2022ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான அணிகளை தெரிவு செய்ய இடம்பெற்று வருகின்ற,
தகுதிகாண் தொடரில் தமது முதல் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நெதர்லாந்திற்கு எதிராக 34 ஓட்டங்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை, மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரினை வெற்றி ஒன்றுடன் ஆரம்பம் செய்திருக்கின்றது.
நியூசிலாந்தில் 2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மகளிர் உலகக் கிண்ணத்தொடரில் விளையாடும் ஐந்து அணிகளும் முன்னர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இந்த தொடரில் எஞ்சியிருக்கும் மூன்று இடங்களில் விளையாடும் அணிகளை தெரிவு செய்வதற்காக மகளிர் உலகக் கிண்ணத்தகுதிகாண் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெறுகின்றது.
இந்த தகுதிகாண் தொடரில் குழு A இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தமது முதல் போட்டியில் நெதர்லாந்தினை எதிர்கொண்ட நிலையில், குறித்த போட்டி இன்று (23) ஹராரே நகரில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணியின் தலைவி ஹீத்தர் சீகர்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீராங்கனைகளுக்கு வழங்கினார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணிக்கு அதன் தலைவி சாமரி அத்தபத்து சிறப்பான ஆரம்பம் ஒன்றினை வழங்கினார்.
தொடர்ந்தும் சாமரி அத்தபத்து அபாரமாக செயற்பட அவரின் அதிரடி ஆட்டத்தோடு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அபாரம் காண்பித்த சாமரி அத்தபத்து, மகளிர் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 6ஆவது சதத்துடன் வெறும் 70 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதேநேரம், அனுஷ்கா சஞ்சீவனியும் இலங்கை அணிக்காக 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் கரொலின் லேங்கே 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, சில்வர் சீகெர்ஸ் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 279 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி, சிறப்பான ஆரம்பம் ஒன்றினை பெற்ற போதும் போட்டி 43.4 ஓவர்களில் இடைநிறுத்தப்பட்டு போட்டியின் வெற்றியாளர்களாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி டக்வெத் லூயிஸ் முறையில் அறிவிக்கப்பட்டது.
அதேநேரம் ஆட்டம் நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தமது பதில் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நெதர்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசியிருந்த பெபேட் லீடெ 77 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, ஸ்டெர்ரே கல்லிஸ் 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் அருன ரணசிங்க 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, சாமரி அத்தபத்து மற்றும் உதேஷிகா பிரபோதினி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
																						
     
     
    