free website hit counter

இந்துக்களுக்கு மிகச்சிறப்பான ஆடி மாதம்

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்துக்களின் முக்கிய மத அனுஷ்டானங்களுக்குரிய ஒரு மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. அம்பிகையை ஒவ்வொரு வருடமும் ஆடிமாதத்தில் ஆராதனை செய்து வழிபாடாற்றுவது இந்துக்கள் கடமையாகக் கருதி வணங்கி வருகின்றனர்.

உத்தராயணம் முடிந்து தட்சணாயணம் பிறந்துள்ள காலமாகிய ஆடி முதல் மார்கழி வரையான ஆறுமாதங்களும் தெய்வங்களை முறைப்படி பூஜை ஆராதனை செய்து வழிபடுவர். உத்தராயணம் ஆறுமாதங்களும் தை முதல் ஆனி வரை தேவர்களுக்கு பகல்பொழுது பூலோகத்தவர்களாகிய மனிதர்க்கு கோடைகாலம் ஆகவும், தெட்சணாயணம் ஆறுமாதங்களும் ஆடி முதல் மார்கழி வரை தேவர்களுக்கு இரவுப்பொழுது, இங்கே பூமியில் மனிதர்க்கு மாரிகாலமாகவும் திகழ்கிறது. இப்படி ஆறுமாதங்கள் பகலாகவும் ஆறுமாதங்கள் இரவாகவும் எமக்கு ஒருவருடம் அவர்களுக்கு ஒருநாளாக அமையுமாறு இறைவன் படைத்துள்ளார் என இந்துதர்மம் கூறுகிறது.

ஆகவே இக்கணிப்பின் படி பார்த்தால் தேவர்களின் ஒருநாளில் அதாவது இருபத்துநான்கு மணிநேரத்தில் பன்னிரெண்டு மணி நேரம் இறைவனை துதி செய்ய அதிகூடிய வாய்ப்பை ஏற்படுத்தவே ஆடி தொடக்கம் - மார்கழி வரையிலான காலப்பகுதியில் அதிகூடிய விரத நாட்களுடன், பக்தியை வளர்க்க ஏற்ற காலமாக அமைந்துள்ளது.

இந்து தர்மத்தின் படி தேவாதி தேவர்களுக்கு எல்லாம் அன்னை என விளங்கியும், அகிலலோகத்திற்கும் தாயாக விளங்கி வருபவளுமாகிய ஆதிபராசக்தி தாயை தேவர்களுக்கு அந்திமாலை நேரமாகும் பொழுதாகிய அந்தி வேளையில், கூழ் கஞ்சி கழி என காச்சிப்படைத்து எளிமையான வேப்பிலை மாலை எலுமிச்சைகனி மாலை அணிவித்து நெய் விளக்கேற்றி வழிபடுவடு சிறப்பாகும் எனக் கூறப்படுகிறது.

அவளுக்கு பிடித்த பட்டுப்பாவாடை, தாவணி, மஞ்சள், குங்குமம், வளையல்கள், தாலி, மஞ்சள், கயிறு பூக்கள், பலவித மலர்களால் ஆன மாலைகள் இவற்றினால் அலங்காரம் செய்து பொங்கி படையலிட்டு பட்சணங்கள் பலசெய்து படைத்து பூஜித்தல் நலமாகும். இலக்குமியாக, சரஸ்வதியாக, துர்க்கையாக சகல சக்திகளாகவும் அருள்தரும் அன்னை எமக்காக தவம் பல இருந்தும் துன்பங்களைத் தாங்கி பல இன்னல்கள் அனுபவித்தும் சிவனிடம் அரிய பலவரங்களைப் பெற்று எங்கும் வியாபித்து தனது சக்தியால் அனைத்து உயிர்களையும் வல்லமை பொருந்தியவர்களாக மாற்றி என்றும் காத்திடுகிறார். இதனால் ஆதிபராசக்திக்கு ஏற்றாற் போல் ஆடிச்செவ்வாய், ஆடிவெள்ளி, ஆடிப்பெளர்ணமி, ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடிஅமாவாசை, ஆடிப்பூரம், வரலஸ்மிவிரதம், இப்படி பல விரதவிழாக்கள் இந்த மாதத்தின் தொடர்ச்சியாக அமையப்பெறுகின்றன.

ஆடிமாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, நான்குவாரங்களும் இராகு காலத்தில் வழிபடுவது, மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. இராகு நேரத்தில் துர்க்கையம்மனை எலுமிச்சம்கனி கொண்டு நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதால் செவ்வாய்தோஷம், நாகதோஷம், இராகு கேது தோஷம் நீங்கும். துர்க்கையாக மட்டுமல்லாது இம்மாதத்தில் அம்பிகையை லஷ்மியாகவும் துதி செய்து வழிபாடாற்றுவதால், எமக்கு பல வித சௌபாக்கியங்களும் பெருகும்.

ஆக்குவதும் அளிப்பதுவும் அன்னையின் அருள் அன்றோ. அவள் மனது வைத்தால்தான் நன்மை தரும் விடயங்கள் ஒன்றை உருவாக்கிடவும் முடியும், அதே சமயம் தீமைகளை அழித்திடவும் முடியும். எதை மனிதர்க்கு தருவது என்பதில் அம்பிகையால் தரம் அறிந்து தரப்படும் ஒரு ஒப்புயர்வற்ற தெய்வம். அத்தெய்வத்தை அபிராமிப்பட்டர் எப்படி அபிராமி அந்தாதியால் துதி செய்கிறார். அவரது இன்சுவைத்தேன் தமிழ் தரம் எப்படியானது. அம்பிகையை இசைகொண்டு எப்படிப்பாடுகிறார், என்றால்,

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத்தகாது தரியலர் தம்
புரம் அன்று எரியப் பொருப்பு வில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்றகை யான் இடப்பாகம் சிறந்தவளே.

என்று பரகதி அடைந்து தரமுயர்த்திட புரமெரித்த ஈசனின் தரம்பழித்த அயனின் சிரமழித்த சிவசக்தியாய் இடப்பாகமதில் சிறந்தவளாய் சிவனின் சரிபாதியாக இருக்கும் தாயாய் இருப்பவளே என்னையும் நம்பிக்கைத்தரமாக இருப்பவர் மத்தியில் உயர்த்திடு என நம்பிக்கையுடன் பாடுகிறார்.

இப்படி எல்லாவிதமான வினைகளையும் உஷ்ண சம்பந்தமான நோய் வினைகளையும் தீர்ப்பாள் என்ற காரணத்தால் நம்பிக்கை கொண்டு அன்னை வழிபாட்டில் ஈடுபாட்டுடன் நாம் பக்தி செலுத்த வேண்டும். இந்த தாய் தன்குமரனான முருகனுக்கு சக்தி வேலைத்தந்து அசுரரை அழிக்கச்செய்தவள். இச்சாசக்தியாக கிரியா சக்தியாக ஞானசக்தியாக விளங்கி வரும் சக்தியின் மைந்தன் சத்தாகிய சிவனின் சித்தாகிய முருகன் ஆனந்தமாகிய அம்பிகையின் ஞானப்பாலை உண்டு சச்சிதானந்தமாக வீற்றிருக்கின்றான். அவன் இச்சாசக்தியாக, வள்ளியம்மையையும், கிரியாசக்தியாக தெய்வானையம்மையையும் கொண்டு விளங்கும் கந்தன் சக்திவேலைக் கையில் ஞானவேலாகக் கொண்டு விளங்கும் ஆறுமுகமாகத் திகழ்கிறான்.

இச்சாசக்தியாக,வள்ளியம்மையையும், கிரியாசக்தியாக தெய்வானையம்மையையும் கொண்டு விளங்கும் கந்தன் சக்திவேலைக் கையில் ஞானவேலாகக் கொண்டு விளங்கும் ஆறுமுகமாகத் திகழ்கிறான். அன்னை தந்தையுடன் நடுவில் வீற்றிருந்து சோமாஸ்கந்த மூர்த்தமாக காட்சி கொடுக்கிறான். சிவன் எனும் பரத்திற்கே குருவாய் பிரணவமந்திரத்தை உபதேசித்து குருபரன் என்றும் ஸ்வாமிநாதன் என்றும், தேவதேவன் என்றும் பல பெயர்களால் அர்ச்சிக்கப் படுபவன்.

அத்தைகைய அரியபேறு பெற்ற சண்முகன், சிவனின் நெற்றிக்கண்களில் இருந்து அதாவது ஈசானம், தத்புருஷம், அகோரம், ஸத்யோஜாதம், வாமதேவம், ஆகிய ஐந்து திருமுகங்களுடன் பரம ஞானியர்க்கு மட்டும் தெரியும் அதோமுகத்தையும் சேர்த்து ஆறுமுகங்களின் நெற்றிக்கண்ணில் ஆறுபொறிகளில் இருந்து பெறப்பட்ட அருட்பெருஞ்ஜோதி இறைவனாக உருவாகியது.

பெரும் ஜோதி வெப்புடன் உலகில் பரவி காற்றாலும் அக்கினியாலும் எடுத்துச்செல்லப் பட்டு கங்கையில் விட கங்கையவள் சரவணப்பொய்கையில் கொண்டு சேர்க்க அங்கே ஆறு தாமரைமலர்களில் அறுமுகன் ஆண்பிள்ளையாக அவதரித்தார். ஆணால் உருவாகிய ஆண்பிள்ளை ஆனாலும் தாய்தன்பால் அணைத்து ஆறுமுகமும், ஓருடலில் ஒன்று சேர்ந்து சண்முகமாய்த் தோன்றிட வழி செய்கிறாள். உமாதேவியார் ஞானமாகிய சக்திவேல் தந்து சரவணனுக்கு உறுதுணை புரிகிறார். ஆனாலும் சக்தி ஈசனின் ஒருபாதி அர்த்தநாரீஸ்வரராகவும் இணைந்து காட்சி தருகிறார்.

இதற்கு காரணம் ஆணும், பெண்ணும் சமமானவர்கள், ஆணுக்குபெண் சரிநிகரானவர் என்பதை உலகிற்கு உணர்த்திடவே ஆகும். இப்படி சரிநிகர் சமமாக உள்ள சிவமும் சக்தியும் நாதமும், விந்துவும் சக்தி நாதமயமானவர் சிவம் விந்தானவர். ஆக தனு கரண புவன போகத்தை முதற் காரணத்தினின்றுந் தோற்றுவிக்க படைத்தலையும், இவற்றை நிறுத்த காத்தலையும், முதற் காரணத்தில் ஒடுக்க அழித்தலையும், ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்த மறைத்தலையும், ஆன்மாக்களுக்கு சிவத்துவத்தை விளக்க அருளலையும் ஆகிய ஐந்தொழிலையும் புரிகின்றார்.

ஆகவே தனுவாகிய உடம்புக்கு கரணமாகிய மனம் கருவியாக எம்முடம்புக்கு ஆதாரமாகிய புவனத்தில் போகிக்க அனுபவிக்கப்படும் பொருளாக இறைசக்தி துணை புரிகிறது. சிவசக்தியாக அக்கினியில் சூடுபோல சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை பொருந்தியவளாகிய அன்னை சக்தி இப்பிரபஞ்சமாகிய காரியத்திற்கு காரணமானவர்களாகவும் விளங்குகின்றனர். இதில், சிவசக்தி துணைக்காரணமாகவும், நிமித்தகாரணமாக சிவபெருமானும் விளங்குகின்றனர். சிவம் உலகிற்கு கர்த்தாவாய் உள்ளவர். சக்தியோ இயக்கம் பெற்று இவ்வுலகு இயங்க வழிவகுப்பவள். அவளது சக்திக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டது எதுவும் இல்லை.

இறைவன் படைத்த உயிர்களுக்கு ஓசை கொடுப்பவள், ஒளிகொடுப்பவள், சுவை கொடுப்பவள், உணர்வு கொடுப்பவள், உயிர் கொடுப்பவள் இப்படி ஐம்புலனுக்கும் ஐம்பொறிகளாக விளங்குபவள் எம் அரிய அன்னையன்றோ. எம்நாவில் இசையாக ஒலிப்பவள், இனிமைதரும் சங்கீதரசிகையாகவும் இருப்பவள் சக்திதாய், கலைகளுக்கு எல்லாம் தாயாக, கலைவாணியாக விளங்குபவள். வித்யாரூபிணியாய் திகழ்பவள் அவ்வரிய அன்னையின் அளப்பரிய ஆற்றல்களுக்கு ஈடுஇணை ஏது. அப்படிவிளங்கிய தாயின் கொலுசுகளில் பிறந்த நவமணிகளும், அரிய சக்தி பெற்றவரன்றோ. அதனால் லலிதா நவரத்னமாலையாக அவர்களை பாடிப்பரவி அற்புதசக்தி அடையவென்று இன்றும் பாமாலையாக இறைவிக்குத் தொடுக்கிறோம். நவசக்திகளின் அற்புதத்தை எப்படிச்சொல்வது, அதுவும் அவள் அருளன்றோ.

தாயாய் எங்கும் வியாபித்து தயாபரியாய் எவருக்கும் அன்புடன் இரட்சிப்பவளாக ஆதிபராசக்தியாய் இருப்பவளாலேயே எல்லாம் நடக்கும். சுப்பிரமண்யனின் உற்பத்தி சிவனின் நெற்றிக்கண்களில் இருந்து தோன்றிய தீப்பொறிகளின் வாயிலாக புறப்பட்ட அந்த அருட்பெரும் ஜோதியின் வெப்பம் தாளாது உமை அம்மை சிறிது அச்சமடைய அவர் பாதக்கொலுசுகளில் இருந்து சிதறுகிற நவமணிகள் நவசக்திகளாக உருமாறி சிவனைத்தொழுது நின்றனர். சிவனின் பார்வை பட்டதால் நவசக்திகள் கருத்தரித்தனர். இதனைக்கண்ட உமாதேவியார் நீங்கள் எனக்கு மாறாகியதால் நிண்டகாலம் கர்ப்பத்துடன் இருக்ககடவீர் எனச்சாபமிட அவர்கள் அஞ்சிநடுங்கி உடல்வியர்க்க நின்றனர். அவர்கள் வியர்வையில் சிவன் அருளால் ஒரு இலட்சம் வீரர்கள் உதித்தனர். அவர்கள் கண்ணுதற்கரிய கடவுளாகிய சிவனடி தொழுதிட அவர்களை முருகவேளுக்கு ஏவல் செய்யுமாறு பணித்தார்கள்.

ஆக்குவதும் அழிப்பதுவும் இறைவனின் திருவிளையாடல்களே. ஆக உமாதேவியாரால் சபிக்கப்பட்ட இந்நவசக்திகள் நடுநடுங்கி மகேஸ்வரியை மனதாராப் பிரார்த்தித்துக் கொண்டு கற்பத்துடன் பலகாலம் இருந்தார்கள். கற்பபாரத்தை தாங்க முடியாது, சிவயோகம் செய்து கருவிலேயே பெரியவர்களாக வளர்ந்த புதல்வர்களை ஈன்றெடுக்கச் செய்ய அருள் செய்ய வேண்டும் என சிவசக்தியை நவசக்திகள் வேண்டி வலியுறுத்தினர். சிவனும் உமையை நோக்கி உன் கால் சிலம்பில் தோன்றிய நவமணிசக்திகளின் சாபத்தை நீக்கி புதல்வர்களைப் பெற திருவருள் செய்க எனப்பணிக்கிறார். சக்தியும் சினம் நீங்கிபுன் முறுவல் பூத்தாள். ஆற்றலிற் சிறந்த அரும் புதல்வர்களைப் பெறகடவீர்களாக எனத்திருவாய் மலர்ந்தாள். அவளின் அற்புத சக்தியால் கருவிலிருந்த வீரர்கள் உந்திவழியாக உதித்து வந்தனர்.

அரிய பேறு பெற்ற நவவீரர்கள் வீரவாகு தேவர் முதாலான ஒன்பது பேரும் நவசக்திகளிடம் இருந்து பிறந்தனர். இந்த ஒன்பது பேரும் அவதரித்து ஆறுமுகனுக்கு நவவீரதீரராக அரியசக்தி பெற்றவர்களாக அதிதீரர்களாக சிவசக்தியின் அருள் பெற்று துணையாக நின்றனர், அம்பிகை சாபமிட்டதும் உலகநன்மைக்காகவே என இதன்வழி அறிந்து கொள்ளலாம். அம்பிகை வரத்தையே சாபமாக மறைத்துத்தந்தார். நீண்டநாள் கருவில் ஊறி பிறக்கும் குழந்தைகள்தான் சர்வவல்லமை பொருந்தியதாக இருப்பார்கள். ஆக அம்பிகை வரம் தரும் வரலஸ்மியாக எப்போதும் திகழ்வாள். எனவே இந்துக்களுக்கு மிகச்சிறப்பான மாதங்களில் ஒன்றான இந்த ஆடி மாதம் சிவன், சக்தி, கந்தன் என அனைவரையும் போற்றும் உகந்த மாதமாகியதால் நாமும் வழிபாடாற்றி வணங்கிடுவோம்.

- 4தமிழ்மீடியாவுக்காக அருந்தா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction