கொரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வந்த நேரத்தில் சன் டிவி பிரம்மாண்ட அறிவிப்பு மூலம் விஜய்யின் 65-வது படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டது.
அந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் டிவி தயாரிக்கிறது. ஜார்ஜியாவில் 9 நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. இதற்கிடையில் தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் #தளபதி66 என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் கடந்த சில நாட்களாக அவரது ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத இந்த தகவலால் ஊடகங்கள் இதை கண்டுகொள்ளவில்லை. மேலும் கொரோனாவால் மக்கள் பேரளவில் செத்து மடியும்போது, ரசிகர்கள் ட்ரெண்ட் செய்வதற்கு இதுதான் தருணமாக என்று நூற்றுக் கணக்கான நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப, அவர்களை சங்கி என்று வறுத்தெடுத்தனர் விஜய்யின் ரசிகர்கள்.
இந்நிலையில், தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி என்பவர் விஜய்யின் படத்தை இயக்க இருப்பதாக டிவி பேட்டி ஒன்றில் கூறியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அவர் தன்னுடைய பேட்டியில்: ‘விஜய்க்கு நான் கூறிய கதை அவருக்குப் பிடித்து விட்டது. தில் ராஜூ தயாரிப்பில் இந்த படத்தை நான் இயக்க இருக்கிறேன்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொரோனா வைரஸ் பிரச்சனை முடிவடைந்ததும் தயாரிப்பாளரே வெளியிடுவார்’ என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய பேட்டியல் ‘விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் சில விஷயங்களை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறேன். அந்த சஸ்பென்ஸ்கள் ஒவ்வொன்றாக உடையும்போது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், வம்சி இயக்க இருப்பது விஜய்யுடைய 66வது படமா என்பதை அவர் கூறாமல் அவர் தவிர்த்துவிட்டது குறிப்பிடத் தக்கது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    