மலையைப் போன்ற உறுதி, பலம் மிக்க செயல், தைரியம் தரும் உத்வேகம் இவற்றைக் கொடுப்பவள் மலைமகள், அலைக்கழிக்கப்படும், பொருள் அலைபோன்று அசைந்து கொண்டே இருக்கும் செல்வம் நிலையை உயர்த்திடவும், ,தாழ்த்திடவும் செய்யும் தனம் இவற்றைக் கொடுப்பவள் அலைமகள், நிலையான கல்வியும் கலைகளினால், தெளிந்த நல் அறிவையும் ஆக்கத்திறனையும் தருபவள் கலைமகள்.
ஆக இம்மூன்று சக்திகளும் நம்வாழ்வில் மிகமுக்கியமான கல்வி செல்வம் வீரம் தந்து நம்மைவழி நடத்த பெருமபங்காற்றுகின்றனர். இறைசக்தி துணையுடன் பிறக்கும் குழந்தை பெரிதாகி வளர்ச்சி அடைந்து எழுந்து நடக்க தைரியத்தை சக்தியை மலைமகள் கொடுக்கிறாள் அப்போது அக்குழந்தைக்கு நடக்கத்தெரிகிறது. விழுந்து எழுந்து அழுது நடந்து பின் ஓடுகிறது. இப்படி வளரும் குழந்தைக்கு ஐந்து வயதாகும் போது அக்குழந்தைக்கு பசிக்கிறது என்ன செய்யலாம் என யோசிக்கிறது, அப்போது கலைகள் யாவும் தெரிந்திட கலைமகள் அறிவை படிப்படியாக
கற்றுக்கொள்ள வழி சமைத்துவிடுகிறாள் அறிவுப்பசிதீர்ந்து குழந்தையாக, இருந்து இளைஞனாக மாறும் போது வாழ்வை வளமாக்க சிந்திக்கின்றனர். வாழ்வின் வளம் அதைப்பெற அலைபாயும் மனதோடு அலையத்தொடங்கி விடுகின்றனர். நிலையற்ற செல்வத்தை நிலை என்று பொருளீட்டுவதற்கு போட்டி போட்டுக்கொண்டு முனைகின்றனர். அலைமகள் யாவருக்கும் துணை செய்ய செல்வம் தேடி மகிழ்வில் களிக்கின்றனர்.
இதற்கு போதிய தைரியத்தை தர மலைமகளான மலைவாழும் சிவனின் சக்தி பார்வதியின் அவதாரமான துர்க்கை எழுகிறாள். துக்கங்களைப் போக்கி துணிவையும் எதையும் எம்மால் பெறவல்ல ஆற்றலையும் அழிக்கிறாள். அடுத்து மதியூகத்துடன் நாம் பொருள் ஈட்டுவதற்கும் அதைக்காப்பதற்கும் எப்போதும் அறிவுபூர்வமாகச் சிந்தித்து செயல் பட சகலகலாவல்லவனாக மாற்றிட கலைமகளான சரஸ்வதி பிரம்மதேவனின் பத்தினி உதவுகிறாள். அறிவோடு செயல் புரிந்து பொருள் ஈட்ட அலைமகளாக மகாலஸ்மி திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் ஶ்ரீ மகாவிஸ்ணுவின் மார்பில் உறையும் பத்தினியாக விளங்கி சகலசெளபாக்கியத்தையும் சகலருக்கும் அளிக்கின்றாள்..
இப்படி அருளும் பொருளும் புகழும் என பலவற்றையும் அழிக்கும் சக்திகளை வழிபாடாற்றவே நவராத்திரி விழாகொண்டாடப்படுகிறது. இந் நாளில் கும்பம் வைத்து கொலுவைத்து வீடுகளில் அலங்கரித்து கோலம் இட்டு விளக்கேற்றி பூவாலும் குங்குமத்தாலும் அர்ச்சிப்பர். புரட்டாதி மாதத்தில் வரும் அமாவாசைக்குஅடுத்த நாள் பிரதமை முதல் விஜயதசமி வரை பத்து நாட்கள் கொண்டாடப்படும் இச்சிறப்பு பூசைவழிபாட்டை அநேகம் பெண்கள் சிறுவர் சிறுமிகள் சேர்ந்து பஜனை பாடல்கள் பாடியும் வீணை வயலின் மிருதங்கம் முதலிய வாத்தியக்கருவிகளை இசைத்தும் சங்கீதம் இசைகள் பாடியும், பரதம் நடனம்,நாட்டியம் ஆடியும் கலை அரசியை வாழ்த்திப் பாடுவர்.
எல்லோருக்கும் தொழில் விருத்தியடைய ஆயுத பூஜையில் அவர்களின் உற்பத்தி சாதனங்களை வைத்து பூஜிப்பர். எத்தொழிலை ஆரம்பிப்போரும் விஜயதசமி நாளில் ஆரம்பித்து எக்காரியத்தையும் முன்னெடுப்பர். ஆரம்பக்கல்வி ஏடுதொடக்குதல் சங்கீத இசை வாத்தியங்கள் பழகஆரம்பித்தல் இப்படி தொடங்குவர். வாழ்வில் பலபடிகளைக் கடக்க ஆயகலகலைகளை கற்றுத்தேர எமக்கு உயிர்கொடுத்து உலகில் பிறந்தபயனை அனுபவிக்கச் செய்தவள் பராசக்தி தாயானவள் உயிர்க்குலத்திற்கு எவை எவை எப்பொழுது தேவையோ அவற்றை எல்லாம் இம்மூன்று சக்திகளின் துணை கொண்டு குறையின்றி நிறைவாகக் கொடுக்கின்றாள். கனம் கொள்ளாத.அறிவும், மனம் நிறைந்த தனமும், நிகரில்லா தன்னம்பிக்கையும் கொடுத்து எம்மை பரீட்சித்துப் பார்க்கின்றாள்.
நாம் என்ன செய்கிறோம். கற்ற கல்விஅறிவை தலைசுமந்து பணிவோடு இருக்கவேண்டும். மாறாக தலைக்கனமுடன் மதியாது நடக்கின்றோம்., விளவு விபரீதமாய் வாழ்வின் போக்கையே மாற்றி அமைக்கிறது..செல்வம் அளவோடு இருந்து அதை அறம் செய்து நிறைவோடு பொருள்பட வாழவே திருமகள் தருகிறாள். எதுவும் அளவிற்கு மீறினால் ஆபத்தில் முடிந்து விடும். அதற்கே துணிவு தைரியம் நம்பிக்கை இவற்றை கொடுத்து எம் துக்கங்களை போக்கி மகிழ்வோடு உறவோடு இருக்க துர்க்கை எமக்கு அருள்கிறாள். நாமோ எதற்கெடுத்தாலும் கொள்கை மாறான கருத்துகளையும் அசட்டுத்தனமாமான வீரப்பிரதாபங்களையும் காட்டி சொற்போர்
மற்போர் புரிந்து வீணே அழிவுக்கு ஆளாகின்றோம்.. செயற்கைத்தனமான செய்கைகளால் இயற்கையையும் மிஞ்சி விடுகிறோம். இயற்கை இயல்பு மாறினால் இப்பூமி மட்டுமல்லாது நாமும் எமது ஆக்கத்திறனும் கூட அழிவை நோக்கி செல்லும். அதனாலே புதிதாய் ஆரம்பிப்பது எதுவும் ஆக்கம் பெற்றால் நன்று. அதுவே அழிவை நோக்கிச் சென்றிடாது பார்த்த்துக் கொள்வது நல்லது. இதற்காகவே அந்நாளில் இந்த அறுபத்து நான்கு கலைகளைக் கற்று மனிதர் தமது வாழ்விற்கு வளம் சேர்த்தனர். எப்பொழுது அக்கலைகளின் பயன் பாடு உதவி செய்யுமோ அவற்றை அவ்வேளையில் பயன் படுத்திக் கொண்டனர். அதோடு இயற்கையோடு எளிமையோடு பரிசுத்தமாக வாழ்ந்திருந்தனர்.
மகிழ்வாகவும் மனநிறைவு கொண்டும் நல்லறிவாளர்களாகவும் வாழ்ந்திருந்தனர்.தெய்வங்களை வாழ்த்தி பாடி பணிந்திருந்தனர். இறைவியும் மனங்கனிந்து யாவருக்கும் அருள் புரிந்திருந்தாள். தெய்வம் எப்போதும் எல்லார்க்கும் தேவையை பூர்த்தி செய்து அருள் தரும். நாம் அவற்றை தகுந்தவாறு எமது நற்செயல்களாலும்,எம்மிடம் உள்ள பொருள்களைக் கொண்டு அறிவைப் பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.. சுபம்
- 4தமிழ்மீடியாவுக்காக அருந்தா