ஆப்கானிஸ்தானில் வாழும் ஒவ்வொரு சிறுமி மற்றும் பெண்களினதும் அடிப்படை உரிமைகளை தலிபான்கள் உணர்ந்து அங்கீகரிப்பது மிக அவசியம் என ஐ.நா பாதுகாப்பு செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றி 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அங்கு நாளுக்கு நாள் மனிதாபிமான மற்றும் பொருளாதார நிலமைகள் மிகவும் மோசமடைந்தே வந்துள்ளது.
இந்நிலையில் ஆப்கான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கி உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு உதவ ஐ.நா மட்டுமன்றி சர்வதேச சமூகமும் அங்கு மனித உரிமைகள் மீளத் தாபிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன் வைத்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் வெளியிட்ட டுவிட்டர் அறிவிப்பில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'ஆப்கானிஸ்தானில் பெண்களும், சிறுமிகளும் மீண்டும் ஒருமுறை தமது கல்வி, தொழில் மற்றும் சமநீதி புறக்கணிக்கப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் உரிய பொறுப்புணர்வுடன் பூகோள சமூகத்தில் ஒரு அங்கமாக இணைய தலிபான்கள் ஒவ்வொரு பெண் மற்றும் சிறுமியினதும் அடிப்படை உரிமைகளை உணர்ந்து அங்கீகரிப்பது மிக அவசியம்..' என்றுள்ளார்.
ஆப்கான் மிக மோசமான வறட்சி, பெரும் தொற்று, பொருளாதாரச் சரிவு மற்றும் போரின் பின் விளைவுகள், பட்டினி ஆகிய பிரச்சினைகளை தற்போது எதிர்கொண்டு வருகின்றது. அங்கு வசிக்கும் சுமார் 24 மில்லியன் மக்கள் தீவிர உணவுப் பற்றாக்குறையை சந்திக்கின்றனர். ஐ.நா இன் கணிப்பின் படி, ஆப்கான் மக்கள் தொகையில் அரைப் பங்குக்கும் அதிகமான மக்கள் இந்த குளிர் காலத்தில் பட்டினியை எதிர் நோக்குவர் என்றும், இந்த வருடம் மக்கள் தொகையில் 97% வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப் படுவர் என்றும் கூறப்படுவது அதிர்ச்சியளிக்கின்றது.
ஆனாலும் ஆப்கான் மக்களை அப்படியே புறக்கணிக்க முடியாது என்றும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் சென்றடைய உரிய நடவடிக்கைகளை ஐ.நாவும், சர்வதேச சமூகமும் தீவிரமாக மேற்கொள்ளும் என்றும் அந்தோனியோ கட்டரஸ் உறுதியளித்துள்ளார்.