website analysis

நவராத்திரி  ஒன்பது இரவுகளின் ஒன்பது அர்த்தங்கள்

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆண்டுதோறும் நவராத்திரி வருகிறது. வீடுகளில் கொலு அலங்கரிக்கப்படுகிறது; ஆலயங்களில் அம்மனுக்கு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன; பக்திப் பாடல்கள் காற்றில் கலக்கின்றன; மாலைகள் மணக்கின்றன; விளக்குகள் ஒளிர்கின்றன. பெண்கள் மங்கலப் பொருட்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்; குழந்தைகள் கொலுப்படிகளில் அணிவகுத்திருக்கும் பொம்மைகளை வியப்புடன் ரசிக்கிறார்கள். ஒன்பது இரவுகளும் பத்தாம் நாளின் வெற்றிக் கொண்டாட்டத்தை நோக்கி நகர்கின்றன.

ஆனால், இத்தனை கொண்டாட்டங்களுக்கும் அப்பால் நவராத்திரி நம்மிடம் எழுப்பும் ஓர் அடிப்படையான கேள்வி இருக்கிறது. ஒன்பது நாட்கள் நாம் அன்னையை வழிபடுகிறோம். அந்த ஒன்பது நாட்களிலும் நமக்குள் என்ன மாற்றம் நிகழ்கிறது?

ஒவ்வொரு நாளும் ஒரு சக்தி; ஒரு குணம்; ஒரு வாழ்க்கைப் பாடம் ! இருளிலிருந்து ஒளிக்கு… பலவீனத்திலிருந்து துணிவுக்கு… அறியாமையிலிருந்து ஞானத்திற்கு… மனிதனை அவனுக்குள்ளேயே அழைத்துச் செல்லும் ஓர் ஆன்மீகப் பயணமே நவராத்திரி.

வீட்டின் வாசலில் ஏற்றிய விளக்கு நம் உள்ளத்திலும் ஒளியேற்றுகிறதா? அம்மனுக்குச் சூட்டிய மலர்கள் நமது எண்ணங்களிலும் நறுமணத்தைப் பரப்புகின்றனவா? கோயிலில் ஒலிக்கும் மந்திரங்கள் நமது அன்றாட வாழ்வின் செயல்களிலும் எதிரொலிக்கின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுவதற்கான ஓர் அழகிய வாய்ப்பாக நவராத்திரியை அணுகினால், அது வெறும் விழாவாக இல்லாமல், நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ளும் ஆன்மீகப் பயணமாக மாறிவிடும்.

ஒன்பது இரவுகள் -ஒன்பது உள்மாற்றங்கள்

இந்து மரபில் நவராத்திரி சக்தி வழிபாட்டிற்குரிய புனிதமான காலமாகப் போற்றப்படுகிறது. துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவியரின் வழிபாடுகளோடு இணைத்து, தீமையை வெல்லும் ஆற்றல், வாழ்வை வளப்படுத்தும் நற்பண்புகள், அறிவால் அறியாமையை அகற்றும் ஞானம் ஆகியவற்றை இந்த விழா நினைவூட்டுகிறது.

பிராந்தியத்திற்கும் குடும்ப மரபிற்கும் ஏற்ப வழிபாட்டு முறைகளும் ஒன்பது நாட்களுக்குரிய தேவியர் தொடர்பான விளக்கங்களும் மாறுபடலாம். எனினும், நவராத்திரியின் ஆன்மீகச் செய்தியை மனித வாழ்க்கையின் ஒன்பது நற்பண்புகளோடு இணைத்துப் பார்ப்பது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு சிந்தனைப் பாதையாகும்.

ஒவ்வொரு நாளையும் ஒரு கேள்வியுடன் தொடங்குவோம்:

இன்று நான் எந்தச் சக்தியை வளர்த்துக்கொள்ளப் போகிறேன்? எந்தக் குணத்தைச் செம்மைப்படுத்தப் போகிறேன்? எந்த வாழ்க்கைப் பாடத்தை நடைமுறைப்படுத்தப் போகிறேன்?

முதல் நாள் - துணிவு

சக்தி: அச்சத்தை எதிர்கொள்ளும் ஆற்றல்

நவராத்திரியின் முதல் படி துணிவு.

துர்க்கையின் திருவுருவத்தை நோக்கும்போது, பலருக்கும் நினைவுக்கு வருவது அவளுடைய வீரமும், அஞ்சாமையும், தீமையை எதிர்கொள்ளும் ஆற்றலும்தான். சிங்கத்தின் மீது அமர்ந்து, பல்வேறு ஆயுதங்களை ஏந்தி நிற்கும் அன்னையின் திருக்கோலம், அநீதிக்கு முன்னால் தலைகுனியாத மனவலிமையை நமக்கு உணர்த்துகிறது. ஆனால், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய அசுரர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தியவர்களாக இருப்பதில்லை.

சில நேரங்களில் நம்மைத் தடுத்து நிறுத்துவது தோல்வி குறித்த பயம். சில நேரங்களில் உண்மையைப் பேசுவதற்கான தயக்கம். சில நேரங்களில் தவறைத் தட்டிக்கேட்க முடியாத கோழைத்தனம். இன்னும் சில நேரங்களில், மாற்றம் தேவை என்பதை உணர்ந்தும் பழக்கத்தின் பிடியிலிருந்து விடுபட முடியாத மனநிலை.

துணிவு என்பது பயமே இல்லாத நிலை அல்ல; பயம் இருந்தாலும் நியாயமான பாதையில் நடப்பதற்கான மன உறுதி. 
ஒரு குழந்தை தவறு செய்ததை ஒப்புக்கொள்வதும் துணிவுதான். அநீதிக்கு ஆளாகும் ஒருவருக்காகக் குரல் கொடுப்பதும் துணிவுதான். தவறான பாதையில் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து திரும்புவதும் துணிவுதான்.

இதனால் வரக்கூடிய  வாழ்க்கைப் பாடம்; பயத்தினால் ஒத்திவைத்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல செயலை இன்று தொடங்குவோம். அன்னையை வணங்கும் நினைவோடு, அநீதியைக் கண்டும் மௌனமாக இருக்காத இதயத்தையும் வளர்த்துக்கொள்வோம்.

இரண்டாம் நாள் - பொறுமை

சக்தி: சோதனைகளிலும் நிலைத்திருக்கும் மனம்

வாழ்க்கை நாம் விரும்பும் வேகத்தில் எப்போதும் நகர்வதில்லை. விதைத்த விதை உடனே மரமாவதில்லை; படித்தவுடன் அறிவு முழுமையாவதில்லை; அன்பு செலுத்தியவுடன் எதிரிலிருப்பவரின் மனம் மாறிவிடுவதுமில்லை.

இயற்கையின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஒரு காலம் இருப்பதைப் போல, மனித வாழ்வின் ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காலம் தேவைப்படுகிறது.

பொறுமை என்பது எதையும் செய்யாமல் காத்திருப்பதல்ல. நாம் செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்துகொண்டு, அதன் விளைவுக்காக மனம் தளராமல் காத்திருப்பதாகும்.

ஒரு விவசாயி விதைத்த மறுநாளே அறுவடையை எதிர்பார்ப்பதில்லை. ஒரு தாய் குழந்தையின் ஒவ்வொரு தவறுக்கும் அன்பைத் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு ஆசிரியர் மாணவன் முதல் நாளிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.

அப்படியிருக்க, நம்முடைய வாழ்க்கையில் மட்டும் ஏன் எல்லாமே உடனடியாக நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்?
அவசரம் பல நேரங்களில் நமது முடிவுகளைத் தவறாக்குகிறது. கோபத்தில் பேசும் ஒரு சொல், பல ஆண்டுகள் வளர்த்த உறவைப் புண்படுத்திவிடலாம். ஒரு கண நேரத் தீர்மானம், நீண்டகால வாய்ப்பை இழக்கச் செய்துவிடலாம்.

இரண்டாம் நாளில்  வாழ்க்கைப் பாடம்; பதற்றத்தில் பதிலளிக்காமல், ஒரு கணம் நின்று சிந்தித்துப் பேசுவோம். பொறுமை என்பது பலவீனம் அல்ல; நம்முடைய உணர்ச்சிகளை நாமே வழிநடத்தும் வலிமை.

மூன்றாம் நாள் - தன்னம்பிக்கை

சக்தி: நம்முள் இருக்கும் ஆற்றலை உணர்தல்

மனிதன் பல நேரங்களில் தனது திறமையைவிட, தனது குறைகளையே பெரிதாக எண்ணுகிறான். மற்றவர்களின் வெற்றியைப் பார்த்துத் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறான். பிறருடைய வாழ்க்கையோடு தனது வாழ்க்கையை ஒப்பிட்டுக்கொண்டு, தன்னிடம் இருப்பவற்றின் மதிப்பைக்கூட மறந்துவிடுகிறான்.

ஆனால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனித்துவமான ஆற்றல் இருக்கிறது. ஒருவரிடம் அறிவு சிறப்பாக இருக்கலாம்; மற்றொருவரிடம் அன்பு நிறைந்திருக்கலாம். ஒருவரிடம் தலைமைப் பண்பு இருக்கலாம்; இன்னொருவரிடம் பிறரைப் புரிந்துகொள்ளும் நுட்பம் இருக்கலாம்.

அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அனைவரும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டிய தேவையும் இல்லை. சக்தி வழிபாடு நமக்குச் சொல்லும் முக்கியமான செய்திகளில் ஒன்று, நம்முள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து அதை நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.

தன்னம்பிக்கை என்பது “என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்று கர்வத்துடன் கூறுவது அல்ல. “என்னால் முடியாதவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்; தவறினால் திருத்திக்கொள்ள முடியும்; விழுந்தால் மீண்டும் எழ முடியும்” என்று நம்புவதாகும்.

மூன்றாம் நாள் வாழ்க்கைப் பாடம்; பிறருடன் ஒப்பிடுவதைவிட, நேற்றைய நம்மைவிட இன்று சிறிதாவது முன்னேற முயல்வோம். நம்மை நாமே நம்பத் தொங்கும்போது, நம்முள் உறங்கிக்கொண்டிருக்கும் பல கதவுகள் திறக்கத் தொடங்குகின்றன

கல்விக்கான மூன்று நாட்கள் பற்றி வரும் நாட்களில் பார்க்கலாம்...

- 4தமிழ்மீடியாவிற்காக : மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்