சீனாவில் 2020 ஆமாண்டு வுஹான் நகர லாக்டவுனுக்குப் பின் அதை விட சற்று மோசமான நிலையை அங்கிருக்கும் ஷியான் நகரம் தற்போது சந்தித்து வருகின்றது.
சுமார் 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷியானில் டிசம்பர் 9 ஆம் திகதி முதல் இன்று வரை 1600 இற்கும் அதிகமானவர்கள் கோவிட் பாதிப்பு காரணமாக வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதனாலும், சீனாவின் பூச்சிய கோவிட் தொற்றுக்கள் கொள்கை மற்றும் விரைவில் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டும், ஷியானில் லாக்டவுனுடன் கடும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் கோவிட் கட்டுப்பாட்டு பொறிமுறைகளிலும், கோவிட் பரிசோதனை செயல் முறைகளிலும் சமீபத்தில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான கட்டுப்பாடுகளினால் அங்கு உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஷியான் நகரம் மனித அவலத்தில் சிக்கியுள்ளது.
சீனாவின் வடமேற்கே அமைந்துள்ள ஷியான் நகரம் அங்கு முக்கிய சுற்றுலா நகரமும் ஆகும். இந்நிலையில் சீன அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வலத்தளங்களில் கடும் விமரிசனங்களும் எழுந்துள்ளது. முக்கியமாக அத்தியாவசியமான உணவுப் பொருட்களை வாங்கவும், உரிய மருத்துவ சேவைகளையும் கூடப் பெற முடியவில்லை என சீன மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவிட் தொற்றினால் பாதிக்கப் பட்டதாக இனம் காணப் பட்டுள்ள மக்களை நள்ளிரவு நேரத்தில் சீன அதிகாரிகள் தனிமைப் படுத்துதல் முகாம்களுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதுவரை இவ்வாறு 1000 பேர் வரை கொண்டு செல்லப் பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதேவேளை உலகளவில் முதன் முறையாக இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரே நாளில் மிக அதிகபட்சமாக 10 இலட்சம் கோவிட் தொற்றுக்கள் உறுதி செய்யப் பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. கடந்த தினம் அமெரிக்காவில் கோவிட் தொற்றினால் மாத்திரம் 1825 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.