உலகில் இதுவரை சுமார் 57 நாடுகளில் கோவிட்-19 வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரோன் பரவியிருப்பது அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இதன் பரவுகை அதிகரிக்கும் அதே நேரம் கவலையளிக்கக் கூடிய விதத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என உலக சுகாதாரத் தாபனம் எச்சரித்துள்ளது.
மேலும் சர்வதேசம் உரிய நடவடிக்கைகள் எடுக்கா விட்டால் இது கோவிட் பெரும் தொற்றின் போக்கை இன்னும் அச்சுறுத்தலானதாக ஆக்கி விடும் என்றும் WHO தெரிவித்துள்ளது. ஒமைக்ரோன் மாறுபாடு தடுப்பூசிகளின் திறனை எந்தளவு மீறக் கூடியது என்பதை அறிய இன்னும் தரவு ஆய்வுகள் தேவை என்றும் WHO தெரிவித்துள்ளது. இதனால் முன்பு உலகை அச்சுறுத்திய டெல்டா மாறுபாட்டுக்கு ஒமைக்ரோன் இணையானதா அல்லது வலு குறைந்ததா என்று இப்போது கூற முடியாது என்றாலும், ஒமைக்ரோனின் அதிவேக தொற்றானது, வைத்திய சாலையில் அனுமதிக்கப் படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் WHO கூறியுள்ளது.
இதேவேளை ஜப்பானிய விஞ்ஞானிகளின் ஆய்வொன்றின் படி கோவிட்-19 வைரஸின் புதிய ஒமைக்ரோன் திரிபானது அதன் ஆரம்பக் கட்டத்தில் டெல்டா மாறுபாட்டை விட 4.2 மடங்கு அதிகமாக இன்னொருவருக்குத் தொற்றக் கூடியது என்று ஜப்பானின் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய கியோட்டோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ஹிரோஷி நிஷியூரா மேலும் தெரிவிக்கையில் கோவிட் இற்கு எதிராக இயற்கையாகவும், தடுப்பூசிகளாலும் கட்டி எழுப்பப் படக் கூடிய நோய் எதிர்ப்பு கட்டமைப்பில் இருந்தும் இந்த ஒமைக்ரோன் வைரஸ் தப்பக் கூடியது என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.