free website hit counter

மகத்துவம் நிறைந்த மஹா சிவராத்திரி !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .

ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் மாசிமாத தேய்பிறைக்காலத்தில் வரும் சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரி விரத தினமாக முன்னோர்களால் கடைபிடிக்கப்படுகிறது. மகாசிவராத்திரி பற்றி புராணங்கள் கூறுவது என்ன?ஒவ்வொரு யுக முடிவிலும் மகாபிரளயம் ஏற்பட்டு பூலோகம் முழுவதும் நீரால் சூழப்பட்டு உயிரினங்கள் அனைத்தும் அழியும். அப்படி ஒரு பிரளய காலத்தின் முடிவில் உயிரினங்கள் அனைத்தும் அழிந்தன.ர்.

அப்போது பார்வதி தேவியானவர் பெருவெள்ளம் ஓய்ந்து மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனிதகுலம் தழைக்கவும் ஒரு இரவு முழுவதும் விழித்திருந்து நான்கு கால பூஜை செய்து பரம்பொருளை வழிபட்டார். அதனால் மீண்டும் பூமியில் உயிரினங்கள் தோன்றின. அப்படி பார்வதிதேவி பரமனைப் பூஜித்த தினமே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

அவர் பூஜை செய்த நான்கு காலங்களும் மகாசிவராத்திரி சிறப்பு பூஜையாக செய்யப்படுகிறது.அடி முடி காண முடியாமல் சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றிய நாளே சிவராத்திரி தினம் என கூறப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் நாம் சிவபெருமானுக்கு அருகில் இருக்க வேண்டும். இறை சிந்தனையிலேயே மனம் இருக்க வேண்டும். அன்று காலையில் சிவாலயம் சென்று வழிபடவேண்டும்.

நிறைய உணவு உட்கொண்டால் மனம் சிவ சிந்தனையில் மூழ்காது. எனவே அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து, திருமுறைகளை பாராயணம் செய்தல் வேண்டும். அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவே சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மனதை சிவனின் மீது வைத்து சிவாயநம என ஐந்தெழுத்து மந்திரத்தை கூறி இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து 4 ஜாம பூஜைகளிலும் பங்கேற்க வேண்டும். ஒரு நாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூஜை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.

பாரதத்தில் நான்கு சிவஸ்தலங்கள் மகா சிவராத்திரி தலங்களாகப் போற்றப்படுகின்றன. திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திருவைக்காவூர் ஆகும். இதில் திருவைக்காவூர் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது.

இங்கு சர்வஜனரட்சகி சமேத வில்வனேஸ்வரராக சிவபெருமான் அருள்பாலித்து வருகின்றார். பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய ஐந்து தலங்களிலும் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடக்கும்.

சிவதரிசனத்திற்கு லிங்கோத்பவ காலம் மிக மிக உகந்தது. மகா சிவராத்திரியன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை உள்ள நேரமே லிங்கோத்பவ காலமாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது.

மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுதும் கண்விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். முடிவாக இனிப் பிறவா தன்மை பெறலாம். சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடங்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம் என்பதில் ஐயமில்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction