அன்பேசிவம் எனில் -"மொழி கடந்த மனிதநேயம் ". ' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..' எனத் தொடங்கும் குறளினிலே தென்னாப்புலவன் வள்ளுவன் உயிர்களிடத்திலேயோன ஒற்றுமையைக் குறிப்பிடுகின்றான்.
எந்தவொரு உயிரும் பிறப்பின் முன்னால் கருவே. அது திருவருளால் பிறக்கும் போது உயிராகவும், உணர்வாகவும் ஆகி, வளரும் போதே வாழ்நிலையில் வெவ்வேறு பரிணாமம் பெறுகின்றது. முடிவில் மரணத்தின் பின்னால் யாவும் ஆத்மாக்களாக சாந்தியுற வேண்டுகின்றன. இவ்வாறே சமயங்களின் தர்மங்களும் வாழ்வியல் கூறுகின்றன. இந்த வாழ்வியல் சிறப்பினை தத்துவார்த்திகளும், சிந்தனையாளர்களும், மனிதநேயம் என விழிக்கின்றார்கள்.
யாழ்ப்பாணம் A9 வீதியில் முகாமாலை ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடம். இங்கே சூரிச் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பேசிவம் அறக்கட்டளையினால் நடாத்தப்பட்டு வருகின்றது சிவபுரவளாக மூதாளர் அன்பு இல்லம். இந்த இல்லத்திற்கு வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து , வவுனியா மாவட்டம் குச்சுக்குடி கிராமத்தில் இருந்து W.சாமுவேல் அப்புக்காமி செல்டன் எனும் மூதாளர் சிறுநீரகங்கள் செயலிழந்தும் புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பாரப்படுத்துவதற்கும், கவனிப்பதற்கும், உற்றார் உறவினர்கள் யாரும் இல்லாத நிலை. சிவபுரவளாக மூதாளர் அன்பு இல்லம் அவரை ஏற்றுப் பராமரிக்க முடியுமா ? என வேண்டுகோள் வைக்கபடுகின்றது.
சிவபுரவளாக மூதாளர் அன்பு இல்லம், வவுனியா பொது வைத்தியசாலையின் அந்த வேண்டுகோளை மனிதாபிமானத்துடன் ஏற்றுக்கொண்டு, சகோதர இனத்தினைச் சேர்ந்த மூதாளர் W.சாமுவேல் அப்புக்காமி செல்டன் அவர்களை இனம் மதம் மொழி வேறுபாடு கடந்து, பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது.
தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு, அன்பு இல்ல ஊழியர்களின் அன்பான பராமரிப்பில், நலமாக இருந்து இருந்து வந்த நிலையில் 09.05.2023 அன்று இயற்கை மரணம் எய்தினார். மூதாளர் இல்லத்தில் தனது அந்திமத்தை அமைதியாகக் கழித்துச் சென்ற, அவரது பூதவுடல் மாலை 5.30 மணிக்கு அஞ்சலிக்காக சிவபுரவளாகத்தில் வைக்கப்பட்டு, அவருக்கான இறுதிச் சடங்குகளும் மரியாதையும், அன்பு இல்ல மூதாளர்கள் நிர்வாகத்தினர் ஊழியர்கள் என அனைவரின் உணர்வுபூர்வமான பங்குபற்றுதலுடனும், மிகுந்த நெகிழ்ச்சியுடனும், நடைபெற்று, இன்று இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்மக்களுக்கான வழிபாட்டுச் சுதந்திரங்களையும், வாழ்வாதாரங்களையும், மறுத்து நிற்கும் அரசியற் சூட்சுமங்கள் நிறைந்த நிலத்தினில், அத்தனையையும் ஓரங்கட்டிவிட்டு, உளமார்ந்த பணியாக , உறுதிமிகு நோக்காக, அன்பேசிவம் என்பதை வார்த்தையலங்காரமாக அல்லாது வாழ்வின் நிதர்சனமாக மாற்றிய சிவபுரவளாக மூதாளர் இல்லத்தின் சீரிய பணியில், அமைதியுற்ற அப்புகாமியின் ஆத்மா, இந்த வைகாசித் திங்களில் வையகத்திற்கு நிச்சயம் ஒர் புதிய செய்தியினை சொல்லி வாழ்த்தும் எனலாம்.