free website hit counter

‘இந்தி’க்கு எப்போதுமே ‘நோ!’ - பா. இரஞ்சித் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக கலைத்திருவிழா, ஓவியகண்காட்சி, திரைப்படவிழா, மற்றும் புகைப்படக்கண்காட்சி என தொடர்ந்து நடத்திவருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மதுரையில் இன்று தலித் எழுத்தாளர்களுக்கான , தலித் இலக்கியகூடுகை நிகழ்வு நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 29,30 தேதிகளில் மதுரை உலகத்தமிழ்சங்கம் அரங்கில் இன்று துவங்கியது துவக்க உறையாற்றிய பா.இரஞ்சித்

“தலித் எழுத்துக்கள் தான் என் திரைப்பயணத்தின் துவக்கம். உலகளவில் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் இலக்கியத்தின் வாயிலாகவும் என் வாழ்வின் வாயிலாகவும் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ளமுடிந்தது. வரலாற்று ரீதியாக தலித் மக்களின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் வாழ்வியல் முழுக்க முழக்க கலையோடு பின்னிப்பிணைந்தது. இலக்கியவாதிகளே எங்களின் வேர்ச்சொல்.

90 களில் தலித் இலக்கியம் என்ற வகைமை தோன்றியபோது பல கேள்விகள் எழுந்தது. இப்பொது தலித் இலக்கியம் தழைத்தோங்கி வளரத்தொடங்கியுள்ளது. அந்த வகைமையை சுய மதிப்பீடு செய்ய இக்கூடுகை உதவும். முன்பெப்போது இல்லாத தலித் இலக்கியம் பவுத்தம் குறித்த ஆய்வுகள் தற்போது அதிகமாக நடைபெற துவங்கியுள்ளன. 'இன வரைவியல்' என்ற வகைமையை உருவாக்கிய பெரும்பங்கு தலித் இலக்கியத்திற்கு உண்டு. தலித் இலக்கியம் வெறும் எதிர்மறை அம்சங்களை குறித்து மட்டும் பேசாமல் நேர்மறை அம்சங்களை அதன் நேர்த்தியை குறித்து பேசுவதே இக்கூடுகையின் நோக்கம்.” என்றார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு எழுத்தாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.

முன்னதாக, இந்த நிகழ்வுக்காக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய இயக்குனர் இரஞ்சித், “கலை, இலக்கியம் ஆகியவை அரசியலுக்கான முக்கிய வடிவம். எனவே அவற்றை வளர்த்து எடுக்கும் வகையில் ‘வானம் கலை திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் இலக்கிய சூழலுக்கும் பொது மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. அவர்கள் இலக்கியத்தை கொண்டாடுவது குறைவு. ஆனால் இன்று எழுத்தை வாசிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர்.

அமெரிக்க ஆப்ரிக்க மற்றும் அரபி இலக்கியங்கள் கொண்டாடும் அதே அளவுக்கு தமிழ், இந்திய சூழலில் தலித் இலக்கியம் கொண்டாடப்பட வேண்டும். இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. நம்மைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம், வட இந்தியர்களுக்கு உள்ளது. எனவே, இந்தியை எப்போதும் ஏற்கமாட்டோம். இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நின்றால்தான் தேசிய அளவில் நமக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்” என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction