விடயம் ஒன்று,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கற்கைநெறிகள் ஆங்கில மொழி மூலம் இடம்பெற்று வருவது தொடர்பில் சில தரப்புக்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பத் தொடங்கியிருக்கின்றன. ஆங்கில மொழி மூல கற்கைநெறிகள் தொடர்வதால் யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மாணவர்களின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடருமானால் சிங்கள மயமாக்கல் தமிழர் தாயகத்தில் இன்னும் வேகப்படும் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
சட்டத்துறை கற்கை நெறி (சட்டமாணி), கொழும்பு பல்கலைக்கழகத்திலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் மாத்திரமே மும்மொழிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அது தவிர்ந்து கொழும்பு சட்டக் கல்லூரியில் மும்மொழியில் சட்டப் பயிலுனர் கற்கை (சட்டத்தரணி) இடம்பெற்று வருகின்றது. சட்டக்கல்லூரியில் கூட ஆங்கில மொழிமூலமாக மாத்திரம் கற்கையை முன்னெடுப்பது தொடர்பிலான தீர்மானம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு, தற்போது அது சில காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. விரைவில், சட்டக்கல்லூரியும் ஆங்கில மொழிமூல கற்கை நெறிக்குள் சென்றுவிடும். அதுதவிர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம் தொடங்கி சட்டமாணி கற்கைநெறிகள் பயிற்றுவிக்கப்படும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில மொழிமூலமே கற்பிக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையில் ஆங்கிலமொழி மூலம் கற்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் திடீர் எதிர்ப்புக்குரல்கள் எழும் பின்னணி குறித்து ஆராய வேண்டியிருக்கின்றது. யாழ். பல்கலைக்கழகம், தமிழர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. இன்றைக்கும் தமிழ்த் தேசிய அரசியலில் முடிவெடுக்கும் அளவுக்கான பங்கினை வகிக்கின்றது. அப்படியான நிலையில், யாழ். பல்கலைக்கழக கற்கைகள் தமிழ் மொழி மூலத்திலிருந்து ஆங்கிலமொழி மூலத்துக்கு செல்வதால் வெளி மாவட்ட மாணவர்களின் வருகை அதிகரிக்கின்றது. குறிப்பாக, சிங்கள மாணவர்களின் வருகை அதிகரிக்கின்றது. அத்தோடு, சிங்கள விரிவுரையாளர்களும் வருகிறார்கள். இவ்வாறான நிலை, யாழ். பல்கலைக்கழகத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்குமான பிணைப்பினை அறுத்துவிடும் என்பது ஒரு சாராரின் கருத்து. இன்னொருபுறம், தேவையற்ற இன முரண்பாடுகள் மாணவர்கள் மத்தியில் வெளித்தரப்புக்களின் உந்துதலினால் தோற்றுவிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் ஆயுத மோதல்கள் இடம்பெற்ற போது, தென் இலங்கை மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தினை ஒரு தெரிவாக கொள்வதில்லை. ஏன், முஸ்லிம் மாணவர்கள் கூட தெரிவாக கொள்வதில்லை. அப்படியான சூழலில் தமிழ் மாணவர்களே 98 வீதமாக இருந்தார்கள். ஆனால், ஆயுத மோதல்களுக்குப் பின்னர், யாழ். பல்கலைக்கழகத்தினை தென் இலங்கை மாணவர்களும் தெரிவாக கொள்கிறார்கள். வடக்கு கிழக்கு மாணவர்கள் எப்படி கொழும்பு உள்ளிட்ட தென் இலங்கை பல்கலைக்கழகங்களை நோக்கி கற்கைநெறி, வசதி வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தெரிவு செய்கிறார்களோ, அதுபோலவே தென் இலங்கை மாணவர்களும் யாழ். பல்கலைக்கழகம் நோக்கி வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அது, இயல்பானது.
இன்றைய உலக ஒழுங்கிலும் போட்டிக் கலாசாரத்திலும் ஆங்கிலமொழி மூல கற்கைநெறியின் அவசியம் இன்றியமையாதது. தமிழ் மொழிமூல கற்கை நெறிகளினால் மாத்திரம் இன்றைய வேகமான உலகத்தில் போட்டி போட முடியாது. அப்படியான நிலையில், தமிழ்ப் புலமைச் சொத்தினை காப்பதற்கு ஆங்கில மொழி அறிவு இன்றியமையாதது. அதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியாக வேண்டும். அதிலும் விஞ்ஞான, கணித, முகாமைத்துவ மற்றும் சட்ட கல்விகள் ஆங்கிலமொழி மூலமாக முன்னெடுக்கப்படுவதன் மூலம், மாணவர்களுக்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்தும். அது, அவர்களின் வேலைக்கான காத்திருப்பை இல்லாமல் செய்யும். புதிய ஆய்வுகளையும், அதற்கான வசதி வாய்ப்புக்களையும் உலகம் பூராவும் திறக்கும். இல்லையென்றால், வடக்கு கிழக்கு தாண்டினாலே, தடுமாறும் மாணவர்களை பெரும்பான்மையாக உருவாக்கிய வெளித்தள்ளிவிட்டு, வேலையில்லா பட்டாதாரிகள் என்கிற பெரும் கூட்டத்தை சமூகத்துக்குள் தள்ளுவதோடு பல்கலைக்கழகத்தின் வேலை முடிந்ததாகிவிடும். அப்படியான வேலையை யாழ். பல்கலைக்கழகம் தொடர்ந்தும் செய்ய வேண்டும் என்பதுதான், ஆங்கில மொழிமூல கற்கை நெறிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் தரப்புக்களின் நோக்கமாக என்ற சந்தேகம் வருகின்றது. அது, அவர்களின் சுயநல அரசியல் தேவைகளின் போக்கிலோ, அல்லது வெளித்தரப்புக்களின் உந்துதலின் பேரிலோ முன்னெடுக்கப்படும் ஆபாய அரசியல் என்றே கொள்ள வேண்டியிருக்கின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக் கல்வியை தமிழ் மொழி மூலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இன்று குரல் எழுப்பும் தரப்புக்கள் முக்கியமான இன்னொரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, வடக்கு கிழக்கில் தமிழ்ச் சட்டத்தரணிகள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் வாதிடும் திறனோடு இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கின்றது. ஏனெனில், நீதித்துறையில் உயர்பீடங்களில் ஆங்கிலமொழியிலேயே வாதப்பிரதிவாதங்கள் பெரும்பாலும் இடம்பெறும். அப்படியான நிலையில், அங்கு வாதிடுவதற்காக வரும் தமிழ்ச் சட்டத்தரணிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். கனக ஈஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், புவிதரன் உள்ளிட்ட சிலரையே காணக்கூடியதாக இருக்கும். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் கொழும்பில் தங்களின் ஆரம்ப கல்வி முதல் சட்டக்கல்வி வரை முன்னெடுத்தவர்கள்.
ஒரு காலத்தில் தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழியில் நல்ல ஆளுமையோடு இருந்ததாக முழு இலங்கையும் நம்பியது. ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியல்ல. ஆங்கில மொழி அறிவு மிக மோசமாக நிலையில் இருக்கின்றது. அதனை மீண்டும் முன்னோக்கி நகர்த்தி, அதியுச்ச பீடங்களை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். ஆங்கிலம் என்பது மொழி மாத்திரமே என்பது சரியானதுதான். ஆனால், அது உலகம் பூராவும் இன்றைக்கு புரிந்து கொள்ளக்கூடிய மொழிக் கருவியாகிவிட்டது. அப்படியான நிலையில், அதன் அவசியம் தவிர்க்க முடியாதது.
அப்படியான நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையை தமிழ் மொழி மூலத்திற்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதற்கான வாய்ப்புக்களை திறப்பதற்கான ஏற்பாடுகளில் போக்கிலானதாகும். தமிழ்த் தேசிய அரசியலை காப்பாற்றுவது என்பது, தமிழ் மக்கள் தனிமைப்பட்டுப்போவதல்ல. உலக ஒழுங்கைப் புரிந்து, போட்டி போட்டு எமது அரசியலையும் விடுதலையும் பேசுதலாகும். அதற்கு, ஆங்கில மொழி அறியும், அதன் மூலமான உயர் கற்கை நெறிகளும் அவசியமாகும். அதற்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களின் பின்னணிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
விடயம் இரண்டு,
யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையில் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கத்தின் விருந்தினர் விரிவுரை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் இந்தப் பத்தியாளர் கடந்த வாரம் எழுதியிருந்தார். அதில், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை உள்ளடங்கும் கலைப்பீடமும் பல்கலைக்கழக நிர்வாகமும் முறையான தீர்மானங்களை எடுக்கவில்லை என்று விமர்சித்திருந்தார். அத்தோடு, சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கத்தின் விரிவுரையை 'தடுத்து நிறுத்தியமை' தவறு என்றும் வாதிட்டிருந்தார்.
கடந்த வாரம் அந்தப் பத்தி வெளியானதும், யாழ். பல்கலைக்கழக முக்கியஸ்தர் ஒருவர் இந்தப் பத்தியாளரை தொடர்பு கொண்டு சில விடயங்களை தெளிவுபடுத்தினார். அவர் தன்னுடைய பெயரை பொது வெளியில் அடையாளப்படுத்துவதை விரும்பவில்லை என்பதால் அது தவிர்க்கப்படுகின்றது. ஆனால், சுவஸ்திகா அருளிங்கத்தின் விரிவுரை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பிலான விடயங்களில் முக்கிய பங்காற்றியவர் அவர்.
அவரின் விளக்கத்தின் சில பகுதிகள் கீழ் கண்டவாறு அமைந்தன, "... சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கத்தின் விரிவுரையை தடுத்து நிறுத்தும் எந்த எண்ணமும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கிடையாது. சட்டத்துறை தலைவர், கலைப்பீட பீடாதிபதி, துணை வேந்தர் உள்ளிட்ட அனைவரிடத்திலும் சுவஸ்திக்காவின் விரிவுரையை நடத்தும் எண்ணமே இருந்தது. ஆனால், சுவஸ்திகா விடுதலைப் புலிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பில் மாணவர்கள் கோபத்தில் இருந்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தும் நிலை இருக்கவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மாணவர்களோடு பல முறை பேசியும் அவர்கள் எதனையும் செவி மடுக்கும் நிலையில் இல்லை. அவர்கள் குழும மனநிலையின் உச்சத்தில் இருந்தார்கள். அதனாலேயே, சட்டத்தரணி சுவஸ்திகாவின் விரிவுரையை நிகழ்த்துவது முடியாமல் போனது. ஏனெனில், அவ்வாறு விரிவுரை இடம்பெற்று அதுவே ஏதாவது அசம்பாவிதங்களைத் தோற்றுவித்திருந்தால் அது பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். அதனாலேயே, விரிவுரையை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. ஒருபோதும், விரிவுரை தடுத்து நிறுத்தப்படவில்லை..." என்றார்.
யாழ். பல்கலைக்கழகம் அனைத்து கருத்துக்களையும் விவாதிக்கும், எதிர்கொள்ளும் மாணவர்களை உருவாக்க வேண்டும். அது, ஒற்றைப்புள்ளியில் நின்று விவாதிக்கும் தரப்புக்களின் கூடாரமாகிவிடக்கூடாது. அதனை மாணவர்கள் மத்தியில் புகட்டி, அடுத்த தலைமுறையை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டிய பொறுப்பு புலமைப்பீடமாக யாழ். பல்கலைக்கழகத்துக்கு உண்டு. அதனை உருவாக்கும் வாய்ப்புக்கள் எவ்வாறான அச்சுறுத்தல் தொனியில் மறுக்கப்பட்டாலும் அதனைக் கடந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியமாகும். அதனை நோக்கி, ஆசிரியர்களும் நிர்வாகிகளும் மாணவர்களை வழிப்படுத்த வேண்டும்.