சைவசித்தாந்த ஸந்தானாச்சார்யரில் ஒருவராகிய, தில்லை கொற்றவன்குடி ஸ்ரீ உமாபதிசிவாச்சார்யர் அவர்களின் (சித்திரை - அஸ்தம்) குருபூஜை இன்று.
சைவசித்தாந்தம் வேத ஆகமங்களை முழுமையாக ஏற்க்கின்றது. அதோடு சித்தாந்தங்களுக்கு அடிப்படை ஆகமங்களே என தெளிவாக உரைக்கின்றது.
ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு இடைநிலைக் கருத்துக்களோடு பலர், சித்தாந்த தத்துவத்தில் புகுந்து சைவசித்தாந்தத்தை வேத ஆகம மரபில் இருந்து பிரிக்கும் பிரிவினையை பலவிதங்களில் மறைமுகமாக செய்தனர். ஆனால் சைவசித்தாந்துக்கு உரித்தாளார்களாக விளங்கும் சந்தானகுரவர்கள் வேத ஆகமங்களை போற்றி துதிக்கின்றனர்.
ஸ்ரீ உமாபதி சிவம் சித்தாந்த நூல்களில் எட்டுநூல்களை அருளிச்செய்தவர். இந்த எட்டு நூல்களும் சித்தாந்தஅஷ்டகம் என அழைக்கப்படுகின்றது.
அவை,
1)சிவப்பிரகாசம்
2)திருவருட்பயன்
3)வினாவெண்பா
4)போற்றிப் ப்ஃறொடை
5)கொடிக்கவி.
6)நெஞ்சுவிடு தூது
7)உண்மைநெறிவிளக்கம்.
8)சங்கற்ப நிராகரணம். இவையன்றி வடமொழியிலும் சித்தாந்த தத்துவங்களை விளக்கும் நூல்கள் இயற்றியுள்ளார்கள்.அவை,
1)பௌஷ்கர ஆகம பாஷ்யம்
2)ஸதரத்ன ஸங்கிரகம்.
3)குஞ்சிதாங்கிரிஸ்தவம்.
மேலும் ஆலயங்களுக்கு புராணம் எழுதும் மரபை ஏற்படுத்தியவர் ஸ்ரீ உமாபதிசிவம் அவர்களே. முதன்முதலில் இவர்களால் எழுதப்பட்ட புராணம் சிதம்பத்திற்க்குரிய கோயிற்புராணம் ஆகும். மேலும் மூவர்முதலிகள் தேவாரத்தலங்களை தொகுத்து திருப்பதிக்கோவை என்ற நூலும்,
பெரியபுராண அரங்கேற்ற வரலாறை கூறும் சேக்கிழார்புராணமும் என்ற நூலும், இவர்கள் பாடியுள்ளார்கள். இவ்வாறு சைவசமயத்திற்க்கு பெரும் திருத்தொண்டு செய்தவர்கள் ஸ்ரீ உமாபதிசிவாச்சார்யர்.
இவர்களுடைய அருள் வாக்கினாலேயே பல சைவசமயவரலாறும் இங்கே அறியப்படுகின்றன. இவர்கள் பாடிய உன்னதமான சிவப்பிராகசம் என்ற சைவசித்தாநூலில், பாடல் -7ல்,
"புறச்சமயத்தவர்க்கு இருளாய் அகசமயத்து ஒளியாய்,
புகல் அளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப்,
பிறப்பு இலதாய் இருள்வெளி போல் பேதமும் செற்பொருள் போல்,
பேதாபேதமும் இன்றிப், பெருநூல் சொன்ன,
அறத்தினால் விளைவதாய் உடல் உயிர்கண் அருக்கன்,
அறிவு ஒளிபோல், பிறிவு அரும் அத்துவிதம் ஆகும்,
சிறப்பினதாய் வேதாந்ததெளிவாம் சைவசித்தாந்ததிறன் இங்குத் தெரிக்கல் உற்றாம். " என்று பாடுகின்றார். இங்கே வேதாந்த தெளிவே சைவசித்தாந்தம் என தெளிவாக உரைக்கின்றார்.
அதே சிவப்பிரகாசம் பாடல் - 99 ல்,வேதத்தலைதருபொருளாய் - என பாடுகின்றார்.வேதத் தலை - என்ற வேத சிரசு. அதாவது உபநிஷத்துக்கள்.
இங்கு சுட்டப்படும் வேதாந்தம் என்பது சைவவேதாந்தமாகும். அதர்வசிரசு, அதர்வசிகா,பிருகஜ்ஜாபாலம் போன்றன.
இவ்வாறு நம் சைவசமய அருளாளர்கள் மிகத்தெளிவாக வேத வேதாந்த சிவாகம சித்தாந்தங்களை தெளிவாக போற்றி பாடியருளி இருக்க,
இதற்கு மாறாக எவர் வேத வேதாந்தங்களை, ஆகமங்களை நேரிடையாக மறைமுகமாக இகழ்ந்தாலும், அதற்க்கான தூண்டுதலை செய்தாலும் அவர் சைவர் ஆகார். அவர் புறப்புறச்சமயத்தவரே.
குருபூஜை நாளில் இந்த அடிப்படை தன்மையை உணர்ந்து சிவ அடிமைசெய்வோம்.
சிவார்ப்பணம்.
- தில்லை கார்த்திகேயசிவம்.