‘அண்ணாத்த’ படம் வெளியாகவிருக்கும் நிலையில் சூப்பர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில்
உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனையானது நுண் நரம்பியல் (மைக்ரோ நியூராலஜி) நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெயர் பெற்ற மருத்துவர் குழுவைக் கொண்டது. இங்குதான் மறைந்த முதல்வர் கருணாநிதி 20 ஆண்டுகள் தனது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை எடுத்துகொண்டார். இம்மருத்துவமனையானது கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டின் எதிர்புறம் இருக்கிறது.
தீபாவளி வெளியீடாக ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீசர், டிரெய்லர் என அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்துக்காக ரஜினியின் ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 25- ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிகாந்துக்கு, திரையுலகில் வாழ்நாள் சாதனை நிகழ்த்தியதற்காக இந்தியாவின் உயரிய திரைவிருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி ஒன்றிய அரசு கௌரவம் செய்தது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை தம்பதியாகச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினி. மேலும் நண்பர்கள், தலைவர்கள் என அனைவரிடம் வாழ்த்துக்களை பெற்று சென்னை திரும்பியபின் அவர்களுக்கு தனது சமூக வலைதளம் வழியாக நன்றியும் தெரிவித்தார். தவிர நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்த்த நிகழ்ச்சியையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் அக்டோபர் 28- ஆம் தேதியான நேற்று மாலை 7 மணியளவில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஊடகத்தினர் மத்தியில் பரபரப்பானது. ரஜினி மகள், சௌந்தர்யா விசாகன், ரஜினியின் மைத்துநரும் லதா ரஜினிகாந்தின் அண்ணனுமான ரவி ராகவேந்தர், ரஜினியின் சகலைபாடியான ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் பரபரப்புடன் அடுத்தடுத்து மருத்துவமணைக்கு வந்து அடுத்து 1 மணி நேரத்தில் முகத்தில் வாட்டத்துடன் திரும்பினர். ஒய்.ஜி.மகேந்திரன் மட்டும், அவரை நெருங்கிய செய்தியாளர்களிடம் “ ரஜினி அவரது அறையில் படுத்திருப்பதைப் பார்த்தேன். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ஆனால், லதா ரஜினிகாந்த் இதை மறுக்கும் விதமாக “வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அவர் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அதனால், அவர் நலமுடன் உள்ளார். பரிசோதனை முடிந்து விரைவில் வீடு திரும்புவார்” என்று தெரிவித்தார்.பின்னர் நள்ளிரவில் ‘ரஜினி நலமாக உள்ளார்’ என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இருப்பினும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவரவில்லை. மேலும் ரஜினியின் பெங்களூர் நண்பர்களின் முக்கியனவரும் ரஜினியுடன் இமய மலை செல்பவருமான ஹரியிடம் கேட்டபோது... நானும் ரஜினி வீட்டில் உள்ளவர்களிடம் உண்மை அறிய போன்மேல் போன் போடுகிறேன். யாரும் போனை எடுக்கவில்லை. இதனால், சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறேன்’ என்றார்.
அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் குறித்து மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமான உடல் பரிசோதனைதான் என்று கூறிய பிறகுதான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினர் மருத்துவமனை அறிவிப்பு வெளியிடாதவரை ரசிகர்கள் குழம்பி நிற்பது உறுதி!