வெள்ளிக்கிழமை இந்திய அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இஸ்லாமியரான றஷாட் ஹுஸ்ஸைன் என்பவரை சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதராக அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.
இப்பதவிக்கு பரிந்துரைக்கப் பட்டு நியமிக்கப் பட்ட முதலாவது முஸ்லிம் நபர் இவராவார்.
இது தொடர்பாக பத்திரிகைக்கு வெள்ளை மாளிகை அளித்த செவ்வியில், இந்த அறிவிப்பானது அமெரிக்காவில், அனைத்து விதமான மக்களதும் மத சுதந்திரத்துக்கு இடமளித்து அவற்றைப் பிரதிபலிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதில் அதிபர் பைடென் கொண்டிருக்கும் உறுதியான நிலைப் பாட்டை வெளிப்படுத்துகின்றது எனப் பட்டுள்ளது.
ஹுஸ்ஸைன் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு கவுன்சிலிலும், நீதித்துறையிலும் உயர் பதவிகளை வகித்தவர் ஆவார். இது தவிர இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் சிறுபான்மை மதக் குழுக்களது உரிமைகளுக்காகவும் இவர் பல முயற்சிகளை எடுத்தவர் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. இது தவிர OIC எனப்படும் இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமைப்பில் அமெரிக்காவுக்கான விசேட தூதராகவும் கடமையாற்றி இருந்த ஹுஸ்ஸைன் தீவிரவாத எதிர்ப்புக்கான இராஜதந்திர தகவல் தொடர்புகளிலும் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் இருந்தவர் ஆவார்,