரத்தினம் வீடு அருகே வெடிகுண்டு வீசப்பட்டது. இதை மனதில் வைத்து, பாட்ஷா பட வெற்றி விழாவின் மேடையில் நான் வெடிக்குண்டு கலச்சாரம் குறித்து பேசினேன். அப்படி பேசியிருக்கக்கூடாது. அமைச்சராக ஆர்.எம்.வீ. முன்னிலையில் நான் பேசியது, ஜெயலலிதா அரசுக்கு எதிராக பேசியது போல் கருதப்பட்டது.

இதனால், அமைச்சரவையில் இருந்து ஆர்.எம்.வீரப்பனை, ஜெயலலிதா நீக்கிவிட்டார். இதனால் எனக்கு தூக்கமே வரவில்லை. என்னால் தான் ஆர்.எம்.வீ. பதவி பறிபோனதாக நினைத்தேன். இதுபற்றி ஆர்.எம்.வீ.யிடம் பேசியபோது, அதை அவர் பெரிதுபடுத்தவில்லை.  இவ்வாறு, ரஜினி பேசினார். 

கடந்த 1995-ஆம் நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்தி ரஜினி பேசிய காணொளியில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula