உத்திரப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரேயா, அடிப்படையில் நடனக் கலைஞர்.
பின்னர் சூப்பர் ரேம்ப் மாடலாகவும் உயர்ந்தாலும் ஏனோ ரேம்ப் மாடலிங் தொழிலில் இருந்து வெளியேறி தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமடைந்தார். இன்று பிரபலமாக இருக்கும் பல அழகுச் சாதனங்களுக்கும் பன்னாட்டு குளிர்பானங்களுக்கும் விளம்பரத் தூதுவராக விளங்கிய இவர் புகழின் உச்சியில் இருந்தபோது, ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். பின்னர் ரஜினியுடன் ‘சிவாஜி’ படம் வரை கெத்துக்காட்டி தமிழ் சினிமாவிலிருந்து ஓய்ந்துபோனார். 16 வயதில் நடிக்க வந்ததாகக் கூறும் ஸ்ரேயாவுக்கு தற்போது 39 வயது. கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் தாக்குப்பிடித்து வருகிறார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பெர்க் நகரத்தைச் சேர்ந்த சர்வதேச டென்னீஸ் விளையாட்டு வீரரும் ரெஸ்டாரண்ட் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவருமான ஆன்ட்ரூவ் கொசேவ் என்பவரைக் காதலித்து வந்தார். சினிமாவில் கதாநாயகி என்ற நிலையில் வாய்ப்புகள் குறைந்தபோது தனது காதலர் ஆன்ட்ரூவ் கொசேவ்வை கடந்த 2018-ல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு புனித பீட்டர்பெர்க் நகரில் குடியேறினார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரியவந்ததுள்ளது. ஆனால், ஸ்ரேயா இதை அறிவிக்காமல் இருந்து தனது சொந்த விஷயம் என்பதை பாதுகாத்துள்ளார். மேலும் குழந்தை பிறந்தால் தனக்கு மாடலிங் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று அவருக்கு எண்ணியிருக்கலாம்.
2020-ம் ஆண்டே ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போதுதான் அதைத் தனது இணைய ஊடகத்தில் வெளிப்படுத்தியிருகிறார். ஸ்ரேயா தனது வலைதளப் பக்கத்தில் தனது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் இருக்கும் 28 வினாடி நீள வீடியோவை பகிர்ந்துள்ளார். இதற்கு ஸ்ரேயாவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு தமிழ்நாட்டு ரசிகர் ‘குட்டி ஸ்ரேயாவுக்கு வாழ்த்துகள்’ என்று வாழ்த்தியுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    