கடந்த சில வாரங்களாக ரஷ்யா உக்ரைன் எல்லையுடன் தனது படைகளைக் குவித்து வந்தது.
இதுவரை சுமார் 115 000 ரஷ்யத் துருப்புக்கள் வரை எல்லையில் குவிக்கப் பட்டிருப்பதாகவும், சமீப காலத்தில் ரஷ்யாவின் மிக அதிகபட்ச படைக் குவியல் இது என்றும் உக்ரைன் அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உக்ரைனுடன் ரஷ்யா போர் தொடுத்தால் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. மேலும் உக்ரைன் மீது போர் தொடுத்தால் கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்கும் என இவை ரஷ்யாவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளன. 2014 ஆமாண்டு உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷ்யா படை நடவடிக்கை மூலம் கைப்பற்றி இருந்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா மீது சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தியாவும், ரஷ்யாவும் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவென ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று திங்கட்கிழமை இந்தியாவுக்கு வருகை தருகின்றார். அதிபர் புடினின் வருகையின் போது இந்தியாவுடன் இராணுவம், வணிகம், முதலீடு, தொழிநுட்பம், விண்வெளி ஆகிய முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகவுள்ளன. இந்த உச்சி மாநாடு கடந்த வருடம் கோவிட் பெரும் தொற்று காரணமாக நடைபெறாத நிலையில் இவ்வருடம் தள்ளிப் போடப் பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை டெல்லியில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷாய்கு ஆகியோரும் இரு நாட்டினதும் வெளியுறவுத் துறை அமைச்சர்களான எஸ் ஜெய்சங்கர், செர்கே லவ்ரோவ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். ரஷ்ய அதிபர் புடினின் ஒரு நாள் விஜயமான இந்த இந்தியப் பயணத்தின் போது விவாதிக்கப் படக் கூடிய வெளிநாட்டு விவகாரங்களில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி குறித்த விவாதமும் முக்கியமாக உள்ளடக்கப் படும் என்றும் கருதப் படுகின்றது.