மனித உரிமைகளை மீறும் அன்னிய கலாச்சார மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் ஒருவரின் சொந்த சட்டமாகவும் நம்பிக்கையாகவும் மாற முடியுமா? உண்மையாக 1841ஆம் ஆண்டின் அலைந்து திரிவோர் கட்டளை சட்டம் (Vagrants Ordinance of 1841) மற்றும் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுகளை குற்றமாக்கிய 1883ஆம் ஆண்டின் தண்டனை சட்டக்கோவை (Penal Code of 1883) ஆகிய “விழுமிய சட்டங்களை” அறிமுகப்படுத்தியன் ஊடாக பிரித்தானிய காலனித்துவம் இலங்கைக்கு பரிசளித்தது இதுவேயாகும்.
பிரித்தானிய காலனித்துவத்தின் ஆழமாக சேதப்படுத்தும் தொடர்ச்சியாக உள்ள ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுகளை குற்றமாக்கும் சட்டங்களை சட்டம் மற்றும்/அல்லது நீதிமன்றங்கள் மூலம் நீக்குவதற்கு முன்னாள் காலனித்துவ நாடுகளில் முயற்சிகள் எடுத்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்த விவாதம் மீண்டும் முன்னணி வகிக்கின்றது. குடியேற்ற நாடுகளில் வாழ்கிறவர்களின் மனதில் பதியப்பட்டுள்ள விக்டோரியன் காலத்தை சேர்ந்த மத மற்றும் விழுமிய நெறிமுறைகள் மற்றும் பிரித்தானிய காலனித்துவத்தினால் சட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கம், தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆவணப்படுத்துவதைக் காணக் கூடியதாய் உள்ளது.
2023 மார்ச் மாத கணிப்பீட்டின் படி, ஐக்கிய நாடுகளின் 129 உறுப்பு நாடுகளில் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் நடத்தையை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதுடன், 62 உறுப்பு நாடுகள் இன்னும் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுகளை குற்றமாக்குவதுடன், இதற்கு மேலதிகமாக இன்னும் இரு அரசுகள் இந்த உறவுகளை செயற்பாட்டில் குற்றமற்றதாக பேணுகின்றன என சர்வதேச தன்பாலீர்ப்புள்ள பெண், தன்பாலீர்ப்புள்ள ஆண், இருபாலீர்ப்புள்ளவர், திருநர் மற்றும் எதிர்பாலீர்ப்புள்ளவர்களுக்கான கூட்டமைப்பு (International Lesbian, Gay, Bisexual, Trans and Intersex Association ; ILGA) தெரிவிக்கிறது. இவ்வாறு ஒரே பாலின பாலியல் உறவுகளை குற்றமாக்கும் அரசுகளில் 30க்கும் அதிகமான அரசுகள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் பாரம்பரியமாக ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுகளை குற்றமாக்கியுள்ளன.
பல ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் தண்டனைச் சட்டக் கோவை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டது 1860இல் மெக்காலே பிரபுவினால் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டக் கோவையினை(IPC) ஆகும். இந்திய தண்டனை சட்டக் கோவையின் பிரிவு 377 பிரித்தானியாவின் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பக்கெரி சட்டத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். இது போன்ற பிரிவுகள் அனைத்து காலனித்துவ நாடுகளிலும் உள்ள தண்டனை சட்டக் கோவைகளில் உட்புகுத்தப்பட்டதுடன் அவை “பக்கெரி சட்டங்கள்” அல்லது “சொடோமி சட்டங்கள்”(ஒரே பாற் புணர்ச்சி சட்டங்கள்) என அறியப்பட்டது. இந்த சட்டங்களை ஆங்கிலேயர்கள் காலனித்துவ நாடுகளுக்குள் கொண்டுவந்தமைக்கான காரணமாக ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் கண்டு கூறப்பட்டது யாதெனில், ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் "கவர்ச்சியான மற்றும் அதிகப்படியான காதல் சிற்றின்ப கலாச்சாரத்தினால் பிரித்தானியப் படைவீரர்கள் வழிதவறாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தினாலாகும்." காலனித்தவ நாடுகளில் தொழிலாளர் எண்ணிக்கையை செழிக்க வைப்பதற்கு அங்கு பிச்சை எடுப்பது, அலைந்து திரிவது மற்றும் வீடில்லாமல் இருப்பது ஆகியவற்றை அலைந்து திரிவோர் கட்டளை சட்டம் மற்றும் பக்கெரி சட்டங்கள் மூலம் குற்றமாக்கினர்.
