தெலுங்கு சினிமாவின் டார்லிங் என்று அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா டோலிவுட்டின் நம்பர் 1 நாயகனாக விளங்கி வருகிறார்.
அவரது படங்களில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வசூலைப் பெற்று வருகின்றன. கோரோனா காலத்தில் இவர் தனது தொண்டு நிறுவனம் வழியாகச் செய்த பணிகளை மக்கள் இன்னும் பாராட்டி வருகிறார்கள். இதற்கிடையில் ஆந்திராவில் திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி அன்று காதலர் தினத்துக்கு வெளியான, இவருடைய படமான ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ ஆந்திராவில் மீண்டும் 30-க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது அவரது நட்சத்திர மதிப்புக்கு ஒரு உதாரணம். தற்போது பாதி சிங்கம் - பாதி புலி என்பதைக் குறிக்கும் வகையில் உருவாகி வரும் ‘லைகர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது முழுவதும் ஆக்ஷன் படமாகத் தயாராகி வருகிறது.
இதுவொரு பக்கம் இருக்க, பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் வீடியோ காட்ஸில்லா vs.காங் படத்தை ஆங்கிலத்துடன் பிராந்திய மொழிகளிலும் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஜய தேவரகொண்டா தெலுங்கு மொழிப் பதிப்புக்கு குரல் கொடுத்துள்ளது. இந்த அனிமேட்டட் வீடியோ, மிகக் கொடூர அரக்கர்களில் இருவரான காட்ஸில்லா மற்றும் கிங்காங்கின் பயணம் மற்றும் இரண்டிற்கும் இடையே காலம் காலமாக இருந்து வரும் யுத்தத்தை சித்தரிக்கும் சிறுவர்களுக்கான படம். விஜய் தேவரகொண்டா காட்சில்லா ரசிகர் என்பதால் குரல் கொடுத்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.