சிரியக் கிளர்ச்சிகளை அடுத்து அங்கிருந்து வெளியேறிய சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் அசாத் குடும்பத்தினருடன் மாஸ்கோவில் தஞ்சம் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா அவர்களுக்கு புகலிடம் வழங்கியதான கிரெம்ளின் தகவல்களை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளிவந்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில், ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு, கடந்த வாரம் போரைத் தொடங்கியதிலிருந்து, சிரியாவின் அலெப்போ உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் அரச படைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ரஷ்யா, ஈரான் நாடுகள் தங்கள் உஆதரவினைக் நிறுத்திக் கொண்டதால், சிரிய தலைநகர் டமாஸ்கஸுக்குள் கிளர்ச்சியாளர்கள் குழு நுழைந்தது. டமாஸ்கஸ் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய நிலைகளை கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய அதிபர் பஷர் அல் அசாத் தனது குடும்பத்தினருடன் விமானத்தில் நாட்டைவிட்டு வெளியேறினார்.
இந்த விமானம் சென்ற இடம் தெரியாது மர்மமாகியிருந்ததாகத் தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில், அசாத் குடும்பம், மாஸ்கோவிற்கு வந்து சேர்ந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சிரியாவினதும், அதன் பிராந்தியத்தினதும் விளைவுகள் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர மூடிய கதவு ஆலோசனைகளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.