பெற்ற வாக்குகளின் அடிப்பையில் சட்டமன்ற தேர்தலில் ஐந்தாம் இடம் பிடித்தது கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம்.
இதனால், நொந்துபோன நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து விலகிச் செல்ல, கவிஞர் சினேகன் மட்டுமே கமலுடன் இருந்து வருகிறார். தேர்தல் காய்ச்சல் முடிந்து தற்போது திரை மற்றும் தொலைக்காட்சி உலகத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டார் கமல்ஹாசன்.
அவருடைய நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் ‘விக்ரம்’ படத்தில் சண்டை இயக்குநராக அன்பறிவ் இரட்டைச் சகோதரர்கள் பணியாற்றவிருக்கிறார்கள். இது தொடர்பான செய்தியையும், புகைப்படத்தையும் நடிகர் கமல்ஹாசன் இன்று தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அன்பறிவ் சகோதரர்கள் மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற சண்டை இயக்குநர்களாக முத்திரை பதித்தவர்கள். லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தின் சிறப்பம்சமே அந்தப் படத்தில் இருந்த சண்டை காட்சிகள்தான். அதனால்தான் இந்தப் படத்திலும் இவர்கள் சண்டைக்கு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களை கமல் தேர்வு செய்துள்ளதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இந்தியன் 2 பட வழக்கின் தீர்ப்புக்காக கமல் காத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. முதலில் இந்தியன் 2 படத்தை முடித்த பின்பே மற்ற படங்களுக்குச் செல்லவேண்டுமென்று நீதிமன்றம் கூறினால், விக்ரம் படத்தை தாமதமாகவே கமல் தொடங்கவேண்டியிருக்கும்.