பாஜக தலைமையிலான மோடி அரசு இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தது முதல், குடியுரிமைத் திருத்தச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், புதிய வேளாண் சட்டம் என முற்றிலும் மக்கள் விரோத சட்டங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டங்களை கொண்டுவந்து இந்திய மக்களை வதைத்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது பாஜக அரசு. இதற்கு தமிழகத் திரைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சூர்யா, பாரதிராஜா, அமீர், சேரன் தொடங்கி பலரும் தங்களுடைய எதிர்ப்பை பகிர்ந்து வருகின்றனர். இன்று நடிகர் சங்கத்தின் துணைச் செயலாளர் பூச்சி முருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “ இந்த மசோதா கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட சவால். நம் நாட்டில் திரைப்படம் என்பது எல்லா தரப்பையும் சென்று சேரும் வலிமையான ஊடகம். ஒளிப்பதிவு சட்ட திருத்தம் என்ற பெயரில் ஒன்றிய அரசு அதன் குரல்வளையை நெரிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது.
குறிப்பாக தணிக்கை செய்யப்பட்ட படங்களை யார் விரும்பினாலும் தடை செய்யலாம் என்பது கருத்து சுதந்திரத்துக்கான மிகப்பெரும் அச்சுறுத்தல். சமூகவலைதளங்களை தொடர்ந்து தற்போது திரைத்துறையை தன் பாசிச கரங்களால் நெரிக்கிறது ஒன்றிய அரசு. அடுத்து இது ஊடகங்களை நோக்கியும் பாயலாம். திரைத்துறையை தன் கைப்பாவையாக மாற்ற ஒன்றிய அரசு நினைக்கிறது.இது ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்துக்கே விடுக்கப்பட்ட சவால்.சமூகத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதே திரைப்படம்.
இந்த சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் படைப்பாளி ஒரு கதையை யோசிக்கும்போதே ஒன்றிய அரசுக்கு ஆதரவாக மட்டுமே யோசிக்க முடியும். இதன் மூலம் மக்களை சிந்தனை அடிமைகளாக மாற்ற முயற்சிக்கிறது ஒன்றிய அரசு. ஒரு கலைஞன் என்ற முறையிலும் முன்னாள் தணிக்கைக் குழு உறுப்பினர் என்ற முறையிலும் என் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.