free website hit counter

அவளும் அவளும் – பகுதி 5

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“விட்டிட்டுப் போகேலுமே…?”

ராசத்தின் அந்தக் கேள்வி எல்லோரையும் உலுக்கியிருக்க வேண்டும்.அங்கே அமைதி கவ்வியது.

வேலன் தலையை தன் இரு கைகளாலும் அழுத்தி வாரினான். அந்தக் கேள்வி அவனுள் ஏதோ ஒன்றைச் செய்திருக்க வேண்டும்.

“விட்டிட்டுப் போகேலுமே…?”

இந்தக் கேள்வியை அவன் பல தடவை, பலர் சொல்லக் கேட்டிருக்கின்றான். உறவும், பாசமும், துறந்து போன பிள்ளைகளை, சகோதரங்களை, நினைத்து ஏங்கிய பலர் சொல்லியழக் கேட்டிருக்கின்றான்.

யாழ்ப்பாணத்தில் தோல் பை தைத்துத் தரும், ‘பாய்’ ஒருத்தர், ஒருநாள் இதே கேள்வியோடு விக்கித்து நின்றதை அவன் கண்டிருக்கின்றான்.

“பாவம் பாய்! எங்கப்பு காலத்திலயிருந்து அந்தக் குச்சொழுங்கையிலதான் இருக்கிறார். அவங்க ஆட்கள் எல்லாரையும் உடன வெளியேறச் சொன்னதில, எங்க போறதென்டு தெரியாம நிக்கிறாங்கம்மா .. “ யாழ்ப்பாணத்தில் தைத்து வரும்படி ராசம் குடுத்த பைக்கு தோல் கைப்பிடி தைக்காமலே திருப்பிக் கொண்டுவந்ததை, சொல்லிப் பரிதாபப்பட்டான் வேலன். அவனால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது.

அவன் சொன்ன துயரின் வலியை ராசம் அன்று உணர்ந்தாளில்லை. நல்ல பை. தோலில கைபிடி போட்டா இன்னும் கொஞ்சநாள் பாவிக்கலாம் என்ற அவளது எண்ணம் ஈடேறவில்லை என்பது மட்டுமே அப்போதிருந்த அவளது எண்ணமும் பிரச்சினையும்.

வேலனின் தலைக்குள் நினைவுகள் முளைவிட்டெழுந்திருக்க வேண்டும்.

“அம்மா ! இலக்சுமியை நான் பாத்துக்கொள்ளிறன். நீங்க வெளிக்கிடுங்கோ…” தீர்மானமாகச் சொன்னான் வேலன்.
மறுபடியும் முதலில இருந்தா என்பது போல முகுந்தனும் வசந்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கவலையும், கேள்வியும் கலந்த முகக்குறியோடு வேலனைப் பார்த்தாள் செல்லாச்சி. அந்தப் பார்வையில் “ எப்பிடி..?” தெறித்தது.

“இலட்சுமிய நான் கன்டுக்குட்டியில இருந்து பாத்திருக்கிறன். அதுக்கு என்ர நிலமை விளங்கும். என்னால அதப் பாக்க முடியும்..” நம்பிக்கையை வார்த்தையாக்கினான் வேலன்.

அவனது சொல்லின் மேலான நியாயமும் உண்மையும் மட்டுமின்றி சொல்லியத்தைச் செய்யக் கூடிய ஓர்மம் நிறைந்தவன் என்பது செல்லாச்சிக்கும் ராசத்துக்கும் தெரியும். சக்கர நாற்காலியோடு அவனைக் கூட்டிச் செல்லச் செல்லாச்சி துணிந்ததிற்கு அவனது ஓர்மம் குறித்த நம்பிக்கையும் ஒரு காரணம்தான்.

“ஓம் அது சரிதான். ஆனா….” ராசம் தொடங்கவும் செல்லாச்சி இடைமறித்தாள்.

“அம்மா நானும் நிக்கிறன். நீங்க போயிட்டு வாங்கோ…”

தோளில் கொழுவிய பையைக் கழற்றி வைத்துவிட்டுத் திண்ணையில் போய் அமர்ந்து கொண்டான் முகுந்தன். எதுவும் சொல்லத் தோன்றாமல், வசந்தனும் சலிப்பு டன் சேர்ந்து கொண்டான்.

“ இவள் இங்க நிக்கிறத நினைச்சா எனக்குப் பயமாக இருக்கு..”

வேலனின் பயம் ராசத்துக்கும் இருந்தது. அவன் சொல்லியதற்கு தலையசைத்து உடன்பட்டாள்.

“எப்பிடி உங்கள தனிய விட்டிட்டுப் போறது..?” செல்லாச்சி அழத் தொடங்கிவிட்டாள்.

அவளை அருகே இழுத்து ஆறுதல்படுத்த முயன்றான் வேலன். அவள் விலகிக் கொள்ள முயன்றாள்.
ராசம் பெரிய வீட்டினுள் செல்லத் திரும்பினாள்.

“அம்மா..!”

“பொறடா..” வசந்தனின் அழைப்புக்கு எரிச்சலைப் பதிலாக்கியபடியே சென்றாள்.

செல்லாச்சி அழுதபடியே இருந்தாள் வேலனின் கை வளைப்பினுள்.

“ முதல்ல வாறென்டுதானே சொன்னது. பிறகேன் மாட்டன் என்டுறியள்..?”

“எல்லாம் காரணமாத்தான் சொல்லுறன்.பிறகு ஆறுதலாச் சொல்லுறன்..” செல்லாச்சியும் வேலனும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

“ அப்பிடியென்டால் நானும் கூட இருக்கிறன். என்னப் போகச் சொல்லாதையுங்கோ..” தேம்பிய செல்லாச்சியை கைகளால் தடவி ஆறுதல்படுத்தினான். அவன் கண்களும் இப்போது கசிந்தன.

“அன்டைக்கு மட்டும் மரத்தால விழாமல் இருந்திருந்தா…” தன் நிலைமீது வருத்தம் கொண்ட வேலனின் வாய்களைத் தன் கைகளால் பொத்தி அவன் வேதனையின் வெளிப்பாட்டைப் பகிர்ந்து கொண்டாள்.

பெரிய வீட்டிலிருந்து வெளியே வந்தாள் ராசம். அவள் கையில் விபூதி. முகுந்தனுக்கும், வசந்தனுக்கும், நெற்றியில் பூசிய பின், மிகுதியைச் செல்லாச்சியின் கைகளில் கொட்டினாள். பக்குவமாக கைகளில் வேண்டிய செல்லாச்சி வேலனுக்கும் தனக்கும் பூசிக் கொண்டாள்.

“ சரி, இரண்டுபேரும் கவனமா இருங்கோ..” ராசத்தின் முடிவில் செல்லாச்சி மலர்ந்தாள்.

“அம்மாளாச்சி உங்களக் காப்பாத்தட்டும்..”

கையெடுத்துக் கும்பிட்டான் வேலன். கண்களின் ஓரத்தால் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டான்.

செல்லாச்சி இலட்சுமியை மறுபடியும் தொழுவத்தில் கட்டுவதற்குச் கொண்டு சென்றாள். கன்டுக்குட்டி துள்ளிக் குதித்து முன் சென்றது.

அதனைப் பார்த்தவாறே நிம்மதிப் பெருமூச்சு ஒன்றினை விட்டவள், தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த ரூபா நோட்டுகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு வேலனின் பக்கமாத் திரும்பினாள் ராசம்.

“இதை வைச்சிரு..” வேலனிடம் நோட்டுக்களை நீட்டினாள்.

“இதை வைச்சு என்ன செய்யிறது..?”

ராசத்திடமும் அதற்குப் பதில் இல்லை.
“எதுக்கும் கை காவலா வைச்சிரு.. “ என்று மட்டும் சொல்ல முடிந்தது.

செல்லாச்சி திரும்பி வந்தாள். கையில் காசுடன்…செல்லாச்சியை நோக்கி இயலாமையை வெளிப்படுத்தினான் வேலன்.

“இது ஏன்..அம்மா..”
“இருக்கட்டும் “ என்பதைக் கைகளால் சொன்னாள் ராசம். ஒடுங்கிக் கொண்டாள் செல்லாச்சி.

தலைவாசலுக்கு வந்தாள் ராசம். இரு பக்கக் குந்திலிலுமிருந்த வசந்தனும் முகுந்தனும் நிமிர்ந்து பார்த்தார்கள்.
பிரதான வீதியிலிருந்து சத்தம் இப்போது இரைச்சலாக, இன்னும் அதிகமாகக் கேட்டது.

தலைவாசலில் மாட்டியிருந்த படங்களின் முன்னால் வந்து நின்றாள் ராசம். பொட்டும் மாலையுமாக இருந்த படங்களில் ஒன்றில், ராசத்தின் பெற்றோர்கள் சின்னத்தம்பியும், கமலமும் இருந்தார்கள். மற்றது?

மற்றையதில் தங்கராசு. ராசத்தின் கணவன். வசந்தன், முகுந்தனின் தகப்பன். படங்களில் சிரித்திருந்தவர்களுக்குப் போடப்பட்டிருந்த பூ மாலைகள் காய்ந்து போயிருந்தன.

ராசம் கலங்கியிருந்தாள். அவள் கண்கள் உகுத்தன. கைகள் கூப்பியிருந்தன. பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளை அருகே கையசைத்துக் கூப்பிட்டாள். இளையவன் முகுந்தன் கலங்கியிருந்தான்.

“அப்பாவ கும்பிட்டுக் கொள்ளுங்கோ….” தழுதழுக்கும் குரலில் சொன்னாள்.

பிள்ளைகள் கும்பிட்டார்கள். இருவரையும் அனைத்துக்கொண்டு, ஒரு பேடு போலாத் தேம்பினாள் ராசம்.
முகுந்தன் கவலையைக் கண்ணீராக்குவது கண்டு சுதாகரித்தாள்.

“ சரி..சரி..” எனச் சமாதானம் சொன்னாள்.

“ செல்லாச்சி..!” அவளது அழைப்புக் கேட்டு செல்லாச்சி தலைவாசல் முன் வந்தாள். அவளைத் தொடர்ந்தான் வேலன்.
“ இங்க..வா! “ வாசலில் நின்றவளை உள்ளே அழைத்தாள் ராசம். அவள் தயங்கினாள்.

“வா..!” வலிந்து அழைத்தாள்.

இடுப்பிலிருந்த திறப்புக் கோர்வையை எடுத்து அவளிடம் நீட்டியபடியே

“கவனமாப் பாத்துக்கோ. பெரிய வீட்டுக்கு பின்னேரங்களில விளக்கேத்தி விடு…” எனச் சொன்னாள் ராசம்.

பிள்ளைகள் ஒருவருக்கொருவர் ஆச்சரியத்தைப் பரிமாறினர்.

வேலன் ஆச்சரியத்தில் உறைந்தே போனான்.

“ நானா…? “ செல்லாச்சிக்கு நம்பமுடியதிருந்தது.

“ உதப் பத்தி ஆரிட்டையும் ஒன்டும் கதைக்காத…”

ஆச்சரியமும், அச்சமும் கலந்து நின்ற செல்லாச்சியின் கைகளைப் பிடித்து கோர்வையைத் திணித்தாள்.

செல்லாச்சி விம்மி வெடித்தாள். அது ஏன் என்பது பிள்ளைகளுக்குப் புரியவில்லை. வேலனுக்குப் புரிந்தது.

செல்லாச்சி கும்பிட்டாள். அது தன்மீது கொண்ட நம்பிக்கைக்கான நன்றி என்று கொள்வதா..அல்லது ….?

“குசினிக்க தேவையான சாமான்கள் இருக்கு. எடுத்துச் சமைச்சுச் சாப்பிடுங்கோ…”
மௌனமாக இருந்தார்கள். அதை மீண்டும் ராசமே கலைத்தாள்.

“எத்தின நாளாகுமோ தெரியேல்ல..என்ன நடக்குமென்டும் விளங்கேல்ல. எல்லாம் கடவுள் விட்ட வழி..” கைகள மேலே காட்டினாள். தலைவாசலுக்கு வெளியே வந்தார்கள்.

“ இஞ்சயே இருந்து கொள்ளுங்க.. ஒரிடமும் வெளிய போகாத. வைரவன துணைக்கு வச்சுக் கொள்ளுங்க…” அவள் குரலில் நிரம்பிய துயரம் வார்த்தைகளை உடைத்தது.

கம்பீரம் தொலைத்த அந்தக் குரலைக் கேட்டு, முகுந்தன் தாயை மெதுவாக அணைத்துக் கொண்டான். வசந்தன் இப்போது அவளை அவசரப்படுத்தவில்லை.

பக்கமாகச் சென்று மாட்டுக் கொட்டிலில் நின்ற இலட்சுமிக்கு வைக்கோல் போட்டுவிட்டு வந்தாள் ராசம். முற்றத்தில் நின்று வீட்டை முழுமையாகப் பாரத்தவளுக்கு, அது நீர்வர்ண ஒவியமாய் தெரிந்திருக்கும். ராசத்தின் கண்களில் நீர் முட்டி வழிந்தது.

அவளின் கைகள் மெதுவாக நடுங்குவதை உணர்ந்தேன். அந்த நடுக்கத்தில் அவளின் அச்சத்தை, அநாதரவை, பிரிவின் வலியை உணர்ந்தேன். ராசத்தின் வாழ்க்கையில் வந்து போன மகிழ்ச்சியை, துயரத்தை எல்லாம் அவள் தொடுகையில் உணர்ந்திருக்கின்றேன். நெருக்கத்துக்குரிய ஒரு உறவு போல என்னுள் அதனைக் கடத்தியிருக்கிறாள்.

“ ஐயாவை ! நீங்க வெளிக்கிடுங்கோ …பிறகு இருட்டிப்போடும். டோர்ச் லைற் வைச்சிருக்கிறியளோ…?” வேலன் இப்போது அக்கறையோடு துரிதப்படுத்தினான்.

நினைவுக்கு வந்தவன் போல் முகுந்தன் தலைவாசல் அறைக்குள் ஓடினான். வெளியே வரும் போது கையில் ஒரு லைற்றும், சின்ன றேடியோவும், முகத்தில் வேலனுக்கான நன்றியும் இருந்தது.

வசந்தன் வாசல் கேற்றினைக் கடந்து சைக்கிளை உருட்டிச் சென்றான். முகுந்தனும் தொடர்ந்தான். ராசத்தின் செருப்புக்ளைத் தூக்கிக் கொண்டு வந்து முன்னாள் போட்டாள் செல்லாச்சி.

படர்ந்திருந்த தன் கைகளை விலக்கி, சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்ட ராசம்,
“போயிற்று வாறனடி. எல்லாத்தையும் பாத்துக் கொள்…” ராசம் செல்லாச்சிக்குச் சொல்வதாக வேலன் நினைத்துக் கொண்டான்.

செல்லாச்சிக்குத் தெரியுமோ இல்லையோ, அது அவளுக்கானதில்லை என்பது எனக்குத் தெரியும்.
ராசம் வெளியேறினாள்.

தூரத்தே எங்கோ ‘ஷெல்’ ஒன்று பெருஞ் சத்தமுடன் விழுந்து வெடித்தது.
இரைச்சலும், புகையும், கலந்து வீசிய காற்றில் இப்போது கந்தகமும் மணத்தது.

வீதிவரை போய் வருவதாகச் சொல்லி கூடவே சென்றாள் செல்லாச்சி.
போனவர்களைச் சிறிதுதூரம் தொடர்ந்து சென்ற வைரவன், திரும்பி வந்து வேலனின் காலடியில் சுருண்டது.

நடைதளர்ந்து செல்லும் ராசத்தைப் பாரத்துக் கொண்டிருந்த வேலன் “ பாவம்…” எனப் பரிதாபப்பட்டான்.

வீதிமுனைக்குச் சென்று விட்ட ராசம் நின்று, திரும்பி ஒருமுறை வீட்டைப்பார்த்தாள்.
அவள் உதடுகள் அசைவதாகஉணர்ந்தேன்.
அந்த அசைவில் நிச்சயம் “ வேம்பி..” ஒலித்திருக்கும். ஆனால் கேட்கவில்லை.

ராசம் “வேம்பி..” என அழைக்கத் தொடங்கிய நாள் நினைவில் இல்லை. ஆனால் அவளை ராசம், ராசத்தி, என எல்லோரும் அழைக்கத் தொடங்கிய அந்த நாள் நன்றாக ஞாபகமிருக்கிறது.

சோகம் கவிந்திருக்கும் இந்த முற்றத்தில், அன்று மகிழ்ச்சியும் சிரிப்பும் மட்டுமே நிறைந்திருந்தன.
அந்த நாள் நன்றாக ஞாபகமிருக்கிறது.

ஒரு அழகிய சிறு மொட்டென அவளிருந்தாள் அன்று ….

-தொடரும்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula