உலகம் தோன்றியது ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. இதற்கான விடை சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவத்தில் அமைந்திருக்கிறது.
அவரது நான்கு திருக் கரங்களில், இரண்டு திருக்கரங்கள் நடனத்திற்கு ஏற்ப அபிநயம் பிடிக்க, மற்ற இரண்டுக் கரங்களும் அக்னியையும், உடுக்கையையும் பிடித்தபடி உள்ளது. ஒலியினைக் குறிப்பது உடுக்கை. அக்னி ஒளியைக் குறிக்கிறது. ஒலியையும் ஒளியையும் உருவாக்கி, இறுதியில் அவற்றைத் தன்னில் ஒடுக்குவதும் நடராஜப் பெருமானே என்கின்றன சிவ வடிவம் குறித்த நூல்கள்.
‘அவனின்றி அணுவும் அசையாது’. உலக இயக்கமே நடராஜப் பெருமானின் திருநடனத்திலேயே இயங்குகிறது. ஒலியாலும், ஒளியாலும் உலகைப் படைத்து, பின் தனக்குள்ளே ஒடுக்கிக் கொள்ளும் தத்துவத்தை வெளிப்படையாக உணர்த்தும், அதி அற்புதக் கோலம் நடராஜரின் திருவடிவம். உணர்வதற்கு அரிதான இந்த உருவத்தை சிவாலயங்களில் கண்டு தரிசிக்கலாம்.
கோயில் நகரம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள கோனேரிராஜபுரத்தில் உள்ள சிவாலயத்தில் ஐந்தடி உயர பஞ்சலோகத்தால் ஆன சுயம்பு நடராஜர் அருட்காட்சி தருகிறார். இவரின் திருவுருவத்தில், மனித உடலில் இருப்பது போன்று மார்பில் மருவுவும், முடியும் காணப்படுகிறது. இந்த உயிரோட்டமான விக்கிரகம் இத்தலத்திற்கு எப்படி வந்தது?.
கோனேரிராஜபுரம் சிவாலயத்தில், நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்சலோக நடராஜர் விக்கிரகத்தை வடித்துத் தர உத்தரவிட்டார் மன்னர். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.
சிவ பக்தரான சிற்பி, ஈசனை வணங்கி பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோகக் கூழை அதாவது பஞ்சலோகத்தை தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார்.
அப்போது சிவபெருமான் புலையனாக கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு, அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி அந்தப் பகுதியில் தோன்றினர். அவர்கள் இருவரும் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். அறியாமையால் அங்கிருந்தவர்கள் இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர்.
சிவனாரும் பார்வதியும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர். சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது தண்ணீர்?. உலோகக் கூழ் தான் இருக்கிறது, குடியுங்கள்’ என்று அந்த தம்பதியிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகினர்.
மறு நொடியே அந்த தம்பதி, நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையுமாக மாறினார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் ஆச்சரியத்தில் திளைத்தான்!
இவ்வளவு அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது என்று சிற்பியைக் கேட்டான் மன்னன். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய் சொல்கிறான் என நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீரிட்டது. அதே நேரம் மன்னனுக்கு தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும் சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரம் வேண்டினான்.
‘இவ்வூர் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம்’ என்று ஈசன் அருளினார். அதன்படியே செய்த மன்னன் குணமடைந்தான். இத்தல வைத்தியநாத சுவாமியின் அருளால், புரூவரஸ் என்னும் மன்னனும் தன் நோய் நீங்கப் பெற்றான்.
இங்கு வைத்தியநாத சுவாமியின் விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது. இவருக்கு வைகாசி விசாகத்தில் சிறப்பாக உற்ஸவம் நடைபெறுகிறது. இன்றும் தீர்க்க முடியாத சகல நோய்களையும் இத்தல வைத்தியநாத சுவாமி தீர்த்து வைப்பதாக நம்பிக்கை!
அடுத்து இங்கே, ஸ்ரீமுத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம், கைவிரல் ரேகைகள், அக்குளில் உள்ள தேமல் யாவும் இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவர் என்பதை மெய்ப்பிக்கிறது!
மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம் அபிஷேகம் இத்தல சுயம்பு நடராஜருக்கு சிறப்பாக செய்யப்படுகிறது. ஈசனே மனித வடிவில் வந்து, இத்தலத்தில் இருக்கும் நடராஜராய் உருவானதால், மார்கழி திருவாதிரையில் கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜரைத் தரிசித்தால், சந்ததி சிறக்க சந்தோஷமாய் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!.
- சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்