free website hit counter

பிக் பாஸிலிருந்து கமல்ஹாசன் விலகல் ஏன்?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து அதன் தொகுப்பாளர் திடிரென விலகியுள்ளார்.

இது தொலைக்காட்சியுலகில் பரபரப்பை உருவாக்கியது. இதுதொடர்பாக கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது, அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்கக் கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்குப் பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. இவர்களோடு இணைந்து புதுமைப் பாதையில் பயணிப்பதில் எனக்கு அளவற்ற பெருமிதம் உண்டு.

கோரோனா ஊரடங்கு விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்படிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.

மேலும் இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களையும் கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் என் சொந்தக் காரணங்களின் பொருட்டு தாமதிக்கச் செய்வது நியாயமல்ல. அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன், இன்று எபிஸோடுக்குப் பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனது விலகல் ஏற்படுத்தும் சிரமங்களுக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction