free website hit counter

கோலமா மஞ்சை தன்னில் குலவிய குமரன்

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கந்தபுராணத்தில் சூரன் கண்ட  முருகப்பெருமானின் விஸ்வரூபம் தரிசனம் விரிவாகப் பாடப்பெற்றுள்ளது.

கந்தக்கடவுள் போர்களத்தில் சமர்செய்து நிற்கும் சூரபத்மனுக்குஅண்டசாராசரங்களும் அடங்கிய தமது விஸ்வரூபத் திருக்காட்சியை அருள்கின்றார்.

"செஞ்சுடர் அநந்தகோடி செறிந்து ஒருங்கு உதித்தது என்ன,
விஞ்சிய கதிர்கான்று உள்ள வியன்பெரு வடிவை நோக்கி,
நெஞ்சகம் துளங்கி விண்ணோர் நின்றனர் நிமல மூர்த்தி,
அஞ்சல்மின் அஞ்சல்மின் என்று அருளினன் அமைந்த கையால். "

கோடிக்கணக்கான சூரியன் ஒன்று சேர்ந்து உதயமானது போன்று மிகுதியான ஒளிக்கதிர்களை வெளிப்படுவது போன்ற போரொளியாக விஸ்வரூப தரிசனத்தை நோக்கி தேவர்கள் அனைவரும் அச்சம் கொள்கின்றனர். முருகப்பெருமான் தம் அபயகரத்தால் அவர்களை அஞ்சாதீர் அஞ்சாதீர் என்று அருளினார்.  சூரனின் ஆணவாதி மயக்கத்தை நீக்கி சிறிது நல்_உணர்ச்சியை தந்தருளினார் அந்நிலையில் சூரபத்மன் முருகனது விஸ்வரூபகாட்சியை கண்டு , 

"கோலமா மஞ்சை தன்னில் குலவிய குமரன் தன்னைப்,
பாலன் என்று இருந்தேன் அந்நாள் பரிசு இவை உணர்ந்தி லேன்யான் ,
மால்அயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்,
மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ. "

அழகிய மயில் மீது வந்தருளிய குமரனை அன்று சிறுவன் என்று இகழ்ந்தேன். அவரது உண்மை தன்மையை அறியாதவனாகினேன் .ஆனால் இன்று உணர்ந்தேன் ..
திருமால், பிரம்மன் உள்ளிட்ட இந்திராதி தேவர்கள் மற்றுமுள்ள யாவர்க்கும் முதற்காரணமாகவும், மூலக்காரணமாகவும் விளங்குபவர் இக்கடவுளே என்பதை உணர்ந்தேன் .
"ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்,
பற்று இகல் இன்றி பராபரமுதல்வன் என்றே,
சொற்றனன் சொற்ற எல்லாம் துணிபு எனக் கொண்டிலேனால் ,
இற்றை இப்பொழுதில் ஈசன் இவன் எனும் தன்மை கண்டேன் "

முன்பு இங்கு தூதுவனாக வந்த வீரவாகு, முருகப்பெருமானை விருப்பு வெறுப்பு அற்ற பராபரமுதல்வன் என்று கூறினான் ..அன்று அதை என் மனம் ஏற்கவில்லை. ஆனால் இன்று  இவரே முழுமுதற் பரம்பொருள் என்பதை உணர்ந்தேன்.

"போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான,
தூயதோர் தோளும் கண்ணும் துடித்தன புவனம் எங்கும்,
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படுகின்ற விண்ணோர்,
நாயகன் வடிவம் கண்டேன் நற்றவப் பயன்ஈது அன்றோ."

முருகனது தரிசனத்தை கண்ட இந்நிலையில், அகந்தை அகன்றது, ஆணவம் அழிந்தது, ஞானம் பிறந்தது,வலப்பாக தோளும் கண்ணும் துடிக்கின்றது,

அகில உலகங்கள் அனைத்திலும் உள்ள அசையும் அசையா பொருட்கள் எல்லாம் தம்முள் காட்டிடும் தேவர்கள் தலைவனாகிய முருகப்பெருமானின் தரிசனத்தை எனது கண்களால் கண்டேன் ..இதுவே நான் செய்த தவப்பயன் என்றான் .

"சூழுதல் வேண்டும் தாள்கள், தொழுதிடல் வேண்டும் அங்கை,
தாழுதல் வேண்டும் சென்னி துதித்திடல் வேண்டும் தாலு,
ஆழுதல் வேண்டும் தீமை அகன்றுநான் இவற்கு ஆளாகி,
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே."

உண்மையில் என்மனம் என்ன நினைக்கின்றது என்றால், இப்பெருமானை என் கால்கள் வருந்த சுற்றி வருதல் வேண்டும். கைகளால் கூப்பி வணங்கவேண்டும். எம் சிரம் தாழ்த்தி இப்பெருமானை வணங்கவேண்டும், என் நாவினால் போற்றவேண்டும்,
என் அகந்தையை நீக்கி இப்பெருமானுக்கு அடிமையாகி வாழ்தல் வேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் இவ்வாறெல்லாம் செய்யாமல் என்னை தடுப்பது மானம் ஒன்றே என்றான்.

முருகப்பெருமானைப் போற்றுதல் செய்வது சூரனின் விருப்பமாக இருந்த போதும், நான் எனும் அகந்தை  தடுப்பதனால் அவனால் அதனைச் செய்ய முடியாது இருக்கிறது. 

மாமரமென மறைந்து நின்ற அவனது அகந்தையைப் பிழந்து கூறாக்கி, சேவலும் மயிலுமாகச் சூடி ஆட்கொள்கின்றான் முருகன். 

நாம் ஆணவ மலத்தினை அகற்றி, ஆட்கொண்டருளுமாறு முருகப் பெருமானின், பாதக் கமலங்களை பணிந்து போற்றுவோம். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction