உயிர் வாழ்வதற்கு இரத்தம் இன்றியமையாதது என்றும், இரத்த தானம் செய்வதால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறுவதும் சாதாரணமானது. உலக சுகாதார நிறுவனம் இரத்த தானம் என்பதனை மற்றுமொரு நபருக்குக் கொடுக்கும் விலைமதிப்பற்ற பரிசு என்று கூறுகிறது. அவ்வாறிருக்கும் போது ஏன் இத்தகைய தாராள பண்பினை பாகுபாட்டிற்கும், களங்கத்திற்கும் உள்ளாக்க வேண்டும்?
இலங்கையில், தேசிய இரத்த மாற்ற சேவையினால் (NBTS) வெளியிடப்பட்டுள்ள இரத்த தான வழிகாட்டுதல்களில், இரத்த தானம் செய்பவர் ‘அச்சுறுத்தலான நடத்தைகளுக்கு உள்ளாகாதவராக இருக்க வேண்டும்' எனக் குறிப்பிடுகிறது. அந்த வழிகாட்டுதல்கள் பின்வரும் நடத்தைகளை "அச்சுறுத்தலான நடத்தைகள்" என அடையாளம் காட்டுகின்றது:
1.ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணைகளை கொண்டிருத்தல்
2.ஆண்கள் பிற ஆண்களுடன் புணர்வு கொள்ளுதல் (MSMs);
3.ஒரு முறையாவது பாலியல் தொழிலில் ஈடுபட்டிருத்தல்;
4.கடந்த ஆண்டில் "ஆபத்தான பாலியல் நடத்தையில்" ஈடுபட்டிருத்தல்; மற்றும்
5.குறைந்தது ஒரு முறையாவது ஊசி மூலம் போதை மாத்திரைகளை உட்செலுத்தியிருத்தல்
இதன் விளைவாக, மக்கள் இவர்களை "அச்சுறுத்தலான நடத்தைகளுக்கு" உள்ளானவர்கள் என வகைப்படுத்துவதன் மூலம், இந்த வழிகாட்டுதல்கள் தன்பாலீர்ப்புள்ள ஆண்கள், இருபால் ஈர்ப்புள்ளோர் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராகவும் களங்கம் மற்றும் பாகுபாட்டினை நிலைநிறுத்துகின்றன.
வரலாற்று ரீதியாக தன்பாலீர்ப்புள்ள ஆண்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினை கடத்துபவர்களாக முத்திரை குத்தப்பட்டிருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள், புதிய தொழில்நுட்பத்தின் தோற்றங்கள் என்பன எச்.ஐ.வி வைரஸைப் பற்றிய புரிதலையும் கொண்டு வந்துள்ளன. எச்.ஐ.வி பற்றிய அறிவியல் மற்றும் மருத்துவ சான்றுகள் மற்றும் பரவும் வழிமுறைகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சைகள் போன்றவை இரத்த தானம் பற்றிய தேசிய வழிகாட்டுதல்களை சீர்திருத்துவதை சாத்தியமாக்குவதுடன், இதனால் அவை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரங்களுக்கு இணங்குகின்றன. மேலும், தேசிய எச்.ஐ.வி புள்ளிவிபர தரவுகளுக்கு அமைவாக 2020 இல் பதிவான 363 புதிய தரவுகளில், 48% ஆண்களுடன் புணர்வு கொள்ளும் ஆண்கள் என்றாலும், சுமார் 41% பேர் எதிர்பாலீர்ப்பில் உள்ளவர்கள் ஆவர்.
