கதிர்காமக் கந்தனின் புகழ் பரப்பும் முகமாக கொழும்பில் "கதிரைவேற் பெருமானே கருணை தேவே" எனும் நாட்டிய நாடக பெருவிழா இடம்பெறவுள்ளது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மும்மையாலும் புகழ்பெற்ற முருக வழிபாட்டு புண்ணிய கூடமாக இலங்கையில் பேரொளியாக விளங்கும் கதிர்காம தலத்தின் உற்சவ கால விசேஷத்தை முன்னிட்டு அத்தலத்தின் புராணத்தை எடுத்து இயம்பும் நாட்டிய நாடகமாக அரங்கேரவுள்ளது.
இது இந்திய - இலங்கைக் கலைஞர்கள் இணையும் பெரும் விழாவாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில் இலங்கையில் ஒரு புகழ்பெற்ற நடனப்பள்ளியான அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் நிறுவுனரும் பரதநாட்டியக் கலைஞருமான திவ்யா சுஜேனின் தயாரிப்பு மற்றும் நெறியாள்கையில் உருவாக்கப்பட்டு இந் நாட்டிய நாடகம் மேடையேற்றப்படுகிறது.
“மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்” கொள்ளுப் பெயரன் ராஜ்குமார் பாரதி இவ் நாட்டிய நாடகத்துக்கான இசையாக்கத்தினை அமைத்துள்ளார். மேலும், ஸ்ரீ சாய் ஷ்ரவணம் கீபோர்ட், ஒலி வடிவமைப்பினை வழங்குகிறார். மேலும் பல இந்திய இசை வாத்திய கலைஞர்கள் இசை பங்களிப்பு செய்துள்ளனர்.
அத்துடன் இந்தியாவின் பரதநாட்டியம் மற்றும் “களரி” நடனக் கலைஞரான மிருதுளா ராய் மற்றும் அவரது “நாட்டிய நிகேதன் நடனப்பள்ளி” மாணவிகளும் இணைந்து இந்த நாட்டிய நாடகத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வு வருகின்ற ஜுலை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள புதிய கதிரேசன் மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.