கோலிவுட்டில் பிறந்து வளர்தாலும் ஹாலிவுட் நடிகராகி விட்ட தனுஷ் ‘கிரே மேன்’ ஓடிடி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் சென்ற 16-ம் தேதி சென்னை திரும்பியிருக்கிறார்.
அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும், குழந்தைகளும் அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள். இப்போது ரஜினிகாந்த் அவர்களுடன்தான் தங்கி மருத்துவ சிகிச்சை பெறப் போகிறார் என்பது தனிக் கதை.
தனுஷ் தற்போது முதல்கட்டமாக கார்த்திக் நரேன் படத்தை முடிக்க இருக்கிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து வரும். இந்தப் படத்தின் 65 சதவிகித படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. மீதமிருக்கும் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் நடக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு, எந்தப் படத்தைத் தொடங்குவார் என்பது குறித்து ஆளாளுக்கு ஆருடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அதற்பு இப்போது அதிகாரபூர்வ அறிவிப்பு பதிலாக அமைந்துவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் அடுத்த ஆண்டு நடிக்க இருக்கிறார் தனுஷ். இதுவொருபக்கம் இருக்க.. செல்வராகவன் இயக்கத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு இடைப்பட்ட நாட்களில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறாராம். இவைதவிர, மாரி செல்வராஜ், பாலாஜி மோகன், வெற்றி மாறன் - என்று 2023 -ம் ஆண்டுக்கான தனுஷின் கால்ஷீட்டும் நிரம்பி வழிகிறதாம். இதை எல்லாத்தையும் தாண்டி டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்துக்காக தனுஷுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அந்த படத்தின் பட்ஜெட் 120 கோடி என்று கூறப்படுகிறது.