இறை தூதர் முஹம்மது தொடர்பான பிரெஞ்சு நாளிதழின் சர்ச்சைக்குரிய கேலிசித்திரம் வெளியான விவகாரத்தில் பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றக் கோரியும், சிறையில் அடைக்கப் பட்ட தமது தலைவர் சாட் ரிஷ்வி இனை விடுவிக்கக் கோரியும் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுவான தெஹ்ரிக் ஈ லபாயிக் 2 வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
இப்போராட்டத்தை அடக்க ஏற்பட்ட மோதலில் 7 போலிசார்கள் கொல்லப் பட்டதாகவும், இரு தரப்பிலும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுடன் ஒப்பந்தம் எட்டிய பின்பு இந்த இஸ்லாமியக் குழு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. 2015 ஆமாண்டு உருவாக்கப் பட்ட TLP என்ற இந்தக் குழுவுடன் எட்டப் பட்ட தீர்மானம் குறித்து பாகிஸ்தான் இதுவரை அறிவிக்கவில்லை.
ஆனால் சமாதானத்துக்கும், நல்லிணக்கத்துக்குமான ஒப்பந்தம் எட்டப் பட்டதாக செய்தியாளர் மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மெஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி :
ஆப்கானிஸ்தானில் புதிதாக நிறுவப் பட்டுள்ள தமது ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்தால் அநாவசியமான விளைவுகள் ஏற்படும் எனத் தலிபான்கள் எச்சரித்துள்ளனர். தலிபான்களது அரசை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், வெளிநாடுகளில் ஆப்கானுக்கான நிதியுதவியை முடக்குவதும், இப்பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மையை ஏற்படுத்தும் என்றும் தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.