"ஆபத்தான நடத்தைகள்" என வழிகாட்டுதல்கள் அடையாளம் காணும் நடத்தையானது, யாருக்கும் பொருந்தும் போது - அவர்களின் உண்மையான அல்லது உணரப்பட்ட பாலீர்ப்பு , பாலினம், பாலின அடையாளம் அல்லது பாலின வெளிப்பாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் – அவ்வழிகாட்டுதல்கள் உண்மையில் தன்பாலீர்ப்புள்ள மற்றும் இருபால் ஈர்ப்புள்ளோர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் என வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுவோரை மேலும் பாகுபாடு மற்றும் சமூகக் களங்கத்துக்கு ஆளாக்கின்றன. இதன் விளைவாக அவர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் களங்கம் நீடித்து நிலைத்திருக்கும். அந்த களங்கம், அவர்களது குருதி வரை நீண்டுள்ளது.
தன்பாலீர்ப்புள்ள ஆண்கள் மற்றும் இருபால் ஈர்ப்புள்ளோர் ஏற்கனவே குற்றவியல் ரீதியான உட்பட வெவ்வேறு விதமான பாகுபாடு, சமூகக் களங்கம் மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியனவற்றை அனுபவிக்கின்றனர். 1833 ஆம் ஆண்டின் இலங்கை தண்டனைச்சட்டக்கோவை பிரிவு 365 மற்றும் பிரிவு 365 A ஆகியன முறையே ‘இயற்கை நியதிக்கு முரணான தவறுகள்’மற்றும் ‘ஆட்களுக்கு இடையில் மிக்க இழிவான செயல்கள்’என்பதனை குற்றமாக்கின்றது. தண்டனைச்சட்டக்கோவை இந்த சொற்றொடர்களுக்கு தெளிவான பொருளை வழங்காவிட்டாலும் , இரு பிரிவுகளும் சம்மதத்துடனான ஒரேபால் பாலியல் உறவுகளை, தன்பாலீர்ப்புள்ள ஆண்கள் மற்றும் இருபால் ஈர்ப்புள்ள ஆண்கள் போன்றவர்களை குற்றவாளியாக்குகின்றது. இந்த "குற்றங்களை" புரிந்தவர்கள் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கலாம்.
அனைத்து முக்கிய சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளிலும் இலங்கை ஒரு அங்கத்துவ நாடாகும். எனவே, மனித உரிமைகள், அதாவது பாகுபாட்டிலிருந்து சுதந்திரம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உரிமை மற்றும் பாகுபாடு இல்லாமல் சட்டத்தின் சம பாதுகாப்புக்கு உரித்துடைமை ஆகியவை சர்வேதச ஒப்பந்தங்களின் கீழ் இலங்கையை பிணைத்துள்ளது. இந்த சமவாயங்கள் ஆண்களுடன் புணர்வில் ஈடுபடும் ஆண்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் இருபாலீர்ப்புள்ள ஆண்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்துவம் மற்றும் பாகுபாடின்மைக்கான உரிமையை உத்தரவாதம் செய்கின்றன. அரசின் மேலதிக கடைமைகளில் ஒன்றாக உயர்தரமான சுகாதார தரத்தை பேணுவதற்கான உரிமையினை நிறைவேற்றுகையில் (யோக்கியகர்த்தா கொள்கைகளின் 17ஆம் கொள்கை), YP + 10 இற்கு அமைவாக "இரத்தம், பாலணுக்கள், கருக்கள், உறுப்புகள், செல்கள் அல்லது பிற திசுக்களின் தானம் தொடர்பான சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள் அல்லது வேறு ஏதேனும் நிர்வாக நடவடிக்கைகளின் அளவீடுகள் பாலீர்ப்பு, பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு அல்லது பாலின பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்பதை உறுதி செய்தல்" என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை அரசியலமைப்பின் 12 ஆம் உறுப்புரை சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உரிமை மற்றும் அனைத்து நபர்களுக்கும் சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடைசெய்கிறது, இருப்பினும் பாலீர்ப்பு , பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டை தெளிவாக தடை செய்யவில்லை. எனினும் இலங்கை அரசாங்கம் பல்வேறு ஐ.நா. அமைப்புகளுக்கு முன் அரசியலமைப்பின் 12ஆம் உறுப்புரை பாலீர்ப்பு , மற்றும் பாலின அடையாளம், ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில் இருந்து சுதந்திரமாக இருப்பதற்கான உரிமையை உறுதி செய்கிறது என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள இலங்கையின் தண்டனை சட்டக் கோவை பிரிவு 365 மற்றும் பிரிவு 365A போன்றவை மற்றும் சட்டத்தின் பிரயோகப் பயன்பாடு இந்த வாதத்தை முற்றிலும் மறுப்பது போல் தெரிகிறது.
MSMகள் இரத்த தானம் வழங்குவதற்கு அவசியமான இரத்த தானம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதுடன் வழங்குனர்களின் தகுதிகளை அளவிடும் காலங்கடந்த விதிமுறைகள் ஆகிவற்றை கடந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. பாலியல் தொழிலாளர்கள் விடயத்திலும் இதே தன்மை தான் நிலைத்துள்ளது. பிரித்தானியாவில் பல ஆர்வலர்களால் நடாத்தப்பட்ட "நன்கொடை பாகுபாடு அல்ல" எனும் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 2021 இல் இரத்த தான விதிகளில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக, தற்போது தகுதியானது நன்கொடையாளரின் தனிப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், அது அவர்கள் எந்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை சார்ந்து அல்ல. பாலினம் அல்லது பாலீர்ப்பை பொருட்படுத்தாமல், மூன்று மாதங்களுக்கு முதல் யாராவது ஒரு புதிய துணையுடன் அல்லது பல துணைகளுடன் ஆசனவாயில் வழியாக உடலுறவு கொண்டால், அவர்கள் இரத்த தானம் செய்வதற்கு முன் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆகையால், மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேலான காலத்துக்கு ஒரே துணையைக் கொண்ட ஆண்களுடன் புணர்வு கொள்ளும் ஆண்கள் (MSM) இரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பிரான்ஸ், கனடா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இரத்த தானக் கொள்கையில் இதே போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், ஜெர்மனி இதேபோன்ற விதிகளை ஏப்ரல் 2023 முதல் அமுல்படுத்துவதாக அறிவித்தது.
அதற்குப் பதிலாக, இலங்கை NBTS வழங்கும் இரத்த தானம் படிவத்தில், மேலே குறிப்பிடப்பட்ட (i) முதல் (v) வரையிலான பிரிவுகளுக்குள் உட்படுபவர்கள் இதற்கு தகுதியற்றவர்கள் அல்லது அவர்களின் துணைகள் இவற்றுக்குள் உள்ளடங்கினால் தகுதியற்றவர்கள் என்பதை நன்கொடையாளர் அறிந்திருக்கிறாரா என்று வினவுவதன் மூலம் ஒருவரின் பாலீர்ப்பினை நேரடியாக ஒப்புக்கொள்ள நேரிடுகிறது. அவ்வாறிருக்கும் போது இவ்வாறான ஒரு அணுகுமுறை எந்தவொரு இரத்த தான வழங்குனரையும் அவர்கள் இரத்த தானம் செய்ய அவர்களுக்கு இருக்கும் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தமது பாலீர்ப்பு தொடர்பாக ஏமாற்ற ஊக்குவிக்கும். இது தொடர்பான அக்கறையுடைய நபர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்களின் போது, தன் பாலீர்ப்புள்ள ஆண்கள் மற்றும் இருபாலீர்ப்புள்ள ஆண்கள் இரத்த வழங்குனர்களாக இருக்கும் பட்சத்தில் தங்களை MSMகளாக அடையாளப்படுத்தாமல் அல்லது இரத்த தானம் செய்வதற்காக கேட்கப்படும் வெவ்வேறு விதமான கேள்விக்கு வேறுபட்ட பதிலை வழங்க விரும்புவதைக் குறிப்பிட்டுள்ளனர். சில வேளைகளில், அவர்கள் தங்களை MSMகளாக அடையாளம் கண்டுகொண்டாலும், தனிப்பட்ட இடர் மதிப்பீட்டிற்குப் பின்னரே அவர்கள் இரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இரத்த தானம் செய்வதோடு தொடர்புடைய சாத்தியமான அபாயங்கள் பற்றிய ஒவ்வொருவரின் தனிப்பட்ட மதிப்பீடு உண்மையில் பாலீர்ப்பின் அடிப்படையிலான முழுமையான தடைக்கான தேவையை நிராகரிக்கிறது, ஏனெனில் NBTS அனைத்து HIV, ஹெபடைடிஸ் B மற்றும் C, சிபிலிஸ் மற்றும் மலேரியாவுக்கு உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டபடி தானம் செய்யப்படட்ட அனைத்து இரத்தத்தையும் ஏலவே பரீசீலனை செய்கின்றது.
இலங்கையின் காலம் கடந்த இரத்த தானக் கொள்கையை சீர்திருத்துவதன் நன்மையான தாக்கங்கள் பன்மடங்கு உள்ளன. முதலாவதாக, இடர் மதிப்பீடு தனிப்பட்ட நடத்தையை அடிப்படையாகக் கொண்டிருத்தல் - மற்றும் அது பாலீர்ப்பினை பாகுபாட்டுக்குள்ளாக்கும் அல்லது சமூகக் களங்கத்தை தோற்றுவிக்கும் முறையுடன் தொடர்புபட்டதல்ல - அவ்வாறிருக்கும் போது "அச்சுறுத்தலான நடத்தைகள்" தொடர்பான கேள்விகளுக்கு துல்லியமான மற்றும் உண்மையுள்ள பதில்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இரண்டாவதாக, ஒரே பால் பாலியல் உறவுகள் மற்றும் எச்.ஐ.வி ஆகியவற்றில் குறைவான சமூகக் களங்கம் இருக்கும்போது, அதிகமான மக்கள் எச்.ஐ.வி பரிசோதனைக்கு முன்வருவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யும் போது தன்பாலீர்ப்புள்ள மற்றும் இருபால் ஈர்ப்புள்ளோர் அதிகளவான எச்ஐவி பரிசோதனையை செய்துகொள்ள ஊக்குவிக்கும். பரிசோதனையின் காரணமாக மக்கள் தங்கள் எச்.ஐ.வி நிலையைப் பற்றி அதிகம் அறிந்திருப்பார்கள், அதன் பரவலை குறைக்கவும் சிகிச்சை பெறவும் அணுகுவார்கள். மூன்றாவதாக, வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்வது, பொது சுகாதார அதிகாரிகளுக்கு இரத்தத்திற்கான தேவையை பூர்த்தி செய்வதற்கான திறனை மேம்படுத்தும் .
ஒரே பால் பாலீர்ப்பு என்பது "அச்சுறுத்தலான நடத்தைகள்" என அடையாளம் காணப்பட்டால், பாகுபாடு, களங்கம், ஏளனம் மற்றும் துன்புறுத்தலுக்கு அவர்களை உள்ளாக்குவதோமடு அவர்களை மனிததன்மையற்றவர்கள் என தோற்றப்பாட்டை உருவாக்குகிறது. தற்போதுள்ள பாரபட்சமான வழிகாட்டுதல்களை சீர்திருத்துவது ஆண்களுடன் புணர்வு கொள்ளும் ஆண்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் மன உறுதியையும் சாதகமாக மேம்படுத்தும், அதே நேரத்தில் இரத்த தானத்தில் மதிப்புமிக்க தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
கட்டுரை ஆசிரியர்: மதுரி தமிழ்மாறன், தேசிய சட்ட ஆலோசகர்- இலங்கை, சர்வதேச சட்டவல்லுனர் ஆணைக்குழு