வுல்ஃபென்டன்(Wolfenden) குழுவின் பரிந்துரையின் பேரில் 1967ஆம் ஆண்டில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், 21 வயதுக்கு மேற்பட்ட இரு ஆண்களுக்கு இடையேயான தன்பாலீர்ப்பு நடவடிக்கைகளை குற்றமற்றதாக்கியது. ஜெ. எஸ். மில் மற்றும் எச்.எல்.ஏ. ஹார்ட் ஆகியோரால் பிரபலப்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடையிலான உறவுகள் தொடர்பான தொடர்பு 1957ஆம் ஆண்டு வுல்ஃபென்டன் குழுவின் ஆய்விற்கு உட்பட்டது. “சட்டம் எனும் முகவர் மூலம் குற்றத்தினை பாவத்துடன் சமப்படுத்த சமூகம் வேண்டுமென்றே முயற்சிக்கும் சந்தர்ப்பத்தினை தவிர, தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் ஒழுக்கமின்மை ஆகியவற்றுக்கென ஓர் தனிப்பட்ட பரப்பு காணப்பட வேண்டும் என்பதுடன், இதனை சுருக்கமாகவும் எளிமையான வார்த்தைகளாலும் கூறும் போது சட்டத்தால் எதன்மீதும் அத்தியாவசியம் இல்லாமல் உள்நுழைய முடியாது என்பதோடு அதன் உள் அர்த்தத்தை புரிந்துகொண்டு குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டியது கெடுதல்களை குறைத்துக்கொள்வதற்கே அல்லாமல் ஒழுக்கக் கொள்கைகளை இயற்றுவதற்கு அல்ல” என அவ்வறிக்கை கூறியது. இந்த சட்டங்களை பயன்படுத்தி நபர்களை அச்சுறுத்துவதற்கும், அவ்வாறு அவமானம் அச்சுறுத்தல்களுக்கு உள்ளான நபர்கள் தமக்கு எதிராக “சொடோமி சட்டங்களின்” கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமோ என்ற அச்சத்தினால் அது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் சென்று புகாரளிக்காமல் இருப்பதாக இந்த அறிக்கை எச்சரிக்கின்றது. இது உண்மையாக இருப்பதுடன் இன்றும் இலங்கையில் பொதுவான நிகழ்வாகும்.
2018 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரசா மே பொதுநலவாய நாடுகளிடம், காலனித்துவ நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட “சொடோமி சட்டங்களுக்கும்” அதன் விளைவாக ஏற்பட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் மரணம் ஆகியவற்றில் பிரித்தானியாவின் பங்களிப்பை நினைத்து மிகவும் வருத்தப்படுவதாக தெரிவித்தார். ஆகவே இதுவரை அவ்வாறு செய்யாத பொதுநலவாய நாடுகளிடம் ஒரே பாலின பாலியல் நடத்தை உறவுகளை குற்றமற்றதாக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை தண்டனை சட்டக் கோவை பிரிவு 365 மற்றும் பிரிவு 365 A ஆகியவை முறையாக “இயற்கை நியதிக்கு முரணான தவறுகள்” மற்றும் “ஆட்களுக்கு இடையில் மிக்க இழிவான செயல்கள்” என்பனவற்றைக் குற்றமாக்குகிறது. தண்டனை சட்டக் கோவை இந்த சொற்றொடர்களுக்கு தெளிவான பொருளை வழங்காவிட்டாலும், இரு பிரிவுகளும் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் செயல்களை குற்றமாக்குகின்றது என பரவலாக புரியப்பட்டுள்ளது. இந்த "குற்றங்களை" செய்தவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கொடுக்கப்படலாம்.
இலங்கையின் அலைந்து திரிவோர் கட்டளை சட்டமானது இந்தியாவின் பக்கெரி சட்டங்கள் போல ஒழுக்கமான நடத்தையை நடைமுறைப்படுத்துவதற்காக “கலவரம் செய்தல் மற்றும் ஒழுங்கற்ற விதத்தில் செயற்படுதல்”, “அலைந்து திரிதல்”, “தரித்திரத்தல்”, “பொய்யாக பாசாங்கின் பேரில் பிச்சை எடுத்தல்”, “காயங்கள், ஊனம், குஷ்ட நோய் அல்லது வேறு அருவருப்பான நோய்களை வெளிப்படுத்த முயல்தல்,“பணம் கேட்டல்” அல்லது “ஒழுக்கமற்ற செயல்கள்” போன்ற சில சமூக நடத்தைகளை தண்டனைக்குட்படுத்துகிறது. பொலீசார் வழமையாக இந்த அலைந்து திரிவோர் கட்டளை சட்டத்தை பயன்படுத்தி அவர்களது உண்மையான அல்லது அனுமானிக்கப்பட்ட பாலீர்ப்பு, பாலின அடையாளம், அல்லது பாலின வெளிப்பாடு ஆகியவற்றின் கீழ் கைது செய்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபடுவதில்லை அத்துடன் மிக அரிதாகவே அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறாரக்ள். அதற்கு பதிலாக அவர்கள் துன்புறுத்தப்படுவதோடு கேலி செய்யப்பட்டு அநேகமாக அவர்கள் விடுதலை அடைய வேண்டி லஞ்சம் செலுத்தவும் நேரிடுகிறது.
