மத்திய கிழக்கின் 3 முக்கிய நாடுகளான, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து குவாட் என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
ஆப்கானில் இருந்து அமெரிக்க நேட்டோப் படைகள் மிகப் பெருமளவில் வாபஸ் வாங்கியுள்ள நிலையில் அங்கு தலிபான்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.
இந்நிலையில் ஆப்கானில் சமாதான முயற்சிகளை மேற்கொள்வதை முக்கிய இலக்காகக் கொண்டு குவாட் கூட்டணி உருவாக்கப் பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்ட தகவலில், ஆப்கானின் நீண்ட கால அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை நிறுவுவது மாத்திரமன்றி வளர்ச்சியடைந்து வரும் பிராந்திய வர்த்தகத்தை விரிவு படுத்துவது மற்றும் வணிக உறவுகலை மேம்படுத்துவதும் குவாட் கூட்டமைப்பின் இலக்குகளாகும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள 2007 ஆமாண்டு அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்தும் ஒரு குவாட் அமைப்பை உருவாக்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்தில் தேசியப் பூங்காவுக்கு வெளியே பேஸ்பால் மைதானத்தில் சனிக்கிழமை இரவு 4 பேர் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து தெளிவான தகவல் இல்லை. ஆனால் வாஷிங்டன் நேஷனல்ஸ் மற்றும் சான் டியேகோ பாட்ரெஸ் ஆகிய அணிகளுக்கான முக்கிய போட்டி இச்சம்பவத்தால் இடை நிறுத்தப் பட்டுள்ளது.