பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை கொண்டு வருவார் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES 2025) மும்பையில் நடைபெற்றது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில், பிரதமர் மோடி
உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர்.
WAVES 2025 உச்சி மாநாடு, திரைப்படங்கள், OTT, கேமிங், காமிக்ஸ், டிஜிட்டல் மீடியா, AI, AVGC-XR, மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் திறமையை உலகுக்கு காட்ட முயற்சிக்கிறது. மேலும் உலக பொழுதுபோக்கு பொருளாதாரத்தில் இந்தியாவின் தடத்தை விரிவுபடுத்துவதையும்
நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “பிரதமர் மோடி ஒரு போராளி, அவர் எந்த சவாலையும் சந்திப்பார் என தெரிவித்தார். பிரதமர் அதை நிரூபித்தும் இருக்கிறார் என கூறிய ரஜினிகாந்த் அதை நாம் கடந்த ஒரு தசாப்தமாக கண்டு வருகிறோம் என கூறினார். காஷ்மீர் நிலைமையை பிரதமர் தைரியமாகவும் நேர்த்தியாகவும் கையாண்டு வருகிறார் என கூறிய அவர் அங்கு அமைதியை கொண்டு வந்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என
தெரிவித்தார்.