free website hit counter

ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் முக்தி

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வாழும் ஆழ்வார் எனவும், ஸ்ரீ கிருஷ்ண பிரேமி எனவும், பிரேமி அண்ணா எனவும், பிரேமி சுவாமிகள் எனவும் ஸ்ரீ அண்ணா எனவும் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள், அவர் எக்கணமும் நேசித்த ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் சரணடைந்தார்.

கடந்த சில நாட்களாக வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவாக இருந்த ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள், சென்னையில், நேற்று இரவு 2 மணிக்கு, முக்தி அடைகையில் அவருக்கு வயது 89.

சங்கநல்லூரில் ஒரு சிறிய கிராமத்தில் 1934ம் ஆண்டு பிறந்த அவர், இளவயது முதலே யோகத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இறைவனை அடைவதற்கான எளிதான வழி, பக்தியின் பாதை என்பதை உணர்ந்து, ஸ்ரீ பகவான் நாம போதேந்திராளை தனது மானசீக குருவாகப் போற்றி, ஸ்ரீமத் பாகவதத்தை தனது பிரமாண கிரந்தமாக எடுத்துக் கொண்டார்.

ஸ்ரீ கிருஷ்ணரை தெய்வமாக வழிபட்ட அவர், பரனூரில் கிருஷ்ணருக்கு அற்புதமான கோவிலை கட்டி, அங்கேயே வாழ துவங்கினார் பிரேமி சுவாமிகள். பரனூரில் இறைவனின் பூஜையின் போது பாடப்பட்டு வருகின்ற பல பாடல்கள் இவர் எழுதியவை. மேலும் ராகவ ஷதகம், ராதிகா ஷதகம், யுகல ஷதகம், கோவிந்த ஷதகம், ரங்க ஷதகம் போன்ற பல ஷதகங்களில், ஒவ்வொரு ஷதகத்திலும், 100 கிருதிகள் உள்ளவாறு இதுவரை 1000 கிருதிகளுக்கு மேல் இயற்றியுள்ளார்.

இந்திய மக்களின் மனதில் பக்தியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப, கன்னியாகுமரி முதல் இமயமலை வரை இந்தியா முழுவதும் பலமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், பக்தவிஜயம், பகவத் கீதை, ஆழ்வார்கள் வைபவம், ஸ்ரீமத் பாகவதம், உபநிடதங்கள் போன்ற பல தலைப்புகளில், பல நகரங்களில் சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளார். அறிவின் கடலாகவும், ஞானத்தின் தேக்கமாகவும் இருந்த அவர், பேசாத தலைப்பு இல்லை எனலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula