free website hit counter

சைதை துரைசாமியின் மகன் இயக்கிய படத்துக்கு 24 விருதுகள்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகர் விதார்த், நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் 'என்றாவது ஒருநாள்' திரைப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் வெற்றி துரைசாமி. இவர், சென்னையின் முன்னாள் மேயரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சைதை துரைசாமியின் மகள்.

அப்பாவைப்போல் அரசியலில் இறங்காமல், சினிமாவில் இறங்கி முதல் படத்தை இயக்கி, சென்னை சர்வதேசப் படவிழா உட்பட 24 சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் வெற்றி துரைசாமி.

தனது முதல் படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் இயக்குனர் வெற்றி துரைசாமி பேசியதாவது..' என்றாவது ஒருநாள் திரைப்படம் முதலில் அக்டோபர் 3ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதன்பிறகு அக்டோபர் 8-ஆம் தேதியன்று ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டது. இரண்டு காளைகளை அன்புடன் வளர்க்கும் ஒரு விவசாய குடும்பத்தை பற்றிய கதைதான் 'என்றாவது ஒருநாள்'. வறுமை காரணமாக அவர்கள் தங்களுடைய கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தங்கள் பிள்ளை மற்றவர்களிடம் வேலைக்கு செல்வதை தவிர்க்க, அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இடைத்தரகர்கள் இவர்களின் நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு எப்படி சுரண்டுகிறார்கள் என்பதையும் எடுத்துரைத்திருக்கிறேன். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் எத்தகைய போராட்டங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதையும் இந்தப் படம் பேசுகிறது.

கொங்கு மண்டல பகுதியில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் கொங்கு மண்டல பகுதிகளில் ஒன்றான வெள்ளக்கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்தின் திரைக்கதையை 2016 - 17 ஆம் ஆண்டில் எழுதினேன். இதற்கு என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமும் எழுத காரணமாக அமைந்தது. எங்களுடைய குடும்பத்திற்கு கால்நடை பண்ணை ஒன்று இருந்தது. இந்தப் பண்ணையில் ஒரு குடும்பத்தாரிடமிருந்து இரண்டு காளைகளை வாங்கினோம். அவர்கள் மிகவும் பாசத்துடன் வளர்த்த அந்த கால்நடை விலங்குகளை விட்டு வெளியேற மிகவும் கஷ்டப்பட்டனர்.

இதன் பின்னணியில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. அதாவது அவர்கள் தங்கள் கால்நடைகளை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டனர். அவர் அந்தக் கால்நடைகளை இறைச்சி காரர்களுக்கு விற்றுவிட்டார். தாங்கள் மிகவும் நேசித்து பரிவு காட்டி வளர்த்த காளைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தவிர்க்க எண்ணிய அவர்கள் எங்களை அணுகினர். நாங்கள் அந்த காளைகளை திரும்ப வாங்க வேண்டும் என்றும், இறைச்சி கடைக்காரர்களுக்கு அவர்கள் கொடுத்த தொகையை விட அதிகமாக பணம் கொடுத்து அதனை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்தப் படம் யதார்த்தத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறது மற்றவர்களை தவறாக சித்தரிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை சூழலுக்கு, சூழ்நிலைகள் தான் காரணம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்த திரைப்படம் தனி நபர்களையோ அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களையும் தவறாக சித்தரிக்கவில்லை. சூழ்நிலைகளை தான் குற்றம்சாட்டி, படைப்பாக உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் திரைக்கதையை எழுதும்போதே நடிகர் விதார்த் என்னுடைய மனதில் இருந்தார். அத்துடன் இந்த படத்தின் நாயகியாக ரம்யா நம்பீசன் பொருத்தமாக இருப்பார் என்பதையும் உணர்ந்தேன்.'' என்றார்.

நடிகர் விதார்த் பேசியதாவது..
'' என்றாவது ஒருநாள் படத்தில் நான் கதையின் நாயகன் தங்க முத்துவாக நடிக்கிறேன். இந்த கதையை கேட்ட போது என்னை கவர்ந்தது. வழக்கமான கதைகளில் நடிப்பதை விட, இதுபோன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதைத் தான் நான் விரும்புகிறேன். அதனால்தான் இந்த படத்தை தேர்வு செய்து நடித்தேன். அத்துடன் இந்த கதைக்கும், எனக்கும் ஆழமான பிழைப்பு ஒன்றும் இருந்தது.

நாங்களும் கால்நடை பண்ணை ஒன்றை சொந்தமாக வைத்திருந்தோம். 20 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் தான் நான் வளர்ந்தேன். நாங்கள் ஒரு சிறிய வீட்டில்தான் வசித்தோம். அதில் நாங்கள் எங்களுடன் இரண்டு கன்று குட்டிகளையும் வளர்த்தோம். அவற்றை நாங்கள் அதற்கென தனியான கொட்டகையில் வைத்து வளர்க்க வில்லை. எங்கள் குடும்பத்தின் உறுப்பினராக, எங்களுடன் ஒரு குழந்தைபோல் வளர்த்தோம். அதற்கு உணவளிக்க எங்களுக்குள் ஒருவரை ஒருவர் சண்டையிட்டு கொள்வோம். எங்கள் வசிப்பிடத்தில் ஒரு பகுதியாக இருந்த சிறிய வராண்டாவில் அவற்றினை கட்டி வைப்போம். அந்தக் கன்று குட்டிகள் வளர்ந்தபோது பராமரிக்க இடம் இல்லை என்பதால், அதனை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது எனக்குள் ஏற்பட்ட வலியை இந்த கதை கேட்ட போது புரிந்துகொள்ள முடிந்தது. உணரவும் முடிந்தது.

இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை கொங்கு மொழி பேசுவது சவாலாக இருந்தது. கதை கொங்கு மண்டலத்தில் நடைபெறுவதால் இங்கு மக்கள் பேசும் பேச்சு வழக்கினை பேச வேண்டியிருந்தது. இது மிகவும் சவாலாக இருந்தது.'' என்றார்.

படத்தின் நாயகி நடிகை ரம்யா நம்பீசன் பேசியதாவது...
'' இந்த திரைப்படத்தில் மாட்டு வண்டி வைத்திருக்கும் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாட்டு வண்டி மூலம் என்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன். மாட்டு வண்டி ஓட்டுவதற்காக பயிற்சி எடுத்தேன். சில வார பயிற்சிக்குப் பிறகு மாட்டு வண்டியில் சவாரி செய்யவும், ஓட்டவும் கற்றுக்கொண்டேன்.

இந்த திரைக்கதையில் உள்ள எதார்த்தமான சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் எதார்த்தத்தை மையமாக கொண்டுள்ளது. குழந்தைகளின் கல்வி வறுமையின் காரணமாக எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பேசுகிறது. இந்தப் படம் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வாழ்வியலையும் பேசுவதால் வெற்றி பெறும்.'' என்றார்.

இந்தப்படத்தில் விதார்த் மற்றும் ரம்யா நம்பீசன் தம்பதிகளின் குழந்தையாக மாஸ்டர் ராகவன் நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'என்றாவது ஒருநாள்' திரைப்படம் உலகெங்கிலுமுள்ள பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றிருக்கிறது. கிராமப்புற பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பம் ஒன்றின் வாழ்வியலை இந்த திரைப்படம் உரக்கப் பேசுகிறது.

வறுமையின் காரணமாக ஒரு விவசாயக் குடும்பம் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் 'என்றாவது ஒருநாள்' படத்தின் திரைக்கதையில் அமைந்திருக்கிறது. வறுமையின் காரணமாக தங்களுடைய வாரிசு, கல்வி கற்க பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்வதை தடுக்க, வேறு வழியில்லாமல் பிரியமுடன் வளர்த்த கால்நடைகளை விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் ஏழை விவசாய குடும்பங்களின் சேர்ந்த குழந்தைகள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் இந்த திரைப்படம் விளக்குகிறது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்ற 'என்றாவது ஒரு நாள்' திரைப்படம், எதிர்வரும் அக்டோபர் மூன்றாம் தேதியன்று ஜீ தொலைக்காட்சியில் மதியம் 2.30 மணிக்கு வெளியாகிறது. அதைத்தொடர்ந்து ஜீ5 என்னும் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 8ஆம் தேதி வெளியாகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula