free website hit counter

அவளும் அவளும் – பகுதி 6

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அழகிய சிறு மொட்டென இருந்த அவளை அன்றைய நாளில் எண்ணற்ற கைகள் ஏந்தி மகிழ்ந்தன.

 

அன்று காலை முதலே சின்னத்தம்பியும், கமலமும், மகிழ்ச்சியில் பூரித்திருந்தார்கள். ஆனாலும் கமலத்துக்கு அடி மனதுக்குள் ஒரு பயமும் பரபரப்பும் குறுகுறுத்தது.
ஏதோ வேலையாக அவசரத்துடன் குறுக்கே சென்ற சின்னத்தம்பியை இடைமறித்து ,

“அண்ண வாறதென்டு சொன்னவர்தானே…?” கேட்டாள் கமலம்.

“ ஓமப்பா.. “

இன்னமும் காணவில்லை என்பதைக் கலவரப் பார்வையாகக் கண்களில் காட்டினாள் கமலம்.

“ நீர் யோசிக்காதையும் அவர் வருவார்..” சொல்லியவாறு அப்பால் நகர்ந்தார் சின்னத்தம்பி.

“பிள்ளைக்கு மொட்டை வழிச்சாத்தான் தோய வாக்கலாம்.. “ தங்கத்தின் குரல் இப்போது தடுத்தது.

“ மொட்டை வழிக்கேல்ல. நயினாதீவுக்கு நேத்தியிருக்கு…”

போகிற போக்கிலேயே தங்கத்துக்கும் பதில் சொல்லிச் சென்றார்.த்திரத்துக்கு துடக்கு மயிர் வழிக்கோணும்தானே..”

“ இந்த மனுசன் எங்க இப்ப இவ்வளவு அவசரமாப் போகுது..? “

“ பத்தரிட்டை ஒரு புலிநகச் சங்கிலி செய்யக் குடுத்தவராம். நேற்றுத் தாறனென்டு சொன்னது. இன்னமும் குடுக்கேல்ல. அதுதான் வேண்டப்போறார் போல..”

“பொம்புளப் பிள்ளைக்கு புலிநகச் சங்கிலியோ..? “ ஆச்சரியத்தோடும், எள்ளலோடும் கேட்டாள் தங்கம்.

இந்தக் கேள்வியைப் பத்துநாட்களுக்கு முன்னரே சின்னத்தம்பியிடம் கமலம் கேட்டிருந்தாள்.

தலைவாசலில் இருந்து கதைச்சுக்கொண்டிருக்கையில், புலிநகச் சங்கிலி செய்யக்க குடுத்திருக்கிறதை கமலத்திடம் சின்னத்ம்பி சொன்னார்.

“பொம்புளப் பிள்ளைக்கு புலிநகச் சங்கிலியோ..? “

“ ஏன் பொம்பிளப் பிள்ளையென்டா குறைச்சலோ…. அதெல்லாம் போடலாம்..” என சந்தோஷத்தை இறுமாப்பாகச் சின்னதம்பி சொல்லிய பொழுதில், கமலம்
மெதுவாக “அண்ணைக்குச் சொல்லிற்றீங்களோ ….? ” எனக் கேட்டாள்.

சின்னத்தம்பியின் முகத்தில் மகிழ்ச்சி இறுகியது. “ ஓம் சொல்லிற்றன்....வாறெனென்டவர்...”

“நான் செல்லாச்சிய முப்பத்தியொண்டுக்கு வரவேணாமென்டு சொல்லிற்றன்…”
சின்னத்தம்பி ஆச்சரியத்தோடு கமலத்தைப் பார்த்தார்.

எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் முகத்தில் பாவனை காட்டினாள் கமலம்.
எப்படி..? என ஆச்சரியப்பட்டாராயினும் கேட்கவில்லை.

“செல்லாச்சி சொல்லிப் போட்டாள்..”

பெண்கள் எவ்வளவு நுட்பமானவர்கள் என ஆச்சரியப்பட்டார் சின்னத்தம்பி. தமக்கான நேரத்துக்கு பொறுமையாகக் காத்திருக்கத் தெரிந்த இவர்கள்தான் புலிநகம் போடுவதற்குப் பொருத்தமானவர்கள் என எண்ணிக் கொண்டதை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தன் மகளுக்குப் புலிநகச் சங்கிலி போடும் எண்ணம் சரியென்பதற்கு மனதுக்குள் நியாயம் சேர்த்துக்கொண்டார்.

“ அண்ண வரேக்க அவள் நின்டா சங்கடப்படக் கூடும்…”

அது சரிதான் என்பதை தலையசைப்பில் வெளிப்படுத்தியவர்,

“ நல்ல மனுசன்தான். ஆனா ஏதோ அன்டைக்கு அப்பிடி நடந்திட்டுது..” என்றார். கமலம் எதுவும் பேசவில்லை.

“ பாவப்பட்ட சனங்கள் என்டாலும், அதுகளுக்கும் மானம் என்டு ஒன்டிருக்கெல்லோ.. அதுதாதன் என்ர கோவம்..” கமலம் ஆதரவாக அவர் தோள்களைப் பற்றினாள். அந்தத் தொடுகையில் ஆண்மையை ரசித்தாள்.

“ ஐயா என்டும் கமக்காறர் என்டும் அதுகள் கூப்பிடேக்க தாற மரியாதையின்ர கண்ணியத்தை கவனமா நாங்க காப்பாத்த வேணுமெல்லோ..”
அவர் சொன்னதை ஏற்றுக் கொள்வது போல் அமைதியாக இருந்தாள் கமலம். சில நொடிகளின் பின் அவளே கதையின் போக்கினை மாற்றினாள்.

“ அவிட்டத்தில பெண் பிறந்திருக்கு, தவிட்டுப்பானைக்க பொன் விளையும் என்டு.. மச்சாள் பகிடி பண்ணிறா. ஐயரிட்ட கேட்டனீங்களோ? பிள்ளை என்ன நட்சத்திரமென்டு...”

“ ஓமோம். அவரும் அவிட்டம் என்டுதான் சொன்னவர். பெயர் வைக்கிற எழுத்தும் ஏதோ சொன்னவர். அவரிட்டத்தான் குறிப்பும் எழுதச் சொல்லியிருக்கு..”
“ நீங்க என்ன பெயர் யோசிச்சிருக்கிறீங்க…?” கமலம் கேட்டாள்.

“ பிள்ளையப் பத்துமாசம் சுமந்து பெத்த நீர்தான் பெயர் சொல்ல வேணும்..”

தான் சொல்லும் பெயர், சின்னதம்பிக்கு பிடிக்குமோ எனச் யோசித்துக் கொண்டிருந்தாள் கமலம்.


“ மச்சாள்!.. இன்டைக்கு முப்பதியொன்டு. துடக்குக் கழிவு என்டு தெரிஞ்சும் செல்லாச்சி எங்க துலைஞ்சாள்…”

பத்து நாட்களுக்கு முன் சென்றிருந்த கமலத்தின் நினைவுகளை, மீளத் திருப்பினாள் தங்கம்.

தன் கணவனுக்குச் சொல்லவில்லை என முன்னர் அவளிடமிருந்த புலம்பல் இப்போது இல்லைஎ என்பதை கமலம் அவதானித்தாள். இதுவரையில் வரவில்லை என்றாலும், இன்றைக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளிருக்க வேண்டும். அவர் வருவதைப் பற்றி ஏதும் பேசாதிருந்த அவள் செல்லாச்சி வரவில்லை என்பதற்குச் சலித்துக் கொண்டாள்.

செல்லாச்சியை இன்று வரவேண்டாம் என்று கமலம் மறித்ததோ அல்லது அதற்காரணமோ அவள் அறிந்தாளில்லை. அதுவே நல்லதெனப்பட்டது கமலத்துக்கு. இல்லையென்றால் இவ்வளவு வேலையையும் உரிமையோடு இழுத்துப்போட்டுச் செய்யும் அவள் ஒடிந்துபோயிருப்பாள் என்ற உண்மையும் புரிந்திருந்தது.

வெளியே சென்றிருந்த சின்னத்தம்பி வேகமாகத் திரும்பி வந்தார். கையில் கொண்டு வந்த சின்னப்பையினைக் கமலத்திடம் கொடுக்க, அவள் அதனைப் பிரித்து, நாவல் நிறப் ரிசுப்பேப்பரில் சுற்றியிருந்த, சங்கிலியைத் தூக்கிப் பார்த்தாள். அவர்களது தோட்டத்தில் அந்த வருடம் விளைந்த புகையிலைகள் தங்கச் சங்கிலியாக மாறியிருக்க, அதில் புலிநகங்கள் இரண்டு எதிர்வளைவாகத் தொங்கின.

பெருமையோடு பார்த்த சின்னத்தம்பியை, மென்நகையோடு ரசித்தாள் கமலம்.

“ நல்லாத்தான் இருக்கு. ஆனா பிள்ளைக்கு பஞ்சாயுதம் போட வேணுமெல்லோ..? “ கேள்வி எழுப்பினாள் தங்கம்.

“ அது மாமாவின்ர சீர்வரிசையில வரும்தானே..?” சிரிப்போடு வெளிவந்த கமலத்தின் பதிலை, அமைதியில் ஆமோதித்தாள் தங்கம். அவளது அமைதியில் ‘அண்ண வருவார்’ என்பதை மேலும் உறுதி செய்து கொண்டாள் கமலம்.

உரையாடல்களில் பெண்கள் நகர்த்திச் செல்லும் வாழ்வினை ரசித்தார் சின்னத்தம்பி.

“அண்ணை வீடெல்லாம் கழுவிப்போட்டன். அப்பிடியே கிணத்தடியில போய் தோஞ்சிட்டு வாங்க….” தங்கம் அவசரப்படுத்தினாள்.

கேட்டுக்கொண்டிருந்த பிள்ளையின் அழுகை நின்றிருந்தது. சாம்பிராணி வாசம் சூழலை நிறைத்தது. பிள்ளையைக் குளிப்பாட்டிவிட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டு கிணற்றடிக்கு விரைந்தார் சின்னத்தம்பி.

மச்சாள், சின்னம்மா, மாமி, பெரியக்கா, என உறவுமுறைகளின் அழைப்பும், பெண்களின் சத்தமும், மெல்ல மெல்ல அதிகரிக்க, உறவுகளின் சங்கமிப்புத் தொடங்கியது.

ஒரு உயிர்ப்பின் வருகை எவ்வளவு மகிழ்சிகரமானது. அது வாழ்வின் நீட்சியைத் தொடரும் நம்பிக்கையைத் தருவது என்பதை அந்த முற்றம் மெல்ல மெல்லச் சுவைக்கத் தொடங்கியது.

“பிள்ளையின்ர கை, காலி கட்டிறதுக்கு கறுத்த மணி கோர்த்ததோ..?” உறவொன்றின் கேள்விக்கு “அதெல்லாம் மச்சாள் ஒரு மாசத்துக்கு முன்னமே கோத்து வைச்சிட்டா…” என்றாள் தங்கம்.

“ முதல் பிள்ளையென்டா எல்லாரும் அப்பிடித்தான்..” அனுபவத்தை பதிலாகக் கோர்த்தது மற்றொரு உறவு.

“பெரியம்மா ! ஐயருக்கு பூசைக்குத் தேவையானத தலைவாசலில அனியடுக்குப் பண்ணுறியளே..,நான் மச்சாளத் தோயவாத்திட்டு வாறன்.. ?” உத்தரவை உதவியாகவும், கேள்வியாகவும் ஒரு உறவிடம் வைத்து மறைந்தாள் தங்கம்.

குளித்துவிட்டு வந்த சின்னத்தம்பியிடம் சுகம் விசாரித்த ஒரு பெண், தன் கைப்பைக்குள்ளிருந்து, துப்பரவாக்கிய இரண்டு மூன்று தேங்காய் சிரட்டைகளை எடுத்து நீட்டினாள். அந்தச் சிரட்டைகளின் உள்பகுதி கறுத்திருந்தது.

“ கமலம் பொட்டுச் சிரட்டை கேட்டவள்.. போன கிழமை என்ர மகளுக்கும் பிள்ளை பிறந்திருக்கு. அவளுக்குப் பொட்டுக் காச்சேக்க சேத்துச் செய்தனான்..”
“ஓ… தங்கத்திட்ட குடுங்கோவன். நான் எங்கையும் கைமாறி வைச்சிருவன்..”

“எங்க யோகராசா வரேல்லையே..?” அவர்களை நெருங்கி வந்த மற்றுமொரு பெண் கேட்க, “ தொட்டில்ல போட மாமன் வரத்தானே வேணும்.” கண்டிப்பான தொனியில் முன்னவள் பதிலிறுத்தாள்.

“ ஓமோம்.. வருவார்..” என்று சமாளித்த சின்னத்தம்பி, கமலம் தமையன் வரவேண்டும் என விரும்பியதன் காரணத்தைப் புரிந்து கொண்டார். அதற்காக அது முன்பே தெரியாதவருமல்ல.

உறவுகள் என்பது விட்டுக் கொடுக்க முடியாத பந்தம் என்பது எல்லாச் சமூகங்களுக்குமானதுதான். அதுவும் ஒரு பண்பாடுதான். மனித நாகரீகத்தின் மற்றுமொரு கூறுதான். சமூகம் சிதறுன்டு போகாதிருப்பதற்காகத்தான், பண்பாட்டுக் கூறுகளுக்குள் உறவுகளைப் பிணைத்து வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள் என எண்ணிக் கொண்ட சின்னத்தம்பியின் மனதும் யோகராசாவின் வருகையை எதிர்பார்த்தது.

குசினியின் முன்னாலிருந்த தட்டி மறைப்பினைத் தாண்டி, முன்னே வந்தாள் கமலம். தலைக்கு முழுகியிருந்த அவள், ஈரந்துவட்டிய துண்டினை, தலைமயிரோடு சேர்த்து முடித்திருந்தாள். வெள்ளையும் கறுப்புமாக அது தலையில் கனத்தது.

“ ஈரஞ் சுவறிடும். கவனமாத் துவட்டு..” அக்கறைப்பட்ட ஒரு பெண்.

குழந்தையைக் கையிலேந்திக் கொண்டிருந்த ஒரு பெண், “தகப்பனைப்போலதான் இருக்கிறாள் மகள்..” அவள் காதில் கிசுகிசுத்துச் சிரித்தாள் இன்னொரு பெண்.

கமலமும் சிரித்தாள். அவள் சிரிப்பில் தாய்மையின் பெருமை ஒட்டியிருந்தது.

அக்கறைப் பட்ட பெண் இப்போது கமலத்தின் தலையை மற்றுமொரு துணியால் துவட்டத் தொடங்கினாள்.

முன்வளவு வாசலில் மாட்டுவண்டில் ஒன்று வந்து நின்றது. முற்றத்தில் நின்ற எல்லோர் முகத்திலும் ஆச்சரியமும் பரவசமும்.
கூடி நின்ற உறவுகளில் ஒருத்தி, வியப்பினை வாய் மொழியாக்கினாள்…


“அட…!”


- தொடரும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction