free website hit counter

தமிழ்த் தேசிய வெளியின் புலமைத்துவ வீழ்ச்சி! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் பரப்பு கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான நம்பிக்கையான முயற்சிகளையோ மாற்றங்களையோ காட்டாமல் வெறுமையால் நிரம்பியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளில் இருந்து சற்று வேகமாகவே மீண்டெழுவது தொடர்பிலான ஆக்ரோசத்தை தமிழ்ச் சமூகம் வெளிக்காட்டினாலும், அதனை நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்த வேண்டிய அரசியல் தரப்புக்களும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. அதனால், தமிழ்ச் சமூகம் பிளவுண்டது மாத்திரமன்றி, தவறான பக்கங்களை நோக்கிய விரைவாக ஓடத் தொடங்கியிருக்கின்றது. 

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாக தமிழ் மக்கள் சந்தித்த பின்னடைவுகள் பாரியளவானவை. அந்தப் பின்னடைவில் இருந்து மீண்டெழுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. ஆனால், அதற்கான முயற்சிகளில் உண்மையான அர்ப்பணிப்பும் உழைப்பும் அவசியமானது. அதனை வழங்குவதற்கு தமிழ் மக்கள் எப்போதுமே தயாராகவே இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை ஒருங்கிணைந்து வழிப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கும் அரசியல் தரப்பும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதற்கு பதிலாக அதிக தருணங்களில் மக்களை இன்னும் பின்னுக்கு இழுத்துவிடும் வேலைகளை மேற்கொள்கின்றது. அதிலும், அதீத உணர்ச்சியூட்டல்கள் அல்லது உணர்ச்சிவசப்படுதல் என்ற புள்ளிகளில் நின்று விடயங்களை கையாள இந்த இரு தரப்புக்களும் முயல்வதை தொடர்ச்சியாக காணக்கூடியதாக இருக்கின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் நிகழ்த்தவிருந்த விரிவுரையொன்று பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டது. சுவஸ்திகாவை விசேட விரிவுரை ஒன்றை நிகழ்த்த யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையே அழைத்திருந்தது. அந்த விரிவுரை இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், சுவஸ்திகா கொழும்பில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள் என குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பேசுபொருளானது. இந்தப் பின்னணியிலேயே, யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் சுவஸ்திகாவின் விரிவுரையை தடுத்து நிறுத்தியிருக்கின்றது. அவரின் விரிவுரை இடம்பெறுமானால் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள், அதனால் பல்கலைக்கழகம் அசௌகரியங்களைச் சந்திக்கும் என்ற ரீதியில் அந்த விரிவுரை தடுத்து நிறுத்தப்படுவதற்கான காரணமாக சட்டத்துறை உள்ளடங்கிய கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் உள்ளிட்ட நிர்வாகத் தரப்பு வழங்கியிருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியலில் எழுச்சியில் யாழ். பல்கலைக்கழகத்தின் வகிபாகம் அதிகமானது. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் அஹிம்சை வழியில் இருந்து ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்ந்த போது, யாழ். பல்கலைக்கழகமும் அதனை விமர்சனங்கள் இன்றி ஆதரிப்பதற்கான கட்டத்தை நோக்கி பெரும்பாலும் நகரத் தொடங்கியது. மாற்றுக் கருத்துக்கள் வெளிவருவதற்கான சூழல் ஒரு கட்டத்தில் இல்லாமற்போனது. தமிழ் மக்களின் புலமைப்பீடங்களில் பிரதான பீடமான யாழ். பல்கலைக்கழகம் மாற்றுக்கருத்துக்களுக்கான வெளியை நிராகரிக்கத் தொடங்கிய புள்ளி, தமிழ் அரசியல் தோல்விகளுக்கும் ஒரு காரணமாகத் தோன்றியது. ஏனெனில், போராடும் சமூகத்துக்கு மக்களின் ஒருங்கிணைவு என்பது அதிமுக்கியமானது. அதேபோல், கேள்விகளுக்கு அப்பால் மக்கள் ஒரு புள்ளியில் ஒருங்கிணையும் போது, அதனைச் சீர்ப்படுத்துவதற்கு புலமைத்துவ தரப்புக்களின் கேள்விகள் அவசியமானவை. அதுதான், மக்களை ஒருங்கிணைக்கும் தரப்புக்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அந்தத் தரப்புக்களை திருத்துவதற்கு உதவும். ஆனால், தமிழ்ச் சூழலில் அந்த வாய்ப்பு என்பது பெரிதாக நிகழவேயில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் தவிர.

இந்தப் பத்தியாளரை நோக்கி, வெளிநாட்டு ஆய்வு மாணவர் ஒருவர், "ஈழத்து (குறிப்பாக, வடக்கு - கிழக்கு) புலமைத்துவ வெளி என்பது ஏன் தொடர்ந்தும் வெற்றிடமாக இருக்கின்றது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கான புலமைத்துவ ஆய்வுக்கட்டுரைகளையோ, மக்களை நேர்வழிப்படுத்தும் ஆக்கங்களையோ காணக் கிடைக்கவில்லை.அதுக்கு காரணம் என்ன?" என்றார். இந்தக் கேள்வியை எதிர்கொள்ள வேண்டியது குறித்து இந்தப் பத்தியாளர் மனதளவில் பெரும் வருத்தமடைந்தார். ஆனால், அந்தக் கேள்வியில் இருக்கும் உண்மைத்தன்மையை குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் தவிர்க்க முடியாதது.

ஆயுதப் போராட்ட காலத்தில் அரசியல், சமூக, புலமைத்துவ தரப்பு என்று எல்லாமுமே ஒரே புள்ளியிலேயே நின்று பேசியது. ஆயுதப் போராட்டத்தின் போக்கு எதனை நோக்கியிருக்கின்றது என்பது குறித்து உணர்ந்து கொண்டிருந்தாலும், அதனைக் குறித்து வெளிப்படையாக உரையாடுவதற்கு தயாராக இருக்கவில்லை. அதிக நேரங்களில் ஆயுதப் போராட்டத்தின் போக்கினை மெச்சும் கருத்துருவாக்கங்களை மாத்திரமே பேருரைகளாக, ஆய்வுக்கட்டுரைகளாக, அரசியல் பத்திகளாக தமிழ்ச் சூழல் நிகழ்த்தியும் எழுதியும் வந்திருக்கின்றது. அதனால், தவறுகளை கழைவதற்கான புள்ளிகள் என்பவனவே இல்லாமல் போனது. அதுவே, ஒருகட்டத்தில் முள்ளிவாய்க்கால் முடிவுகளை நோக்கி தள்ளியது. அதுவரையும், தமிழ்ச் சூழலில் புலமையாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் காட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் அமைதியாகிவிட்டார்கள். ஏனெனில், அவர்கள் ஆயுதப் போராட்ட காலத்தில் பேசியதும் எழுதியதும் அதிகமானவை பொய்த்துப் போய்விட்டன. அதனைத் தாண்டி இன்றைக்கு அவர்களினால் பேசவும் எழுதவும் முடியாது. அப்படி எழுதினாலும் அதனை யாரும் கவனத்தில் எடுக்கவே மாட்டார்கள். ஏனெனில், எப்போதுமே தோற்றுப்போன கருத்தியல்களின் நீட்சியை மக்கள் சுமக்க விரும்ப மாட்டார்கள். அதற்கு இன்றும் வாழும் உதாரணங்களா பல புலமையாளர்களை ஆய்வாளர்களை தமிழ்ச் சூழலில் காணலாம். அவர்களிடம் குற்றவுணர்ச்சியும் ஏமாற்றமுமே அதிகம் மிஞ்சியிருக்கின்றது. ஏனெனில், கடந்த காலத்தில் அவர்களில் பெரும்பான்மையானோர் மாற்றுக்கருத்துக்களை நிராகரித்து நின்ற தரப்பினராகும். அவ்வாறானவர்கள் இன்றைக்கு மாற்றுக்கருத்துக்களோடு வரும்போது அவை இலகுவாக புறந்தள்ளப்பட்டுவிடும்.

யாழ். பல்கலைக்கழகம் இன்றைக்கும் ஒற்றைப் புள்ளியில் நின்று மாத்திரமே சிந்திக்கத் தலைப்படுகின்றது. மாணவர்களிடம் கருத்துருவாக்கங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்து சமூகத்துக்கு பங்களிக்க வேண்டிய புலமைத்துவ பீடமொன்று தொடர்ச்சியாக ஒற்றைப் புள்ளியில் (அல்லது ஏக வாதத்தில்) நின்று செயற்பட முனைவது என்பது அபத்தமானது. சுவஸ்திகாவின் விரிவுரையை எதிர்கொண்டு கருத்தியல் விவாதங்களை செய்யக்கூடிய மாணவர்களை உருவாக்குவதுதான் புலமைப்பீடத்தின் வேலை. மாறாக, எதிர்க்கருத்து ஒன்று வருகின்றது என்றால் அதனை எதிர்கொள்வதற்குப் பதிலாக வகுப்பு புறக்கணிப்பு, போராட்டங்கள் என்று இறங்குவது என்பது ஆரோக்கிய சமூகத்துக்கான அடையாளம் இல்லை. ஏனெனில், இவ்வாறான நிலை, கருத்தியலாக மோதும் சமூகத்தை இல்லாதொழித்துவிடும். அது, ஒரு சமூகத்தின் பெருந்தோல்வியாகும்.

சுவஸ்திகாவின் விரிவுரையை தடுத்து நிறுத்தியமையைக் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டது. அறிக்கை வெளியாகி 24 மணிநேரங்களுக்குள்ளேயே மாணவர்களின் எதிர்ப்பினால் அந்த அறிக்கை மீளப்பெறப்பட்டது. புலமைப்பீடமொன்று குறிப்பாக, ஆசிரியர்கள் அனைத்து விதமான கருத்துக்களையும் விவாதிப்பதற்கான களங்களை உருவாக்கிக் கொடுக்கும் தரப்பினராக இருக்க வேண்டும். ஆனால், யாழ். பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் சிறு எதிர்ப்பைக் கூட சமாளிக்க முடியாமல், மிக மோசமான முடிவுகளை எடுத்து நடந்து கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் சுமூகமான இயக்கத்துக்கு ஆசிரியர்களும், நிர்வாகமும் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமானது. ஆனால், அதன் பெயரினால், புலமைத்துவ வெளியை நிராகரிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சுவஸ்திகாவின் விரிவுரையை தடுத்து நிறுத்தியுள்ளதன் மூலம், தமிழ்த் தேசிய அரசியல், சமூக, புலமைத்துவப் பரப்பு தொடர்பில் எதிர் - வெளித்தரப்புக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வது போன்றே அமைகின்றது. குறிப்பாக, கருத்துக்களோடு மோதுவதற்கு தமிழ்த் தேசிய அரசியல் தயாரில்லை என்று கொழும்பு மைய தாராளவாதிகளும், புதிய இடதுசாரிக் குழுக்களும் தொடர்ச்சியாக கூறி வருகின்றன. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய வெளி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, தங்களின் தோல்விக்கான வெளிகளை திறந்துவிடக் கூடாது. யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்தது மாதிரியான விடயங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல், ஆளுமையுள்ள பரப்பாக தமிழ்த் தேசிய அரசியல், சமூக, புலமைத்துவ வெளி தன்னைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction