‘அருவி’ படத்தின் மூலம் தரமான நடிப்புக்காக பிரபலமானவர் நாடக நடிகையான அதிதி பாலனை தமிழ்சினிமா கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், மலையாள சினிமா அவரை அழைத்துகொண்டு போய்விட்டது.
தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்துள்ள ‘படவேட்டு’ என்ற படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், அடுத்து நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் உடன் இணைந்து நடித்துள்ள ‘கோல்ட் கேஸ்’ என்ற படம் கடந்த 3 தினங்களுக்கு முன் ஜூன் 30-ஆம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றிய இணையவாசிகளுடன் அதிதி பாலன் உரையாடினார். அப்போது பேசிய அவர் “ கோல்ட் கேஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முதல் நாள் வரை பிருத்விராஜை நேரில் சந்தித்தது கிடையாது. அவர் அற்புதமான நடிகர் என்பதால், அவருடன் இணைந்து நடிக்கும் போது சரியாக நடிக்க வேண்டுமே என்ற பதட்டம் இருந்தது. ஆனால் இரண்டாவது நாளிலிருந்து எனது பதட்டத்தைப் போக்கிய பிருத்விராஜ், நடிப்பில் சில நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக அவர் ஒரு இயக்குனரும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும், இயக்குனர் கண்ணோட்டத்துடன் எப்படி அணுகுகிறார் என்பதையும் என்னால் கவனிக்க முடிந்தது. இந்த படம் ஒரு மரணம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவரும், பத்திரிக்கை நிருபர் ஒருவரும், இரண்டு பாதைகளில் நடத்தும் விசாரணையாக உருவாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக பிருத்விராஜும், பத்திரிகை நிருபராக நானும் நடித்துள்ளோம்” என்று கூறினார். ஆனால் இணையவாசிகள் இந்தப் படம் குறித்து எதையும் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் அவருடைய அருவி படம் குறித்தே கேட்டுக்கொண்டிருந்தனர்.