அலைந்து திரிவோர் கட்டளை சட்டத்தை நீக்குமாறும், முக்கியமாக தடுப்பு இல்ல கட்டளை சட்டத்தினையும் (Houses of Detention Ordinance) அலைந்து திரிவதுடன் தொடர்புடைய ஏனைய அனைத்து சட்டங்களையும் மீளாய்வு செய்து அந்த சட்டங்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் தரங்களுக்கு அமைவாக இருக்கின்றதா என உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுனர் ஆணைக்குழுவால் (ICJ) கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு விளக்க அறிக்கையொன்றில் கோரியது.
“காலனித்துவ சட்டவியலை நீக்குதல்: காலனித்துவத்திற்குப் பின்னரான நாடுகளில் விளிம்புநிலை மக்களின் கண்ணியம், தனியுரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டப்படாமை ஆகிய உரிமைகளைப் பாதுகாத்தல்”தொடர்பாக 2023 மார்ச் மாதம் சர்வதேச சட்டவல்லுனர்கள் ஆணைக்குழுவால் ஆசிய மற்றும் ஆபிரிக்க நீதிபதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடன் தெற்கு - தெற்கு சட்ட கருத்தாடல் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த கருத்தாடல் மூலம் முன்னாள் காலனித்துவ நாடுகளில் வாழும் பாலியல் மற்றும் பாலின சிறுபான்மையினரைச் சேர்ந்த தனிநபர்களின் மனித உரிமைகள் மீது சட்டம் மற்றும் காலனித்துவம் ஏற்படுத்திய தாக்கம் பற்றி கவனிக்கப்பட்டது. ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுகளை குற்றமற்றதாக்குதல் மற்றும் தன்பாலீர்ப்புள்ள பெண், தன்பாலீர்ப்புள்ள ஆண், இருபாலீர்ப்புள்ளவர், திருநர் மற்றும் எதிர்பாலீர்ப்புள்ளவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் பிரித்தானிய காலனித்துவ கருத்துக்கள் வாயிலாக சட்டத்தின் மூலம் வேரூன்றப்பட்டதன் விளைவாகும் என்று கருத்தாடலில் பங்கேற்ற அனைவரும் உடன்பட்டதுடன், குற்றமாக்குதல் அல்லது பாகுபாடு காட்டுதல் என்பன காலனித்துவ நாடுகளில் காணப்பட்ட வளமான கலாச்சார பாரம்பரியத்தின் மூலம் வழித்தோன்றலாக வந்ததல்ல என்பதை விழிப்புணர்வூட்டுவதே அத்தியாவசியமானதாகும் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒரே பாலின பாலியல் உறவுகளை சித்தரிக்கும் இந்தியாவின் கஜுராஹோ மற்றும் கொனார்க்கில் உள்ள இந்துக் கோவில்களிலும், அஜந்தா மற்றும் எல்லோராவில் உள்ள புனிதமான பௌத்த குகைகளிலும் உள்ள சிலைகள் மற்றும் ஓவியங்கள், மற்றும் திருநர் மற்றும்/அல்லது எதிர்பாலீர்ப்புள்ளவர்கள் என நம்பப்படும் அரவான் மற்றும் சிகண்டி எனும் மகாபாரதத்தின் புராண கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் பிரித்தானியர்கள் மூலம் பரப்பப்பட்ட குறுகிய மத மற்றும் காலாச்சார எண்ணக்கருக்களை விட மிகவும் முற்போக்கான இலட்சணங்கள் தமது கலாச்சாரங்களில் இருப்பதாக சுட்டிக்காட்டி இந்தியா மற்றும் நேபாள் நீதிபதிகளினால் வாதங்கள் கட்டியெழுப்பப்பட்டன. தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் சீஷெல்ஸ் போன்ற ஆபிரிக்க நாடுகளும் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுகளை குற்றமற்றதாக்கியதன் மூலம் காலனித்துவ ஆட்சியின் தளைகளை நீக்கியுள்ளது. இந்த முன்னேற்றமானது தங்களது கலாச்சார அடையாளங்களை தழுவிக்கொண்டமையாலும் உபுண்டு அல்லது ஆபிரிக்க மனிதநேயத்தின் அடிப்படைக் கருத்தைத் தழுவியதன் விளைவாக LGBTI நபர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அறிந்தமையால் ஏற்பட்டதாகும். ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுகள் மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று மக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கையை வெளியேற்றுவதற்கும், இதில் நிலவும் உண்மை தன்மை இதற்கு எதிராக முற்றிலும் வேறுபட்டது என சுட்டிக்காட்டுவதும் இது தொடர்பான புரிதல்களை பெறுவதற்கு அத்தியாவசியமாகும். அவ்வுறவுகளை ஏற்றுக்கொள்வது ஆசிய மற்றும் ஆபிரிக்க கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போது ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான உறவுகள் மீதான பயம் மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆகும்.
1994ஆம் ஆண்டு டூனன் எதிர் ஆஸ்திரேலியா (Toonen v. Australia) வழக்கில் தாஸ்மேனியாவின் “சொடோமி சட்டங்கள்" சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயத்தின் (ICCPR) 17ஆம் உறுப்புரையையும் (தனியுரிமை) 26ஆம் உறுப்புரையையும் (பாகுபாடு காட்டப்படாமை) மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தீர்ப்பளித்தது. அதேபோல தாஸ்மேனியாவால் முன்வைக்கப்பட்ட பொதுமக்கள் விழுமியங்களை காத்தல் என்ற வாதத்தை மனித உரிமைகள் குழு நிராகரித்தது. அதிலிருந்து ஒரே பாலின உறவுகளுக்கிடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலின உறவுகள் குற்றமற்றதாக்கும் படி மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் ஏனைய சமவாயத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குழுக்களால் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. மிக சமீபத்தில் இதே போன்ற பரிந்துரைகளை இலங்கைக்கு வழங்க மனித உரிமைகள் குழு தீர்மானித்தது.
பாலியல் மற்றும் பாலின சிறுபான்மையினரை ஏற்றுக்கொண்ட வளமான கலாச்சாரத்திற்கு தாம் உரித்துடையவர்கள் என கென்யா மற்றும் உகாண்டா போன்ற அரசுகளிலுள்ள ஆர்வலர்கள் சக பிரஜைகளுக்கு நினைவூட்டுவதற்கு போராடும் போது பாகிஸ்தானில் சற்றே முன்னேற்றகரமான 2018 ஆம் ஆண்டின் திருநர் பாதுகாப்பு சட்டத்தை (Transgender Protection Act of 2018) நீக்குவதன் மூலம் மனித உரிமைகளை இழக்க செய்யும் சட்ட வரைபுகளுக்கு எதிராக அந்நாட்டின் ஆர்வலர்கள் போராட்டங்கள் செய்யும் போது இந்த விவாதம் அந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் ஒரே பாலுறவுகளை குற்றமற்றதாக்குதல் என்பது மறுபடியும் சூடான தலைப்பாக இலங்கையிலும் உருமாறியிருப்பதால் எமது நாட்டிற்கும் இது முக்கியமானது என்பதை நினைவூட்டல் அவசியமாகும். ஒரே பாலின உறவுகளுக்கிடையிலான ஒப்புதலுடன் கூடிய உறவினை குற்றமற்றதாக்கி பாலியல் மற்றும் பாலின சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தேவையான சட்ட சீர்த்திருத்தத்தை அறிமுகம் செய்து காலனித்துவ ஆட்சியின் கீழ் எமக்கு அளிக்கப்பட்ட விழுமியங்களிலிருந்து விடுபட்டு LGBTI தனிபர்களுக்கு எதிராக நடைபெறும் பாகுபாடு காட்டப்படுதலை ஒழித்து அவர்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பை பெற்றுக்கொடுக்க முடியும் என இலங்கை நிரூபித்து காட்ட வேண்டும்.
கட்டுரை ஆசிரியர் - மதுரி தமிழ்மாறன், தேசிய சட்ட ஆலோசகர்- இலங்கை, சர்வதேச சட்டவல்லுனர் ஆணைக்குழு