free website hit counter

4தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இம்ரான் கான் அரசு பெரும்பான்மை இழப்பு! : விரைவில் பாகிஸ்தானில் தேர்தல்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு மீது மார்ச் 28 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதில் வெற்றி பெறத் தேவையான பெரும்பான்மை வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் கட்சி சுவீகரிக்க இயலாது என்று கருத்துக் கணிப்பு வெளியாகி இருந்தது.

ஆனாலும் எதிர்க்கட்சிகளின் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத் துணை சபாநாயகர் ரத்து செய்தார். இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகளால் பாகிஸ்தானின் புதிய பிரதமராக
ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப் பட்டார். பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பத்தால் நாடாளுமன்றம் ஏப்பிரல் 28ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தானில் புதிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்களைத் தயாராகுமாறு இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார். மறுபுறம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இந்த ரத்து நடவடிக்கை தொடர்பில் விசாரணையையும் ஆரம்பித்துள்ளது.

 


உக்ரைனின் புக்கா நகரில் ரஷ்யத் துருப்புக்களால் படுகொலை செய்யப் பட்ட பொது மக்கள்?

ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் புக்கா நகரில் கைகள் பின்புறம் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்ட நிலையில் ஓருடல் கைப்பற்றப் பட்டது. 5 கிழமைகளுக்கு முன் ரஷ்யத் துருப்புக்களால் முற்றுகையிடப் பட்ட இப்பகுதியில் இது போன்ற நூற்றுக் கணக்கான சடலங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.

கடந்த வார இறுதியில் ரஷ்யத் துருப்புக்கள் பின்வாங்கிய பின் இவ்வாறு 50 சடலங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக அந்நகரின் பிரதி மேயர் தெரிவித்துள்ளார். இது மிக மோசமான யுத்தக் குற்றம் என உக்ரைன் கண்டித்துள்ள நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறையோ இதனை நிராகரித்ததுடன் உக்ரைன் வேண்டுமென்றே இவ்வாறு சித்தரிப்பதாகவும் பொது மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப் படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 


ஜேர்மனியில் போலி கோவிட் பத்திரங்களுக்காக 90 தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்

ஜேர்மனியில் தமது தடுப்பூசி செலுத்தும் முறைக்காக காத்திருக்காதவர்களுக்கு போலியான கோவிட் பத்திரங்களை ஆரிஜினல் பேட்ச் இலக்கங்களுடன் விற்பதற்காக 90 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயது நபர் ஒருவர் குற்றத் தடுப்பு போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

கிழக்கு ஜேர்மனியின் மேக்டேபர்க் நகரைச் சேர்ந்த இந்த நபரது பெயர் விபரங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடப் படவில்லை. இவர் இன்னும் சிறையில் அடைக்கப் படவில்லை என்ற போதும் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.

பல்வேறு வகைப்பட்ட இந்த 90 தடுப்பூசிகளும் குறித்த நபரின் உடலுக்கு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தியுள்ளன என்ற தகவல் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. போலி கோவிட் பத்திர பரவலைக் கட்டுப்படுத்த பொது மக்கள் இடங்களில் போலிசார் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜேர்மனியில் கோவிட் பெரும் தொற்றுக்கு இதுவரை 130 029 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

 

 

சீனாவின் ஷாங்காய் லாக்டவுனுக்குப் பின் கடும் உணவுத் தட்டுப்பாடு

சீனாவில் ஷீரோ கோவிட் தொற்று சட்டம் கடுமையாக உள்ளதால் அங்கு பல மில்லியன் மக்கள் வசிக்கும் மிகப்பெரும் வர்த்தக நகரான ஷாங்காயில் அண்மையில் ஏற்பட்ட கோவிட் தொற்றுப் பரவலைத் தடுக்க முழுப் பொது முடக்கம் ஒரு வாரத்துக்கும் அதிகமாக அமுல் படுத்தப் பட்டது.

இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அங்கு ஆன்லைனில் மிகப் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொருட்கள் விநியோகிப்பதற்கான ஆர்டர்கள் திகைக்க வைப்பதாக இருப்பதாகவும் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தற்போது இந்த லாக்டவுனை சற்று தளர்த்துவதற்கு சீன அரசு சிந்தித்துள்ள நிலையில் 25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷாங்காயின் மக்களை கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த இது உதவும் என்றும் நம்பப் படுகின்றது.

வெள்ளிக்கிழமை மாத்திரம் சீனா முழுதும் சுமார் 7300 புதிய கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிக மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத் தலைநகர் சேக்ரமண்டோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 6 பேர் கொல்லப் பட்டும் 12 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. அதிகாலை 2 மணிக்கு டவுண்டவுன் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இந்தத் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. கொல்லப் பட்டவர்களில் 3 ஆண்களும், 3 பெண்களும் அடங்குகின்றனர்.

சம்பவ இடத்தில் சில திருட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப் பட்டுள்ளன. அமெரிக்காவில் 2021 ஆமாண்டு சட்ட ரீதியாக விற்கப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கை மாத்திரம் 20 மில்லியனுக்கும் அதிகமாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction