இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஆத்திரமடைந்த மக்கள், நேற்றிரவு 10 மணியளவில், மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்குச் சமீபமாக, வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரம் செல்லச் செல்ல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தொகை ஆயிரக்கணக்கான நிலையில், காவல்துறையினர் அவர்களைக் கலைந்து செல்ல பணித்தபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை கட்டளைக்கு பணிய மறுத்து கலவரச் சூழல் ஏற்பட்ட நிலையில், விஷேட பாதுகாப்புப் படையினர் சம்ப இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்காக, பாதுகாப்புப் படையினர் தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர்புகை என்பவற்றை பாவித்தபோது, அச் சூழலில் வன்முறை வெடித்தது. இதில் பொலிஸ் பஸ்1, பொலிஸ் ஜீப்1 ,2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனமொன்றும் சேதமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தலைநகர் கொழும்பில் திடீர் ஆர்ப்பாட்டங்கள் - உடனடி ஊரடங்கு உத்தரவு !
இந்தக் கலவரங்களின்போது, காயமடைந்தோர் 31 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமுற்ற விசேட அதிரடிப்படையினர் 15 பேரும், நுகேகொட ASP உட்பட 3 பொலிஸார் மற்றும் மூன்று ஊடகவியலாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மேலும் நான்கு பேர் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
நேற்று இரவு இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டு விபரங்களைத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு இடையில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு மத்தியில் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியதாகவும், அவர்கள் திட்டமிட்ட வகையில், இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாகவும், நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியது கைது செய்யப்பட்ட நபர்களின் வாக்கு மூலங்களில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற போராட்டத்தின் பின் அம்புல்தெனிய சந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இவை தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள் இரவு 11 மணிக்கு ஊடகங்களைச் சந்தித்து மேலும் விளக்கமளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, இன்று பகல் நாட்டின் பல இடங்களிலும் பல்வேறானா போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் சில இடங்களில் பதற்றமான நிலைமை காணப்படுவதாகவும் அறியவருகிறது.
மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்து, நடைபெறும் ஆர்ப்பாட்டத்தினால், மொரட்டுவ குருசா சந்தியிலிருந்து காலி வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதனால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மருதானை டீன்ஸ் வீதியை மறித்து குடும்பநல சுகாதார ஊழியர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால், கொழும்பு நகர சபை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று காலை 11.30 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையும் மூடப்பட்டது. ரூபாயின் மதிப்புச் சுட்டெண் முன்னையதை விட மேலும் 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்த காரணத்தினால் பங்குச் சந்தை மூடப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
நேற்று இரவு உடனடியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று விடியற்காலை நீக்கப்பட்டது, ஆனால் நகரம் முழுவதும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.